எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 24, 2013

எமதர்மராஜனும் ஞீலிவனேஸ்வரரும்

நன்றி: கூகிள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சென்ற மாதம் எழுதிய “வெங்கலக் கடைக்குள் யானை எனும் ஒரு பதிவினை முடிக்கும் போது கீழ்கண்டது போல முடித்திருந்தேன்.

மொத்தத்தில் வெங்கலக் கடையினுள் ஒரு யானைக் கும்பல் புகுந்த மாதிரி இருந்தது பேருந்தினுள்!  ”இன்னுமொரு டிக்கெட் போட்டு ஜங்ஷன் வரை போய்ட்டு வரலாமா?”-ன்னு ஒரு ஆசையும் வந்தது! :) ஆனால் வேறு ஒரு இடத்திற்குச் செல்ல நினைத்து சென்றதால் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி விட்டேன்! சென்ற இடம் என்ன? அங்கே பார்த்தது என்ன? விரைவில் வேறொரு பகிர்வில் அதைப் பற்றிச் சொல்கிறேன்!

விரைவில் எனச் சொல்லியிருந்தாலும் அந்த இடம் பற்றி இதுவரை எழுத முடியவில்லை. இன்று அந்த இடம் பற்றி பார்க்கலாம்! திருச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடம் திருப்பைஞ்சீலி.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சில நகரப் பேருந்துகள் இந்த திருப்பைஞ்சீலி வழியே செல்கின்றன. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாலை நான்கு மணிக்கு புறப்படும் நகரப் பேருந்து ஒன்றில் நான் அமர்ந்து கொண்டேன். திருப்பைஞ்சீலி வரை மட்டுமே செல்லும் என்று என்னைப் பார்த்து சொன்ன பேருந்தின் நடத்துனரிடம், “நானும் அங்கே தான் செல்லவேண்டும்எனச் சொல்லி ஒரு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டேன்.


கோவில் தேர் – கோவிலைப் போலவே இதற்கும் பராமரிப்பு அவசியம்!

இந்தப் பேருந்து ஏதோ வழி மாறி, வயலுக்குள் போகிறதோ என எண்ணும்படி தான் சென்றது. கேட்டால் – இந்த பேருந்தின் ரூட்டு இது தான் சார் என்றார் நடத்துனர். கொள்ளிடக்கரையை ஒட்டிய சிறு கிராமம் ஒன்றின் உள்ளே சென்று ஒரு வழியாக திருப்பைஞ்சீலி அடைந்தது. கோவில் வாசலிலேயே இறக்கி விட்டார் ஓட்டுனர்.  வாசலில் இருந்த ஒரு தேரினை படம் எடுத்துக் கொண்டு முன்னேற, மொட்டைக் கோபுரம் ஒன்று என்னை வரவேற்றது. அதனையும் படம் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.


மொட்டை கோபுரம்

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் பெயர் ஞீலிவனேஸ்வரர், இறைவி விசாலாட்சி.  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் பதிகம் பாடப்பெற்ற இத்தலத்தில் ஞீலி எனப்படும் ஒருவகை கல்வாழை தான் ஸ்தலவிருக்ஷம். மொட்டை கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகவும் சிதிலடைந்து உள்ளது. மொட்டை கோபுரம் கூட பராமரிப்பு இல்லாது தான் இருக்கின்றது. 


மண்டபமும் சில கிராமவாசிகளும்!

மொட்டை கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் நாலுகால் மண்டபம் ஒன்று இருக்கிறது.  இடப்பக்கத்தில் சோற்றுடை ஈஸ்வரர் சன்னதி இருக்கின்றது. இந்த சோற்றுடை ஈஸ்வரர் யார் எனப் பார்க்கலாம்.

சோற்றுடை ஈஸ்வரர்:

திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் (அப்பர்) திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  காவிரியைக்கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்தபோது அவருக்கு நல்ல பசியும் தண்ணீர் தாகமும் எடுக்க சுற்றிலும் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார். இவரது தாகத்தை உணர்ந்த சிவபெருமான் கோவிலுக்கு வருகின்ற வழியில், ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கினார். சோலையில் ஓய்வெடுத்த நாவுக்கரசர் முன் அந்தணர் ரூபத்தில் சிவபெருமான் தோன்றி அப்பரை அழைத்து, "என்னிடம் கட்டு சோறு உள்ளது. உண்டு பசியாறி செல்லலாம்' என்றார். சாப்பிட்டு பொய்கையில் நீர் அருந்தி இருவரும் நடந்தனர்.

கோவிலுக்குள் சென்றதும் அந்தணர் மாயமாக மறைந்துவிட, இறைவனே அந்தணராக வந்து தன் பசியைப் போக்கியதை உணர்ந்தார் அப்பர். "என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே' என்று அப்பர் பெருமான் மெய்யுருகிப் பதிகம் பாடினார். இந்நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அப்பர் கட்டமுது விழா திருப்பைஞ்சீலியில் நடப்பது வழக்கம். இந்நன்னாளில் சிவனை வழிபட்டால் அன்னதோஷங்கள் விலகும், வயிற்று நோய்கள் குணமாகும் என்று நம்பிக்கை.


ஃப்ரூட் சாலட் பகுதி-72 ல் சொன்ன கோவில் – இக்கோவில்.  இராவணன் வாயில் என அழைக்கப்படும் கோபுரம்

இந்த சோற்றுடை ஈஸ்வரர் சன்னதியை அடுத்து இருக்கும் இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. இதனை இராவணன் வாயில் என்றும் அழைக்கிறார்கள்.  இந்தக் கோவிலுக்குச் செல்பவர்கள் முதலில் இங்கே குடிகொண்டிருக்கும் ஞீலிவனநாதரை தரிசிக்கும் முன்னரே தரிசிக்க வேண்டிய ஒருவர் இங்கே இருக்கிறார் – அவர் எமதர்மராஜா! இக்கோபுரத்தின் வெளியே இருக்கும் சுற்றுப் பிரகாரத்தில் இடது புறமாகச் சென்றால் ஒரு குடைவரைக் கோவில் இருக்கிறது. சில படிகள் இறங்கி சற்று பள்ளத்தில் இருக்கும் கோவிலுக்குள் சென்றால் சிவன் அம்பாள் மற்றும் இடையே முருகன் அமர்ந்திருக்க, கீழே சிறுவன் வடிவில் எமதர்மராஜா அமர்ந்திருக்கிறார்.

அதன் வரலாறு என்ன என்று பார்க்கலாம். மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க எமதர்மராஜா வந்தபோது சிவபெருமான் கோபம் கொண்டு தனது காலால் உதைத்து எமதர்மராஜாவினை சம்ஹாரம் செய்துவிட, உலகில் இறப்பு இல்லாது பூமியின் பாரம் பெருகிவிட்டது. பாரம் தாங்காத பூமி பிராட்டி, சிவபெருமானிடம் முறையிட, எமதர்மராஜாவிற்கு இத்தலத்தில் உயிர் கொடுத்து, தர்மம் தவறாது நடந்து கொள்ளும்படி அறிவுரைத்து மீண்டும் அவரது பணியைத் தொடருமாறு அருள் புரிந்தாராம். 


வெளிப் பிரகாரம்

அதனால் இத்தலத்தில் முதலில் எமதர்மராஜாவினை தரிசித்து நீண்ட ஆயுள் தர வேண்டிக்கொண்டு பிரதக்ஷிணமாக வந்து கால்களை சுத்தம் செய்து கொண்டு இரண்டாம் கோபுரவாயிலான இராவணன் வாயில் வழியே கோவிலுக்குள் செல்லலாம் வாருங்கள்! இங்கே ஒன்பது படிகள் கீழிறங்கி தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். இராவணன் சபையில் ஒன்பது கிரகங்களும் அடிமையாக இருந்ததை இது குறிப்பதாகவும் சொல்கிறார் அங்கே கோவில் அலுவலகத்தில் இருந்த ஒருவர். 


பிரகாரத்தில் இருந்த மரம்!

நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதியும் இங்கே கிடையாது. ஒன்பது குழிகள் இருக்க, அவற்றில் தீபம் ஏற்றி அவற்றையே நவக்கிரகங்களாக வழிபடுகிறார்கள்.

உள்ளே எங்கிலும் கும்மிருட்டு.  ஆங்காங்கே இருக்கும் சில தீபங்கள் மூலமாகத் தான் இடத்தினையும், கோவில் சிற்பங்களையும் பார்க்க முடிகிறது. எமதர்மராஜாவிற்கு அதிகாரத்தினை மீண்டும் வழங்கியதால் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படும் ஞீலிவனநாதரை கண்ணார தரிசித்தேன். லிங்க ஸ்வரூபமாக இருந்த ஸ்வாமிக்கும், நந்தி வாகனத்திற்கும் நடுவே ஒரு சிறிய வட்ட வடிவ மேடை இருக்க, இது புதிய மாதிரி இருக்கிறதே என கோவில் அர்ச்சகரிடம் கேட்டேன்.

இது இரத்தின சபை. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்தபோது அவர் சிவபெருமானின் நடனம் காண விரும்ப, அவரது விருப்பத்திற்கிணங்கி இங்கே நடனம் புரிந்தார் என்றும், அதைக் குறிப்பதாக இந்த வட்ட வடிவ கல் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார்.பாதி புதைந்திருந்த சிற்பம் – அதன் மேல் ஒரு கல் வைத்து உட்கார வசதி செய்திருக்கிறார்கள்!

இறைவனை தரிசித்த பிறகு இறைவியை தரிசிக்க ஆயத்தமானேன். இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உண்டு. இருவரின் பெயரும் விசாலாட்சி தான்! முதல் சன்னதியில் யாருமே இல்லாது அவர் மட்டும் தன்னாட்சி புரிந்து கொண்டிருக்க, அங்கே கொஞ்சம் நேரம் அமைதியாய் நின்று அவளுடன் மனதார பேசினேன். அங்கிருந்து இரண்டாம் சன்னதிக்கு வந்தால் அங்கே நிறைய மக்கள் – கேரளத்திலிருந்து வந்திருந்தவர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க, அங்கே அர்ச்சகர் கொடுத்த குங்குமப் பிரசாதத்தினை வாங்கிக் கொண்டு திரும்பும் போது, ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார் – இங்கே படி இருக்கு, இருட்டுல தெரியல, பார்த்துப் போங்க! அவருக்கு கண்ணாலேயே நன்றி சொல்லி அங்கிருந்து வெளியே வந்தேன்.


மொட்டை கோபுரத்தில் உள்ள ஒரு சிலை

இக்கோவிலின் ஸ்தல விருக்ஷம் கல்வாழை எனப்படும் ஞீலி எனச் சொன்னேன் அல்லவா? அதற்கும் இங்கே கதை உண்டு. பார்வதி தேவி இங்கே தவம் கொள்ள விரும்பி வந்தபோது நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு, தன்னுடன் வந்திருந்த சப்தகன்னிகைகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறினார். இப்போதும் இங்கே அந்த மரங்கள் இருக்க, அவற்றிற்கு, திருமணம் ஆகாதவர்கள் பரிகாரம் செய்கிறார்கள்.


கல்யாண தீர்த்தம்

வெளிப் பிரகாரத்தில் சில தீர்த்தங்கள் இருக்கின்றன.  தீர்த்தங்கள் என்று சொன்னாலும் நான் சென்ற சமயத்தில் அங்கே சுத்தமாக தண்ணீர் இல்லாது வறண்டு கிடந்தது.  இப்படியாக தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்து இன்னும் சில புகைப்படங்களை எடுத்தேன். சிறிய கிராமம் என்பதால் சிலர் என்னைப் பார்த்து, “நீங்க பத்திரிகைக் காரரா, எங்கே இருந்து வந்திருக்கீங்க?என பல கேள்விகள் தொடுத்தார்கள் – தட்டுத் தடுமாறிய ஆங்கிலத்தில்! தமிழில் பதில் சொல்ல, “அட நீங்க தமிழ்க்காரரா, நான் ஏதோ ஹிந்திக்காரன் என நினைத்தேன் என்று சொல்ல, இங்கும் கொஞ்சம் புன்னகைத்து விடைபெற்றேன்.

சத்திரம் பேருந்து நிலையத்திற்குச் செல்ல பேருந்திற்குக் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. பேருந்து வர, அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தேன். வாகனம் வைத்துக் கொண்டு வந்தால், அருகில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திருவெள்ளரை பெருமாளையும் தரிசித்து இருக்கலாம்! அடுத்த பயணத்தில் போக வேண்டும் என நினைத்தபடியே வந்தேன்.

திருச்சி சென்றால் எம்தர்மராஜாவினையும் ஞீலிவனேஸ்வரரையும் சென்று தரிசிக்கலாமே!

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 comments:

 1. அருமையான ஆலய தரிசனம் .. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  குழந்தை வடிவில் யமன் உயிர்த்தெழும் சிற்பம் தனியாக பாதாளசந்நிதியில் அற்பூதமாக அமைந்திருக்கிறது ..

  நிறைய எலுமிச்சை மரங்களும் உண்டூ..
  ஞீலி என்னும் வாழை மரத்தின் கனிகளை பறிப்பதில்லை ..
  அவற்றை குருவிகளும் பச்சைக்கிளிகளும் கொத்தித்தின்னும் அழகு கண்கொள்ளாக்காட்சி ..!
  வித்தியாசமான ஆலயம் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. வணக்கம்
  ஐயா.
  மிக அழகாக ஆரம்பம் முதல் தொடக்கம் வரை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.அப்பருக்கு சிவன் அருளிய அற்புதங்கள். மார்க்கண்டேயன் பற்றிய தகவல். சிவன் நடனமாடிய தகவல்.கல்வாழை என்றால்என்ன என்பதற்கான விளக்கம் எல்லாம் அறியக்கிடைத்துள்ளது...வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. வணக்கம்
  ஐயா

  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ் மணத்தில் இரண்டாம் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. அருமையான ஆலய தரிசனம். நான் போய் பலவருடங்கள் ஆகி விட்டது. பார்க்க ஆசை வந்து விட்டது உங்கள பதிவை படித்தவுடன்.
  படங்கள் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 5. ஆஹா! அரிய தகவல்கள்! அறியாத் தகவல்கள்! வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 6. பாடல் பெற்ற அருமையான ஸ்தலமாக உள்ளது
  அருமையாக படங்களுடன் பதிவு செய்து
  தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. ஞீலி... பெயருக்காகவே போகலாம்.

  பார்வதி தேவி அப்படியே வந்துட்டு சப்தகன்னிகைகளை மட்டும் வாழை மரமா வரச்சொன்னது சரியானு கேட்க மாட்டாங்க... வசிஷ்டர் வந்திருந்தாரா.. .ஹிஹிஹிஹி. எப்படியெல்லாம் கட்டறாங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை....

   Delete
 9. போன வாரம்தான் என் உறவினர் ஒருவர் இக்கோவில் பற்றிச் சொன்னார்;இன்று உங்கள் விளக்கமான பதிவு.!முடியும்போது பார்க்கலாம்.நன்றி வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. நானும் இந்த கோயில் சென்று இருக்கிறேன். எந்த கோயிலுக்குப் போனாலும் அந்த கோயில் தலபுராணம் புத்தகம் வாங்குவது வழக்கம். நான் போன நேரம் , அது கிடைக்கவில்லை. அந்த குறையை உங்கள் பதிவு போக்கி விட்டது. நிறையவே விவரங்கள், படங்கள். இந்த கோயிலை பொதுவாக எமதர்மன் கோயில் என்றே சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 11. வித்தியாசமான இறைவன் பெயர். சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. படங்களோடு விளக்கங்களும் மிக அருமை. தங்களின் இந்த பதிவை படித்தவுடன், அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 13. ஆலயப்பகிர்வு அருமை. நேரில் சென்று வந்தது போன்ற நிறைவளித்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. Halo Kittu Andha Kaalaththil Baraneedharan Katturaigalai Padippadhatkendre Anandha Vikatan padippen.Ippodhu nee Ezudhukindra Bakthi Katturaigalum kitta thatta andha Nadayil Ulladhu.Migavum arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா....

   பரணீதரன் எங்கே நான் எங்கே..... எனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை!
   கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு!

   Delete
 15. நல்ல பதிவு! ஈசனைப் பற்றி அருமையான தகவலுடன் !! பரணீதரன் தந்தது போன்ற ஒரு பதிவு!!

  பகிர்தலுக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்....

   பரணீதரன் எங்கே நான் எங்கே..... எனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை!
   கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு!

   Delete
 16. உங்கள் உதவியால் திருப்பைஞ்சீலியை இங்கிருந்தே பார்த்துவிட்டேன்! இருப்பினும் நேரம் கிடைக்கும்போது எமதர்மராஜாவினையும் அருள்மிகு ஞீலிவனேஸ்வரரையும் தரிசிக்க எண்ணியுள்ளேன். பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 17. எங்களையும் ஆலயத்திற்கு அசித்துஸ் சென்ற பெருமை உங்களயே சேரும். அருமையான விளக்கங்கள், அருமையான போட்டோக்கள். ஆனால் கோவில் சிதிலமடைந்து இருப்பது வருத்தம் தான்.
  நன்றி வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. வித்தியாசமான இறைவன் பெயர். தர்சித்தோம்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....