வியாழன், 8 செப்டம்பர், 2016

ஜஸ்வந்த் சிங் – சேலா நூரா சகோதரிகள்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 46

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

ஜஸ்வந்த் சிங் அவர்களின் சிலை...

சென்ற பகுதியில் ஜஸ்வந்த் சிங், திரிலோக் சிங் நேகி மற்றும் கோபால் சிங் கொசைன் ஆகிய மூவர் பற்றிய தகவல்களையும் அவர்களது வீரச் செயல்களையும் பற்றி பார்த்தோம்.  இந்த மூன்று பேரும் செய்த  தியாகங்கள் பற்றி நிறைய செவிவழி செய்திகள் உண்டு. சென்ற பகுதியில் ஒரு நாள் நடந்த விஷயங்கள் பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன். ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இந்த மூன்று பேர் மட்டும் இருந்து சீன ராணுவத்தினை தடுத்து நிறுத்தியது பற்றி சொல்லவில்லை. சீன ராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றிய தளவாடங்களைக் கொண்டு சீன ராணுவத்தினர் மீது தொடர்ந்து 72 மணி நேரம் தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள் இந்த மூவரும்.

இந்த மூவருக்கும் மூன்று நாட்களுக்கு சாப்பாடு கொடுத்து உதவியது சேலா மற்றும் நூரா என்ற இரண்டு சகோதரிகள் தான். மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சீனப் படையின் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினார்கள்.  தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் உணவு கொண்டு வந்த சகோதரிகளில் ஒருவரான சேலா சீன ராணுவத்தினரிடம் சிக்கிக் கொள்ள எதிரி நாட்டு வீரர்களிடம் சிக்கிக் கொண்ட பல பெண்களைப் போலவே இவரும் சின்னாபின்னமாக்கப் பட்டார்.

சேலாவைத் துன்புறுத்தி இந்தியப் பகுதியில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் எனக் கேட்க, அவர் அத்தனை கஷ்டத்திலும் எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து துன்பத்தினை அனுபவித்தாராம். இதற்கிடையே மற்ற சகோதரியான நூராவினையும் பிடித்து உங்கள் இருவரையும் உயிரோடு விட வேண்டுமென்றால் எத்தனை இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டுமென்று சொல்ல, துன்புறுத்தலைத் தாக்குப்பிடிக்க முடியாத சகோதரிகள் மூன்றே பேர் தான் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டார்களாம்.

மூன்று பேர் மட்டுமே 72 மணி நேரம் தாக்குதல்கள் நடத்தியதைத் தெரிந்து கொண்ட சீன ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்கள் நடத்த, ஜஸ்வந்த் சிங், நேகி மற்றும் கொசைன் ஆகிய மூவரும் சீன MMG உடன் திரும்பும் போது நடந்த விஷயங்களை சென்ற பகுதியில் சொன்னது நினைவில் இருக்கலாம். முன்னேறிய சீனப் படையினர் ஜஸ்வந்த் சிங் அவர்களின் தலையைத் துண்டித்து சீனாவிற்கு எடுத்துச் சென்றதாகவும் சொல்வார்கள்.  போர் முடிந்த பிறகு அவரது தலையை திரும்பித் தந்ததாகவும் செவிவழி செய்திகள் உண்டு.

நினைவிடத்தில் தகவல் பலகை.....

சேலா மற்றும் நூரா சகோதரிகள் ஆகிய இருவரும் சீன ராணுவத்தினரிடம் இருந்து விடுபட்டு திரும்பியவுடன் தங்களால் இந்திய வீரர்களுக்கு ஆபத்து வந்து விட்டதே என்பதால் இருவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்கள் என்பதும் செவிவழிச் செய்தி தான். பல கஷ்டங்களை அனுபவித்த சேலா மற்றும் நூராவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த இடத்திற்கு சேலா பாஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது என்றும் அப்பகுதியில் ராணுவத்தினர் அமைத்த பாலத்திற்கு நூரா பாலம் என்றும் பெயர் வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

வீரச் செயல்கள் புரிந்த திரு ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு ஜஸ்வந்த் கட் எனும் இப்பகுதியில் ஒரு நினைவிடம் அமைத்திருக்கிறார்கள். அங்கே ஜஸ்வந்த் சிங் அவர்களின் தோள் அளவு சிலை ஒன்றும் வைத்திருக்கிறார்கள். சீன ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டாலும் அவருக்கும் அவருடன் உயிர் நீத்த திரு த்ரிலோக் சிங் நேகி அவர்களுக்கும் அவர்கள் உயிருடன் இருந்தால் என்னென்ன பதவி உயர்வுகள் கிடைத்திருக்குமோ அந்த பதவி உயர்வுகள் தரப்பட்டதோடு, பணி ஓய்வு பெறும் காலம் வரை முழு சம்பளமும் மற்ற சலுகைகளும் தரப்பட்டன.

ஜஸ்வந்த் சிங் அவர்களின் சிலைக்கு முன்னர்...

இன்றைக்கும் இந்த நினைவிடத்தில் திரு ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு உடை, உணவு ஆகியவற்றை அவருக்கான இடத்தில் வைக்கிறார்கள்.  இன்றைக்கும் அவருடைய ஆத்மா அப்பகுதிகளில் உலவுகிறதாக ஒரு நம்பிக்கை ராணுவ வீரர்களுக்கு இருக்கிறது. அந்தப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும், அவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், திரு ஜஸ்வந்த் சிங் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தாமல் முன்னே செல்வதில்லை.

இன்றைக்கும் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் திரு ஜஸ்வந்த் சிங் அவர்களின் ஆத்மா உலவுவதாகவும் பணி நேரத்தில் ஏதாவது வீரர் உறங்கி விட்டால் அவர்களை எழுப்பி, ஒழுங்காகவும், முயப்போடும் பணிபுரியச் சொல்வதாகவும் நம்பிக்கை இருக்கிறது.  நாங்களும் திரு ஜஸ்வந்த் சிங் அவர்களுடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். சத்தமாக ஜெய்ஹிந்த், பாரத் மாதா கி ஜெய்என்று கோஷங்களை எழுப்பியபோது மெய் சிலிர்த்தது. 

இன்னும் ஒரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். ராணுவ வீரர்களின் கடமை உணர்ச்சி பற்றிய விஷயம் தான் அது. ஜஸ்வந்த் கட் பகுதியில் இருந்த வீரர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வார்கள். அப்படி ஒரு முறை வந்தால் மூன்று மாதம் வரை அவர்களுக்கு விடுப்பு கிடைப்பதில்லை. அடர் பனிக் காலங்களில் மூன்று மாதங்கள் இங்கே தங்குவது சுலபமான விஷயமில்லை.  தண்ணீர் கூட உரைந்து விடும். நாங்கள் சென்றபோது அங்கே ஆந்திர மாநிலம், மஹாராஷ்டிர மாநிலத்தினைச் சேர்ந்த வீரர்கள் இருந்தார்கள். 

ஒரு வீரர், ஆந்திர மாநிலத்தவருக்கு வாழ்த்துகளைச் சொல்லச் சொல்ல, என்ன விஷயம் என கேட்டோம். அந்த ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி முந்தைய தினம் தான் முதல் குழந்தையைப் பெற்றாராம். தனது முதல் குழந்தையைப் பார்க்க ஆசை இருந்தாலும், மூன்று மாதங்கள் ஆகாததால் விடுமுறை கிடைக்காது - தனது குழந்தையையும் மனைவியையும் பார்க்க முடியாது. அவருக்கு எங்களது வாழ்த்துகளைச் சொல்லி, விரைவில் அவர் தனது மனைவியையும் குழந்தையையும் சந்திக்கும் நேரம் வரட்டும் என்று வாழ்த்தினோம். இப்படி ஒவ்வொரு வீரரும் ஏதோ ஒரு விதத்தில் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்..... ஆனாலும் அவர்களைப் பற்றி யாரும் உயர்வாக நினைப்பதில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.

இங்கே ஒரு சிறிய உணவகம் – ராணுவ வீரர்களுக்கான உணவகம் இருக்க, அதிலே தேநீர் தயாரித்து வெளியே வைத்திருக்கிறார்கள். அவ்வழி பயணிக்கும் எவரும் அந்த தேநீரை எடுத்துக் குடிக்கலாம் – இலவசம் தான்! பனிக்காலத்தில் சுடச்சுட அந்த தேநீர் தேவாம்ருதமாக இருக்கிறது. சமோசாக்களும் வைத்திருக்கிறார்கள் - ஐந்து ரூபாய்க்கு ஒன்று என விற்பனை செய்கிறார்கள்.  ராணுவத்தினர் இங்கே ஒரு CSD கடையும் நடத்துகிறார்கள். அதில் மூவர்ண கொடி மற்றும் Indian Army என்று பொறித்த T-Shirts, Coffee Mug, பனிக்காலத்திற்கான காலணி, குளிர்கால உடை என பலவும் கிடைக்கிறது.

நாங்களும் ஆளுக்கொரு T-Shirt வாங்கிக் கொண்டோம்.  அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று! அதை ஒன்றாய் பயன்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைத்தது! நினைவிடம் தவிர, 1962-ஆம் வருட போரின் போது இந்திய வீரர்கள் பயன்படுத்திய Bunker-களையும் பார்த்தோம். அவற்றின் உள்ளே சென்று எப்படி இருக்கும் என்பதையும், அங்கிருந்து எதிரி நாட்டு வீரர்களின் நடவடிக்கைகளை எப்படி கண்காணிப்பது, பயன்படுத்திய கருவிகள், தொலைபேசி உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்த்தோம்.  இந்தப் பயணத்தில் மறக்க முடியாத சில மணித்துளிகள் இவை.

இப்பகுதியில் நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், அவற்றை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்பதால் இங்கே கொடுக்கவில்லை. ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இங்கே வெளியிட்டு இருக்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....

28 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சி. சிலிர்ப்பு. உங்கள் பயணங்களில் இது ஒரு மறக்க முடியாத முக்கிய பயணங்களில் ஒன்றாக இருக்கும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஸ்ரீராம். மறக்க முடியாத பயணம், மறக்க முடியாத சில நிமிடங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஜெய் ஹிந்த்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  3. ஒரு கனமான படைப்புகளை இப்படி கொஞ்சம் பேருக்கென செலவு செய்து விடுகின்றீர்களோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது..
    என் போன்றோர் ஞாபக அடுக்குகளை சுரண்டி கரண்டி கொண்டு ஊற்றினால்..நீங்கள் புதிய புதிய சுவைகளை கோப்பைகளில் பருகத்தருகின்றீர்கள்..
    வலைப்பூ தாண்டி..புத்தக வடிவில் விரைவில் உங்கள் எழுத்துகள் உங்களைப்போலவே உலக உலா வரவேண்டும் என்பதே என் அவா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ தாண்டி புத்தக வடிவில் என் எழுத்துகள்..... உங்கள் ஆசை எனக்கும் உண்டு என்றாலும் புத்தக வடிவில் வெளியிடுவதில், எனக்கு சில சிக்கல்கள் உண்டு.

      மின்புத்தகங்கள் இதுவரை இரண்டு வெளிவந்திருக்கிறது. மூன்றாவது விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்.

      உங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த வருகையும் கருத்துப் பகிர்வுக்கும் மேலும் என்னை மெருகேற்றும்.

      உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      நீக்கு
  4. இரண்டும் வெகு முக்கிய பதிவுகள். நிறைய பேர் எண்ணெயாக இருந்து பிறர் காண இயலாமல் மறைந்துபோகிறார்கள். சிலர் திரியாக இருந்து பிரகாசிக்க உதவி மறைகின்றனர். சிலர் தீபமாகப் பிரகாசித்துப் பலர் அறிய மிளிர்கின்றனர். பலர் அந்த வெளிச்சத்தில் சுகமாக இருக்கின்றனர். தீபம் இருப்பதால்தான் வாழ்க்கை வெளிச்சமாக இருக்கிறது என்பதை மறந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போல எத்தனை எத்தனை பேர். ஆனாலும் அவர்கள் இல்லையேல் நாம் இல்லை என்பது புரிந்து கொள்ளாதவர்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. சேலா பாஸ் ,பெயர்க் காரணம் அறிந்த போது மெய் சிலிர்த்தது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. நினைத்துப்பார்க்காத நிலையிலான பல இடங்களுக்கு அழைத்துச்செல்கின்றீர்கள். அவ்வகையில் இப்போது தியாகசீலர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு எங்களது வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. வணக்கம் தோழர்
    இந்த தொடர் எப்போது மின் நூலாகும் ?
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் மின்னூலாக்க வேண்டிய பதிவுகள் நிறையவே உண்டு. விரைவில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  8. கண் கலங்க வைத்த பதிவு..எத்தனை தியாகங்கள்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

      நீக்கு
  9. வீரர்களின் தியாகம் நெகிழவைத்தது. அவர்களுக்கு உதவிய இரண்டு சகோதரிகளின் தியாகமும் நிகரற்றது. அருமையான பதிவினை தந்த தங்களுக்கு நன்றி!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  10. கண்ணீர் வர வைச்ச பதிவுகள். உங்கள் அனுபவங்கள் மிகச் சிறப்பானவை, ஆச்சரியமானவையும் கூட! பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணம் முழுவதிலும் இப்படி சில அனுபவங்கள்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. நீங்கள் வீரவணக்கம் செய்யும் புகைபடம் அருமை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  12. இராணுவத்தினரின் கடமை உணர்வு சிலிர்ப்பூட்டியது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. நல்ல பயணம்...
    அந்த ஆந்திர ராணுவ வீரருக்கும எனது வாழ்த்தும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  14. உங்கள் வரிகளே சிலிர்க்க வைத்துவிட்டது! வீரர்களுக்காக மனம் பிரார்த்திக்கவும் செய்தது. நெகிழ்ந்து விட்டது அந்த ஆந்திர வீரரை நினைத்து.

    இப்படியான இடங்களைக் காண்பது என்ன ஒரு தருணம் இல்லையா வெங்கட் ஜி! மறக்க முடியாத தருணம். அத்தனை உயரத்திலும் டீக் கடை சமோசாக்கள்!! எவ்வளவு கஷ்டம் இல்லையா பொருட்கள் கொண்டு செல்வது என்பது...வியப்பும்...நெகிழ்வும் ஒரு சேர...

    தொடர்ங்கின்றோம் ஜி..

    பதிலளிநீக்கு
  15. மறக்க முடியாத ஒரு அனுபவம் தான். அந்தத் தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும்.

    டீக்கடை அல்ல. ராணுவ வீரர்கள் வைத்திருக்கும் ஒரு சேவை.... டீ இலவசம். சமோசாவிற்கு மட்டும் விலை!

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....