சனி, 28 மார்ச், 2026

காஃபி வித் கிட்டு - 232 - கிளியே தத்தக் கிளியே - மூன்றாம் பால் - மாலையில் மதிய உணவு - Talking Drum - சொக்ரமுடி - சஞ்சீவன ஆஞ்சனேயர் - சந்திப்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த பாடல்  : கிளியே தத்தக் கிளியே…



பொதுவாக மலையாளப் படங்களில் இருக்கும் Cinematography எனக்கு மிகவும் பிடித்ததான ஒன்றாக இருக்கும். கூடவே அவர்கள் எடுக்கும் கருத்தாழமிக்க படங்களும்.  அவ்வப்போது மலையாள சினிமா பாடல்களைக் கேட்டு ரசிப்பதுண்டு.  சமீபத்தில் மகளிடம் இந்த வாரம் ரசித்த பாடலாக பகிர்ந்து கொள்ள ஏதோ ஒரு பாடல் சொல்லு என்ற போது, என்னிடம் பரிந்துரைத்தது இந்த கிளியே தத்தக் கிளியே எனும் பாடல்.  ஏதோ ARM என்கிற படத்தில் வந்த பாடல்! படம் குறித்து கேட்டதே இல்லை! பாடலும் முதல் முறைதான் கேட்டேன்.  எனக்கு பிடித்திருந்தது! உங்களுக்கும் பிடிக்கலாம் பாருங்களேன்! பாடலில் வரும் இயற்கையின் பேரழகை ரசிக்கவேனும்!


******


இந்த வாரத்தின் குறும்படம் :  மூன்றாம் பால்


கிடைத்த ஒரு நிமிடத்தில் ஒரு Message சொல்லும் விளம்பரமோ, குறும்படமோ மிகமிகக் கடினமான விஷயம்.  சொல்ல வரும் விஷயத்தினை, ஒரே நிமிடத்தில் பார்ப்பவர்களுக்குக் கடத்தும் அந்த வித்தை ஒரு சிலருக்கே சாத்தியமானதாக இருக்கிறது. அப்படி 2024-ஆம் வருடம் வெளிவந்த ஒரு குறும்படம் தான் இந்த வாரத்தின் ரசித்த குறும்படமாக உங்கள் பார்வைக்கு! உங்களில் சிலர் பார்த்திருக்கலாம்! மீண்டும் பார்க்கலாம் - தப்பில்லை! பாருங்களேன்.

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : மாலையில் மதிய உணவு


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மாலையில் மதிய உணவு - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 


ஹனிமூன் தேசம் என்ற தலைப்பில் எனது ஹிமாச்சலப் பிரதேசப் பயணம் குறித்த தொடர் ஒன்றை எழுதியபோது இதே நாளில் எழுதிய பகிர்வு. அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! 


மணாலி சென்று சேர்வதற்குள் வழியிலேயே மதிய உணவை, மாலையில் சாப்பிடலாம் என்று தீர்மானித்தோம்! பசி அப்படி! பொதுவாகவே குளிர் பிரதேசங்களில் மூன்று வேளை மட்டுமல்லாது நான்கு ஐந்து வேளை கூட சாப்பிடலாம் என்று தோன்றும் எனக்கு! காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் என்பதாலும், குளிருக்கு இதமாய் சுடச்சுட எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்! கூடவே வயிற்றைக் காயப் போடுவது நல்லதல்ல!


சாலையோர உணவகம் ஒன்றில் வண்டியை நிறுத்தினார் ஜோதி. சாப்பிடும் இடம் மேற்கூரை வேயப்பட்டிருந்தாலும், நமது பார்வையில் மலையும், அதன் மீது படர்ந்திருக்கும் பனியும், சாலை ஓரங்களில் இருக்கும் ஆப்பிள் மரங்களும் படும்படிதான் அமைந்திருந்தது அந்த உணவகம். அழகிய இடத்தில் நிறைய பூஞ்செடிகள், மரங்கள், புல்வெளிகள் என இருக்க, தூரத்தில் தெரியும் மலையும் காட்சிகளும் ரம்மியமாக இருந்தன. சப்பாத்தி, ஆலூ ஜீரா, ராய்த்தா/தயிர், Dதால் என உணவுகளைச் சொல்லி விட்டு காத்திருக்கையில், உணவகத்தின் அருகே இருந்த காட்சிகளை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.


வித்தியாசமான பூக்கள், அப்போது தான் இலைகள் துளிர்க்க ஆரம்பித்திருந்த ஆப்பிள் மரங்கள், ”ஆடூ” என்று அழைக்கப்படும் Peach பழங்களின் பூக்கள் [தமிழில் இந்தப் பழத்தின் பெயர் “குழிப்பேரி” என்று இணையத்தில் பார்த்தேன் – இதுவரை கேள்விப்பட்டதில்லை!], குபானி என அழைக்கப்படும் Apricot பழங்களின் பூக்கள் [இந்தப் பழத்திற்கு தமிழ்ப் பெயர் சருக்கரை பாதாமி! இதுவும் கேள்விப்பட்டதில்லை], வித்தியாசமான பூக்கள், செடிகள் என பலவற்றையும் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.  குழுவினரும் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பனிபடர்ந்த மலைகளில் பின்புலமாக இருக்க புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் தகவல்  : Talking Drum


Senegal மற்றும் Mali நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வித இசைக்கருவி தான் “The Tama” என்று அழைக்கப்படும் Talking Drum. இந்தக் கருவி மூலம் எழுப்பப்படும் ஓசையினை சமீபத்தில் கேட்டேன் - மூன்று நிமிட காணொளி தான்! எத்தனை விதமான ஒலிகளை எழுப்பினார்கள் அந்த இசைக் கலைஞர்கள். சுமார் 13 செ.மீ நீளமும் 7 செ.மீ. விட்டம் கொண்ட பல்லிவகைகளின் தோல் கொண்டு தயாரிக்கப்படும் இசைக்கருவி.  ஒரு சிறிய Hourglass வடிவத்தில் செய்யப்படும் இந்தக் கருவியைக் கொண்டு மனிதர்களின் பேச்சினை மிமிக்ரி செய்யவும், தகவல்களைக் கடத்தவும், கதைகளைச் சொல்லவும் பயன்படுத்துகிறார்களாம். எத்தனை எத்தனை இசைக்கருவிகள் இந்த மண்ணில்! விதம் விதமான இசையை நமக்குத் தரும் அனைவருக்கும் வாழ்த்துகள்.  “The Tama” என்று அழைக்கப்படும் Talking Drum இசையை நீங்களும் கேட்டு ரசிக்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி கேட்கலாம்!


The Tama: More Than a Drum


******


இந்த வாரத்தின் பயணக் குறிப்பு :  சொக்கர்முடி எனும் சொக்ரமுடி


கேரளாவின் மூணாறு குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம்.  அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மலைப்பகுதி தான் சொக்கர்முடி எனும் சொக்ரமுடி.  கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் இருக்கும் இந்தச் சிகரத்தில் ஆரம்ப நிலை ட்ரெக்கிங் செய்ய முடியும் என்று தெரிகிறது.  விருப்பம் இருப்பவர்கள் மேலும் தகவல்களைச் சேகரித்துக் கொள்ளலாம். இடம் குறித்த ஒரு காணொளி - மலையாளத்தில் - பார்க்க விருப்பமிருப்பின் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


Chokramudi Peak Trek | Munnar


******


இந்த வாரத்தின் ஆலயம்  - மேலூர் ஸ்ரீ சஞ்சீவன ஆஞ்சனேயர் கோவில் :


சிறியதாக ஆரம்பித்த மேலூர் ஸ்ரீ சஞ்சீவன ஆஞ்சனேயர் ஆலயத்தின் பணிகள் முடிந்து கடந்த புதன் அன்று (25.03.2026) அன்று கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.  கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், ஆரம்ப நிகழ்வான வீதி உலாவினைப் பார்க்க முடிந்தது.  கும்பாபிஷேக விசேஷங்கள் முடிந்த பிறகு ஒரு நாள் அங்கே சென்று வந்து தகவல்கள் தருகிறேன். இப்போதைக்கு நான் பார்த்த வீதி உலாவின் காட்சிகள் ஒரு காணொளியாக - கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.


Melur Sri Sanjeevana Anjaneyar Temple, Kumbabhishekam Celebrations


******


இந்த வாரத்தின் சந்திப்பு - கீதா ஜி :


சில நாட்களுக்கு முன்னரே தகவல் தந்திருந்தார் - திருவரங்கம் வரப் போகிறேன் என்று.  கடந்த திங்களன்று மாலை அவர் எங்கள் வீட்டுக்கு வர சுமார் ஒர் மணி நேரம் அளவளாவிக்கொண்டு இருந்தோம்.  அவரது Busy Schedule இலும் வீட்டிற்கு வந்து சென்ற அவருக்கு மனம் நிறைந்த நன்றி.  இது போன்ற சந்திப்புகள் அவ்வப்போது தேவையாக இருக்கிறது - தினம் தினம் ஒரே விதமாகச் செல்லும் வாழ்க்கைப் பயணத்தில் இப்படியான சந்திப்புகள் சுவைகூட்டிச் செல்கின்றன.  இந்த நாளை இனிமையாக்கிய அவருக்கு நன்றி.


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 மார்ச் 2026


24 கருத்துகள்:

  1. பாடலை நானும் ரசித்தேன்.

    மூன்றாம் பாலில் சட்டென அவன் அவரிடம் ஒரு சிறு மன்னிப்பை ஜாடையிலாவது கோரிய மாதிரி காட்டி இருக்கலாம் என்று தோன்றியது.

    பழைய பதிவு.... ஆடு தெரியும், குர்பானி தெரியும் இது ரெண்டும் புதுசு! எட்டிப்பார்க்கும் பச்சையாடைக் குழந்தை அழகு. சரவணபவன் சாம்பார் மாதிரி வாளிகளில் Dதால்!
    அந்த இசையொலியின் சத்தத்தை இப்போது கேட்க விருப்பமில்லை. பின்னர் கேட்கவேண்டும்.

    பயணக்குறிப்பும், ஆலயக்குறிப்பும் சுவாரஸ்யம்.

    கீதா ரெங்கன் சந்திப்பு - ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. நேற்றைய வாசகமும் அருமை..நேற்று சொல்ல விட்டுப் போன ஒன்று

    இன்றைய வாசகம் செம..

    மனசுக்கு அந்தப் பக்குவம் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசுக்கு பக்குவம் இருந்தால் நல்லது தான். ஆனால் பல சமயங்களில் இந்தப் பக்குவம் இருப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. மலையாளப்படங்கள் பற்றி நீங்க சொல்லியிருப்பதை நானும் அப்படியே வழி மொழிகிறேன் ஜி

    பெரும்பாலும் பாடல்களும் அப்படியே இருக்கும். ஒரு சில இப்போதைய காலத்திற்கு மாறிக் கொண்டு வந்தாலும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்தவரை அவர்கள் எடுக்கும் படங்கள் சிறப்பாகவே இருக்கின்றன. உங்களுக்கும் அதே எண்ணம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. மூன்றாம் பால் - அருமையான குறும்ப்படம். இப்பதான் பார்க்கிறேன் ஜி

    இதைப் பார்த்ததும், நான் எழுதிய குறும்புதினம் நினைவுக்கு வந்தது. பால் மாறும் சமயம் அவர்களின் வேதனைகள் திருநங்கை திருநம்பி இருவரையும் பற்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் மனதைத் தொடும் விதமாக இருந்தது. அவர்களில் சிலர் செய்யும் செயல்களால் அனைவருக்கும் பிரச்சனை இருந்தாலும் நல்லவர்களையும் இந்தச் சமூகம் தவறாகவே சித்தரிக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. மலையாளப் பாடல் இப்பதான் கேட்கிறேன் ஜி

    மிக அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்காங்க. மிகவும் ரசித்துப் பார்த்தேன் வாவ் போட வைத்த காட்சி அமைப்பு.

    பாடலும் கேட்க இதமாக நன்றாக இருக்கிறது. இப்போதைய காலத்திற்கு ஏற்ப இசையாக இருந்தாலும் கேட்க இதமாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பழைய நினைப்புடா பேராண்டி - எனக்கும் பழைய நினைப்புடி பேத்தி என்று பல நினைவுகள் மீண்டும் வந்தன. இரு முறை பயணத்திருக்கிறேன் இப்பகுதிகளுக்கு என்பதால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவித அனுபவங்கள் அதுவும் 20 வருட இடைவெளியில் இரு முறை பயணம். இப்ப இரண்டாவது முறை சென்று கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன இப்ப வாய்ப்பு கிடைத்தாலும் டக்கென்று கிளம்பிவிடுவேன் அந்த அளவு என்னை மிகவும் கட்டிப் போட்ட இமயமலைப்பகுதிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை முறை சென்று வந்தாலும் அலுக்காத இடங்கள்.....

      எப்போது முடிந்தாலும் சென்றுவரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. பழைய நினைப்புடா பேராண்டி - எனக்கும் பழைய நினைப்புடி பேத்தி என்று பல நினைவுகள் மீண்டும் வந்தன. இரு முறை பயணத்திருக்கிறேன் இப்பகுதிகளுக்கு என்பதால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவித அனுபவங்கள் அதுவும் 20 வருட இடைவெளியில் இரு முறை பயணம். இப்ப இரண்டாவது முறை சென்று கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன இப்ப வாய்ப்பு கிடைத்தாலும் டக்கென்று கிளம்பிவிடுவேன் அந்த அளவு என்னை மிகவும் கட்டிப் போட்ட இமயமலைப்பகுதிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். எனக்கும் இங்கே பயணிக்க ஆசை தணிவதே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. TAMA நம்ம ஊர் தமுக்கு போன்ற சப்தம் எழுப்புகிறது கிட்டத்தட்ட அதே போன்று ஆனால் சிறிய வடிவமாக என்று தோன்றியது. ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊர் தமக்கு போல சப்தம் - ஆம். எனக்கும் தோன்றியது. அந்த இசை ரசிக்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. மூணாறு பகுதியில் உள்ள இதுவும் நாங்கள் தவறவிட்ட ஒன்று. நேரம் இல்லாததால் என்பதாலும், பயணம் செய்த நாட்கள் அப்படி அமைந்ததாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளன....... நேரம் வாய்க்க வேண்டும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. அட! மேலூர் கிராமம் நல்ல பெரிய வீதியுடன் அழகாக இருக்கிறதே. வீதி உலா காட்சிகள் சூப்பர். ஒரு மாமி ஒரு மாமாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டு திருப்பி அழைத்துச் செல்கிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஊர்வலம் நடந்தது மேலூர் சாலைகளில் அல்ல. திருவரங்கத்தின் சித்திரை வீதி.....

      மாமாவிடம் மாமி சொன்னது....... ஒரேயடியா வெடியை வைக்கிறாங்க, காதுக்கு ஆகாது..... பின்னாடி போயிடுங்க என்பது தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. ஓ! நான் உங்களை சந்தித்ததும் பதிவாகிவிட்டதா! நன்றி ஜி. எப்படியேனும் வந்துவிட வேண்டும் என்று அவ்வளவு தூரம் வந்துவிட்டு.. ...உங்கள் மூவரையும் சந்தித்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னை மண்டபத்தில் கொண்டு விட்டதற்கு மிக்க்க நன்றி ஜி. நிஜமாகவே 1 மணி நேரம் இருந்தேனா? எனக்கே ஆச்சரியம் நேரம் போனதே தெரியவில்லை.

    மிகவும் மகிழ்வான தருணம் ஜி. எனக்கும் சந்தோஷம். கொடுத்த இரு புத்தகங்களுக்கும் மிக்க நன்றி. இனிதான் வாசிக்க வேண்டும். வேலைப் பளு. முடித்து திங்கள் கொடுத்தாக வேண்டும். அதன் பின் வாசிக்கிறேன்.

    மிக்க நன்றி ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான சந்திப்பு... நேரம் எடுத்து வந்தமைக்கு நன்றி ஜி.

      நீக்கு
  12. வாசகம் அருமை

    கிளியே தத்தக் கிளியே பாடல் அருமை, நீங்கள் சொன்னது போல பாடலில் இயற்கை காட்சிகள் அருமை.

    மூன்றாம் பால் அவர்கள் மேல் உள்ள பார்வைகள் மாறவேண்டும் .
    காணொளி அருமை.

    மேலூர்ஸ்ரீ சஞ்சீவன ஆஞ்சனேயர் பூபல்லாக்கு, கோலாட்டம், வேதபாராயணம் பார்த்தேன்.காணொளி அருமை.

    இன்று இடம் பெற்ற அனைத்தும் அருமை.
    கீதாரெங்கன் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....