எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 30, 2016

ஏழு முடிந்து எட்டு!இன்று செப்டம்பர் 30.....  2009-ஆம் ஆண்டின் இதே நாளில் தான் இந்த வலைப்பூவில் முதன் முதலாக எழுத ஆரம்பித்தது.  ஏழு வருடங்கள் முடிந்து எட்டாம் ஆண்டின் தொடக்கம். “சந்தித்ததும் சிந்தித்ததும்என்று தலைப்பிட்டு, “வெங்கட் நாகராஜ்என்ற பெயரில் எழுதத் துவங்கியது இதே நாளில் தான்! வலைப்பூக்களை எனக்கு அறிமுகம் செய்த, நான் எழுதுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்த என்னுடைய சித்தப்பா திரு ராகவன் கல்யாணராமன்  [ரேகா ராகவன்] அவர்களுக்கு எனது முதல் நன்றி!

இந்த ஏழு வருடங்களில் – அதாவது 30 செப்டம்பர் 2009 முதல் 29 செப்டம்பர் 2016 வரை எழுதிய மொத்த பதிவுகள் 1185.  மொத்தப் பக்கப் பார்வைகள் – இப்பதிவினை தட்டச்சு செய்யும் வரை 686514.  வந்த கருத்துரைகள், அதற்கு நான் தெரிவித்த நன்றி, பதில் சேர்த்து மொத்தம் 47371. பக்கப் பார்வைகள் என Blogger தரும் கணக்கு, பதிவு எழுத ஆரம்பித்து சில மாதங்கள் கழித்து தான், அதாவது மே 2010 முதல் தான் இருக்கிறது.  அதனால் பக்கப் பார்வைகள் 7,00,000 தொட்டிருக்கலாம்.....மொத்தம் 1185 பதிவுகள் என்று சொல்லும் போது அதிகமாகப் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள் இவை தான் என Blogger Stats தகவல் தருகிறது.  அத்தகவல்கள் கீழே...


ஏழு ஆண்டுகளில் இந்த பக்கப்பார்வைகளும் பதிவுகளும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான சமயங்களில் தினம் தினம் பதிவு எழுதுவது இயலாமல் இருந்திருக்கிறது. எழுதும் பதிவுகளுக்கு வரும் பார்வையாளர்கள் பற்றிய கவலை இதுவரை இருந்ததில்லை. ஸ்வாரஸ்யமான விஷயங்களை எழுதும் பல பதிவர்கள் இருக்கும்போது என்னுடைய பதிவுகளை இவ்வளவு பேர் படிப்பதே பெரிய விஷயம் என்று தான் தோன்றும். சில பதிவுகளுக்கு வந்திருக்கும் பக்கப் பார்வைகளைப் பார்த்தால், விவேக் நடித்த படத்தில் ஆளில்லாத டீக்கடையில் கடமை உணர்வோடு டீ ஆத்தும் சர்தார் நினைவுக்கு வருகிறார்!

தமிழ்மணம் திரட்டி மூலம் தான் என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படித்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் பதிவு வெளியிட்டவுடன் சில நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி தகவல் தெரிவித்து இருக்கிறேன். முகநூலிலும் பதிவிட்ட உடன் அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன்.  இண்ட்லி, தமிழ்10, பதிவர் திரட்டி என சில திரட்டிகளிலும் ஆரம்ப காலங்களில் பதிவுகளை இணைத்து வந்திருக்கிறேன். என்றாலும் சமீப காலங்களில் தமிழ்மணம் தவிர வேறெதிலும் இணைப்பதில்லை – திரட்டிகளும் இல்லை என்று சொல்லலாம்!

சில வருடங்களாகவே, பதிவுகளுக்கு கிடைக்கும் பக்கப்பார்வைகள், கிடைக்கும் தமிழ்மண வாக்குகள் என்பது பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை.  தமிழ்மணத்தில் எத்தனாவது இடம் என்பது பற்றியும் பெரிதாக யோசிப்பதில்லை. எழுதுவதே நமது சந்தோஷத்திற்குத்தானே... எழுதுவதன் மூலம், அதைப் படித்து நண்பர்கள் சொல்லும் கருத்துகள் அந்த சந்தோஷத்தினை இரட்டிப்பாக்கும். நமது எழுத்து யாராவது சிலருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் தானே தொடர்ந்து எழுதுகிறோம்.

எனக்கென்று ஒரு வரைமுறை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிறேன். மனச்சுரங்கத்திலிருந்து (28 பதிவுகள்), தலைநகரிலிருந்து (32 பதிவுகள்), பயணம், புகைப்படங்கள், படித்ததில் பிடித்தது, ஃப்ரூட் சாலட் (178 பதிவுகள்), ச்மையல் (36 பதிவுகள்) என வேறு வேறு தலைப்புகளில் பதிவுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதில் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.  இதுவரை சென்ற பயணங்களில் சிலவற்றை தொடராக எழுதி இருக்கிறேன். அந்த தொடர்களும் அதன் தலைப்புகளும், இணைப்புகளும் கீழே......

ஏரிகள் நகரம்21 பதிவுகள் – உத்திராகண்ட் மாநிலத்தின் நைனிதால் மற்றும் அதன் அருகே உள்ள சில இடங்களுக்குச் சென்று வந்த சுற்றுலா பற்றிய இத் தொடரினை எனது முதலாவது மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். ஏரிகள் நகரம் மின்புத்தகம் இதுவரை 9566 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளின் ஊட்டி8 பதிவுகள் – நம் தமிழகத்தின் ஏற்காடு சென்று வந்தது பற்றிய பதிவுகள்.

காசி-அலஹாபாத்16 பதிவுகள் – உத்திரப் பிரதேசத்தில் உள்ள காசி மற்றும் திரிவேணி சங்கமம் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் பற்றிய தொடர்.

சபரிமலை13 பதிவுகள் – சபரிமலை சென்று வந்தது பற்றிய பயணத் தொடர் கட்டுரைகள்.

தேவ்பூமி ஹிமாச்சல்23 பதிவுகள் – ஹிமாச்சலப் பிரதேசம் பயணக் கட்டுரைகள் – கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், உணவு என பயண அனுபவங்களின் தொடர். இன்னும் சில நாட்களில் இக்கட்டுரைகளின் தொகுப்பு எனது மூன்றாவது மின்புத்தகமாக வெளிவர இருக்கிறது.

பஞ்ச துவாரகா30 பதிவுகள் – குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஐந்து துவாரகைகள் சென்று வந்த அனுபவங்கள், பயணக் குறிப்புகள் உள்ள தொடர்.

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது27 பதிவுகள் – மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான இடங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்ததில் கிடைத்த அனுபவங்கள் உள்ள தொடர்.  இத் தொடரின் அனைத்து பகுதிகளையும் தொகுத்து WWW.FREETAMILEBOOKS.COM தளம் மூலம் எனது இரண்டாவது மின்புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதுவரை 2354 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

மஹாகும்பமேளா8 பதிவுகள் – அலஹாபாத் – திரிவேணி சங்கமத்தில் நடக்கும் மஹாகும்பமேளா சமயத்தில் அங்கே சென்று வந்த அனுபவங்களின் கட்டுரைத் தொடர்.

ரத்த பூமி10 பதிவுகள் – ஹரியானா மாநிலத்தில் இருக்கும் குருக்ஷேத்திரா சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள், பயணக் குறிப்புகள் கொண்ட தொடர்.

வைஷ்ணவ் தேவி13 பதிவுகள் – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்ரா எனும் இடம் அருகே மலைப்பகுதியில் இருக்கும் கோவில் வைஷ்ணவ் தேவி கோவில் – கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் மலையேற்றம் – நடந்தே சென்று வந்த அனுபவங்கள் கொண்ட தொடர்.

ஜபல்பூர் – பாந்தவ்கர் 12 பதிவுகள் – மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கர் வனப்பகுதிகளுக்குச் சென்று வந்த பயணம் குறித்த கட்டுரைகள்.

ஏழு சகோதரிகள்இதுவரை 54 பதிவுகள் – இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தொடரில் வட கிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வந்த பயணம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வருடத்தில் சென்ற பயணங்கள் பற்றி இன்னும் எழுதத் தொடங்கவேயில்லை! மொத்தம் மூன்று பயணங்கள்! ஏழு சகோதரிகள் தொடர் முடிந்த பிறகு அப்பயணங்கள் குறித்து எழுதும் எண்ணமுண்டு!

இந்த ஏழு வருடங்களாக என் பதிவுகளைப் படித்து, தங்களது கருத்துகளைச் சொல்லி, என்னை இன்னும் எழுதிக் கொண்டிருக்க ஊக்கமளிக்கும் அனைத்து பதிவுலக நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உறவினர்கள், மற்ற நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. சற்றே திரும்பிப் பார்க்கையில் நான் இத்தனை பதிவுகள் எழுதி இருக்கிறேன், இரண்டு மின்புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இத்தனைக்கும் காரணமாக இருக்கும் உங்கள் அன்பிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.......

என்னதான் ஃபேஸ்புக் வந்தாலும், என்னால் வலைப்பூவில் எழுதுவதை விட முடியவில்லை – ஃபேஸ்புக்-ஐ விட வலைப்பூ இன்னும் நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருக்கிறது. வலைப்பூவில் எழுதி வந்த பல நண்பர்கள் ஃபேஸ்புக்கிற்குத் தாவி ஒவ்வொரு நாளும் பத்து பதினைந்து இற்றைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் – நானும் சில நாட்கள் எழுதுகிறேன் என்றாலும், வலைப்பூவே முதல் சாய்ஸ் எனக்கு!

முடிந்த வரை எழுதலாம்... என்றைக்கு எழுதுவதற்கு தடை வருகிறதோ அதுவரை எழுதுவோம். 

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......

நன்றி கலந்த நட்புடன்

வெங்கட்

புது தில்லி......

55 comments:

 1. வலைப்பூ பிறந்ததின வாழ்த்துகள் வெங்கட். தங்கள் வலைப்பூவினூடே பல பயனுள்ள சுவாரசியமான தகவல்களை அறிந்துவருகிறேன். தங்களின் பயண அனுபவங்களைப் படித்து பல முறை வியந்ததுமுண்டு, அட்டா எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏக்கமும் அடைந்ததுண்டு.

  தங்களின் இவ்வலைப்பயணம் மேலும் தொடர என் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 2. எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் எட்டாத உயரம் தொட எமது மனப்பூர்வமான வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. மாபெரும் சாதனைதான். தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி.

  மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 4. நிச்சயமாக இது ஒரு இமாலயச் சாதனைதான்
  எட்டு ஆண்டுகள் எனினும் இன்னும்
  இளமை முறுக்குடன் சுவாரஸ்யம் குன்றாமல்
  எழுதிச் செல்லும் தங்கள் திறன் பாராட்டி மகிழத் தக்கது
  தங்கள் இணைப்பை விடாது விரும்பித் தொடரும்
  பலருள் நானும் ஒருவன் எனப் பதிவு செய்வதில்
  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
  தங்கள் வலைத்தள எழுத்துப் பணி தொடர்ந்து
  சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டில் அடி அடித்து வைத்திருக்கும் இந்நேரத்தில் உங்களைப் போன்றவர்களின் தொடர் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. வாழ்த்துகள் வெங்கட். உங்கள் பின்னூட்டத்தை நான் முதலில் பார்த்தது ஆர் வி எஸ் தளத்தில். அப்போது வெங்கட் டநாகராஜ் தலைநகரிலிருந்து என்றோ, டெல்லியிலிருந்து என்றோ இருக்கும் என்று நினைவு. தவறாக இருக்கலாம். பிறகு ஆங்காங்கே உங்கள் பின்னூட்டங்கள் கண்டு உங்கள் தளம் தேடி வந்துபி படிக்காத தொடங்கினேன். சுவாரஸ்யமான தளம் என்று கண்டுகொண்டேன். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  எங்கள் பிளாக்கில் நாங்க அடிக்கடி மேய்வது என்கிற தலைப்பில் மற்ற பிளாக் நண்பர்களின் தளங்களை போட்டு வைத்திருக்கும் பகுதியை இரண்டு நாட்களாகக் காணோம்.என்ன ஆயிற்று என்று பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய பல பதிவுகளில் உங்களுடையது தான் முதல் பின்னூட்டமாக இருக்கும்..... தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து, உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மனம் நிறைந்த நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. எனது பின்னூட்டத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

   Delete
  3. அலைபேசி மூலம் தட்டச்சு செய்யும்போது இப்படி சில பிழைகள் வந்துவிடுகிறது... :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. தங்களின் சாதனைக்கு பாராட்டுகள். உண்மையில் அரிய பணி. தங்களின் எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்கள் மூலமாக நாங்கள் பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது களப்பணிகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் முன் இந்த ஏழு ஆண்டுப் பயணம் பெரும் சாதனை அல்ல ஐயா. உங்களைப் போன்றவர்களின் தொடர் கருத்துகள் என்னை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. உங்கள் sincerity வியக்க வைக்கிறது. உங்கள் dedication அண்ணாந்து பார்க்க வைக்கிறது. உங்கள் hard work கைகுலுக்க வைக்கிறது. அன்பு நண்பர் வெங்கட் நாகராஜுக்கு என் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆரம்ப காலத்திலிருந்தே என்னைத் தொடர்ந்து கவனித்து, பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் அளித்து வரும் உங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி!

   Delete
 8. வெங்கட் உங்களது எட்டாண்டு சாதனைக்கு வாழ்த்துக்கள்..பல பதிவர்கள் வருவதும் அதன் பின் காணமல் போவதும் என்ற நிலையில் நீங்கள் தனித்து தொடர்ந்து நின்று ,அருமையான மற்றும் தரமான பல படைப்புகளை பகிர்ந்து , ஒரு ஆரோக்கியமான கூட்டத்தை உங்கள் பின்னால் தொடரச் செய்த உங்களை திறமையை பாராட்டுக்கிறேன் மேலும் இதை தொடர வாழ்த்தி பாராட்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. சாதனை என்றெல்லாம் நினைக்கவில்லை நண்பரே. கொஞ்சம் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி! உங்களைப் போன்று தொடர்ந்து ஊக்கம் தரும் நண்பர்கள் கிடைப்பதிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. தங்களின் அயரா உழைப்பிற்குத் தலைவணங்குகின்றேன்
  வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. உங்களின் வலைப்பூ பிறந்த நாள் வாழ்த்துக்கள். மனதுக்கு பிடித்ததை செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை. உங்களின் வலைப்பணி மேன்மேலும் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. மனதுக்குப் பிடித்ததை செய்யும்போது கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 11. COngrats Venkat; I noticed sometime back that you had crossed 1,000 posts; not sure whether you mentioned about your 1000th post when you reached that landmark.

  All the best ! Enjoy blogging

  ReplyDelete
  Replies
  1. ஜனவரி 12, 2016 அன்று எனது 1000-ஆவது பதிவு வெளியிட்டேன். குஜராத் பயணம் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி அது! ஆரம்பக் காலங்களில், நீங்களும் பதிவு உலகில் மும்மரமாக இருந்த நேரம் மகிழ்ச்சிகரமானது. அவ்வப்போது நீங்களும் பதிவுகள் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 13. ஏழு ஆண்டுகளாக நீங்கள் எழுதி வந்ததையெல்லாம் நான் படித்ததில்லை. ஆனால் படித்த பதிவுகள் எல்லாமே உங்களது திறமையைக் காட்டுகின்றன. விவரங்கள் சொல்லுவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை. எந்த பயணமாவது போகவேண்டும் என்று விரும்பினால் உங்கள் தளத்திற்கு வந்து படித்து விவரங்களை சேகரித்துக்கொண்டு பயணப்பட்டால், பயணம் நிச்சயம் வெற்றிதான்.

  இன்னும் நிறைய ஊர்களுக்குப் போய்விட்டு வந்து இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் போட்டு என்னைபோல நாற்காலியில் ஊர் சுற்றுபவர்களை மகிழ வைக்க வேண்டும்.

  அன்பும், ஆசிகளும்


  ReplyDelete
  Replies
  1. நாற்காலியில் ஊர் சுற்றுபவர்களை மகிழ வைக்க வேண்டும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 14. ஒரு சுவையான மகிழ்ச்சி தரும் இண்ட்ராஸ்பெக்‌ஷன் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரணமானதல்ல. அற்புதமான பயணக் கட்டுரைகளை தந்திருக்கிறீர்கள். அவை எப்போதும் படிக்கப் படும். பல்சுவையும் கலந்த பதிவுகளாக விளங்குகிறது தங்கள் வலைத் தளம். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 16. எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் மேன்மேலும் எழுத்துலகில் பதிவுலகில் சாதனைகள் செய்யவும் விரைவில் 2000 பதிவுகளைத் தொடவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 17. ஏழு ஆண்டுகள் தரமான பதிவுகளை தந்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களின் தளம் மேலும் பல ஆண்டுகள் தொடரவும்.. ஏராளமான பதிவுகள் எழுதவும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் சாதனைப் பயணம்
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 18. வாழ்த்துக்கள் அண்ணா...
  நல்ல எழுத்து தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திரு ஜே.பி. சேகர்.

   தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

   Delete
 20. எட்டாம் ஆண்டு அடி எடுத்துவைக்கும் வெங்கட்ஜி க்கு வாழ்த்துகள்!!அதுவும் மிகவும் தரமான பதிவுகள்!!! மேன்மேலும் வலையுலகிலும், எழுத்துலகிலும் சாதனைகள் பல படைத்திட எங்கள் மனமார்ந்த, அன்பான வாழ்த்துகள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 21. இப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 22. மகிழ்வான வாழ்த்துக்கள் சகோ...

  மேலும் மேலும் வளர்க! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 23. அன்பின் வெங்கட்..

  அழகான படங்களுடன் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் சுற்றுலா பதிவுகள் தனித்துவமானவை..
  பற்பல கலாச்சாரங்களையும் எளிதில் புரிந்து கொள்ள - தெரிந்து கொள்ளமுடிகின்றது..

  மேலும் பல நூறு பதிவுகளைத் தாங்கள் வழங்க வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 24. வாழ்த்துகள் ஐயா.தங்களின் எழுத்துகள் மேன்மேலும் செம்மையாக எனது வாழ்த்துகள் ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன்.நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 25. வாழ்த்துக்கள் வெங்கட். மேலும் மேலும் பல சிறப்புகளை நீங்கள் அடைய வேண்டும். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 26. வாழ்த்துகள் வெங்கட். மேன்மேலும் பதிவுலகில் உயர்ந்த இடத்தைப் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 27. வாழ்த்துகள் வெங்கட்.

  உங்களுடைய தளம் என்றால் எனக்கு நினைவு வருவது உங்களுடைய பயணக் குறிப்புகளும் ஃப்ரூட் சாலட்டும் தான்.

  எனக்கு பயணக்குறிப்புகள் படிக்க ரொம்பப் பிடிக்கும் என்றாலும், சில நேரங்களில் படிக்கத் தாமதமாவதால் தொடர்ச்சியாகப் படிக்க முடியாமல்.. என்ன படித்தோம் என்றே மறந்து விடுகிறது.

  துளசி அவர்கள் தளத்திலும் இதே போல எனக்கு ஆகி விடும்.

  வலைப்பூவில் ரசித்து எழுதுபவர்களுக்கு ஃபேஸ்புக்கை விட இதிலேயே மகிழ்ச்சி கிடைக்கும்.

  தொடர்ச்சியாக எழுதுங்கள். அளவாக எழுதினால், நீண்ட நாட்கள் எழுத முடியும்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....