வெள்ளி, 20 மார்ச், 2026

கதம்பம் - லீவ் லெட்டர் - வடாம் - வண்ணங்களில் புரிதல் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட சில தகவல்கள்  - சதுரகிரி பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


லீவ் லெட்டர் - 11-03-2026 : 




காய்ச்சல் அடிச்சுச்சு! 

வயித்துவலியா இருந்தது! 

ஊருக்கு போயிட்டேன்! 


என்று எத்தனையோ காரணங்களைச் சொல்லி பள்ளிப்பருவத்தில் வகுப்புக்கு சென்றிருக்க மாட்டோம்!


ஆனால் லீவ் லெட்டர் எழுதச் சொன்னால் as I'm suffering from fever என்று தான் எழுதுவோம்…:) என்பது தனிக் கதை…:)


இன்று என்னுடைய வகுப்பில் நான் என்ன சொன்னேன் தெரியுமா..🙂


Namaskarah maatha! I’ll listen to the class in mute mode maatha. Preparing ilai vadaam!


இப்படி யாருமே சொல்லி இருக்க மாட்டார்கள்…:) வகுப்பில் அமைதியாக muteல் இருந்து கேட்டுக் கொள்கிறேன்! தற்சமயம் வாசிக்கவோ, பதிலளிக்கவோ இயலாது என்பதற்கு என்னுடன் பயிலும்  தோழிகள் எத்தனையோ காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள்! எந்த பள்ளியிலாவது இப்படி நிகழுமா..:))


இன்றைய வகுப்பை அட்டெண்ட் செய்து கொண்டே இலை வடாமும் தயாரித்துக் கொண்டிருந்தேன்! பாடத்தை காதால் கேட்டவாறு ஒருபுறம் வேலையும் நடந்து கொண்டிருந்தது! சட்டென்று ஏதோ ஒரு வார்த்தைக்கு பதிலளிக்க முன்வந்ததும் தோழிகள் எல்லோருமாக சேர்ந்து கொண்டு வடாம் தயாரிப்பை பற்றி விசாரிக்கவும் வீடியோவை ஆன் செய்து அவர்கள் எல்லோரிடமும் காண்பித்தேன்..🙂


வாவ்! ஆதி மாத்தா சூப்பர்! ஆனா கிளாஸை கட் பண்ண இப்படி யாரும் சொன்னதே இல்லை..🙂 என்று தோழி ஒருவர் சொல்லவும் எல்லோருமாக சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தோம்!


அன்றொரு நாள் தோழி ஒருவர் எங்கள் வகுப்பின் வாட்ஸப் க்ரூப்பில் தான் grandma ஆகியிருப்பதாக மெசேஜ் போட்டிருந்தார்! எல்லோரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம்! யோசித்துப் பார்க்கும் போது இந்த அனுபவமும் வித்தியாசமாக இருந்தது!


உண்மையில் இப்படியான இனிமையான அனுபவங்கள் பல ஆன்லைன் கல்வியில் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை! நம் நேரமும் பயனுள்ளதாக மாறுகிறது! நட்புவட்டமும் விரிகிறது! விஷய ஞானமும் கிடைக்கிறது! 


இன்றைய நாள் இனிய நாள்!


********



வடாம் - 15-03-2026 : 



வெயில் சுள்ளென்று இங்கு அடித்துக் கொண்டிருக்க.... அதை போய்  வீணாக்கலாமோ!! என்று சென்ற வார இறுதியில் நான் செய்த ஜவ்வரிசி வடாம்  மற்றும் இலை வடாம் இன்றைய சமையலில் பீர்க்கங்காய் கூட்டுக்கும் ரசம் சாதத்துக்கும் தொட்டுக்கையாக மாறியது...🙂


********


வண்ணங்களில் புரிதல் - 16-03-2026:






நேற்றைய மாலைப் பொழுதினை இனிமையாக செலவிட மலைக்கோட்டை வரை சென்றிருந்தோம்! என்னவரும், மகளும் அன்றாடம் சென்று வரும் பாதை தான் என்றாலும் நான் அங்கே ஏதேனும் வாங்க வேண்டுமென்றால் தான் செல்வது வழக்கம்! நம்ம வீட்டில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு பிறந்தநாட்கள், திருமணநாள் என்று வருவதால் அதனை யோசித்து மூவரும் கிளம்பினோம்!


அப்பா! நாம மூணு பேரும் ஆளுக்கொரு கலர் choose பண்ணிப்போம்! நாம போற வழில பார்க்கிற கலர்ஸ்ல அவங்கவங்க அந்தக் கலரை மட்டும் focus பண்ணி போட்டோஸ் எடுக்கணும்! சரியா! என்று சொல்லிக் கொண்டிருந்தாள் மகள்! கண்ணா! நான் தான் என் போனை ஹேண்ட்பேக்ல இருந்து எடுக்கறதே இல்லையே! என்று சொல்லி சிரித்தேன்…:)


எனக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள்னு basic colours மட்டும் தான தெரியும்! நீ என்னென்னவோ shades எல்லாம் சொல்லுவியேடா செல்லம் என்றார் என்னவர்..🙂 இப்படியாக துவங்கியது அந்த விளையாட்டு! நான் போட்டோஸ் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் அம்பயராக இருவருக்கும் அவரவர் வண்ணங்களில் காட்சிகளை பதிவு செய்ய உதவிக் கொண்டிருந்தேன்..🙂


மகள் தேர்வு செய்தது நீலநிறம் என்பதால் அவளுக்காக பார்த்த போது அப்போது என் கண்ணில் தென்பட்டது எல்லாமே நீல நிறமாகவே இருந்தது! அதைப் போல என்னவருக்காக வெண்மை நிறத்தையும் தேடிக் கொண்டிருந்தேன்! இதுநாள் வரை இந்தப் பாதை வழியே எத்தனையோ முறை கடந்து சென்றிருந்தாலும் இந்த நிறங்கள் என்னைக் கவர்ந்ததில்லை! நானும் அதைப் பெரிதாக கவனித்ததில்லை! என்று தான் சொல்லணும்!


அப்போது தான் ஒரு விஷயம் மனதில் விதையாக விழுந்தது! நம்மிடம் உள்ள நேர்மறையான அல்லது எதிர்மறையான சிந்தனைகளோ, குறைகளோ, சந்தேகமோ, எதுவாக இருந்தாலும் அதை நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது! குறை என்று பார்க்கத் துவங்கினால் பார்க்கும் அத்தனையும் குறைகளாகவே தெரியும்!


அதைப் போல நல்ல எண்ணத்துடன் பார்த்தால் ஒரு புள்ளி கூட நெற்றிப் பொட்டாக நல்லதாகவே தென்படும் என்பது உண்மை தானே! மாலைநேரத்தை செலவிட ஒரு விளையாட்டாக தோன்றிய வண்ணச் சேர்க்கையில் வாழ்விற்கான புரிதல் கிடைத்தது! ஒவ்வொரு நாளும் நமக்கான பாடங்களும் பாதைகளும் புரிதல்களும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது! 


கடைத்தெருவில் உலா வந்து  எங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டதும் வழமை மாறாமல் மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா கடைக்குச் சென்று ருசித்தோம்! எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும்ப்பா! என்று அடம் பிடித்த சிறுவனிடம், அப்பா உனக்கு ஜிகர்தண்டா வாங்கித் தரேன்! இதோ பாரு Aunty குடிக்கிறாங்க! என்று என்னைக் காண்பித்து சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு அப்பா…:) நம்மள வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலையே! என்று நினைத்துக் கொண்டாலும் ஜிகர்தண்டாவில் சுவையில் மூழ்கிவிட்டேன்…:)


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

20 மார்ச் 2026


2 கருத்துகள்:

  1. இலவடாம் தயாரிப்பு, அச்சமயம் வகுப்பில் ஏற்பட்ட கலகலாவும் சுவாரஸ்யம். 

    வயதோடு படித்தாலும் படிப்பு.. 
    அது வயதாகி படித்தாலும் படிப்பு...
    உலகத்தில் சிலநூறு படிப்பு.. 
    ஆனால் அறிவுக்கு ஒரு கோடி துடிப்பு..!!

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே பேஸ்புக்கிலும் படித்தேன்.  நீலநிறம் எனக்கும் பிடித்த நிறம். 

    ஏதோ ஒரு மௌன கணத்தில்
    கணவரிடமிருந்து
    மகள் பக்கம் சாய்கிறது மனம்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....