அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பகுதி மூன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்… நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்… சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்… மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்… இது தான் பலரது வாழ்க்கை!
******
கேதார் தால் மலையேற்றம் குறித்து, நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களது அனுபவங்களின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளை நீங்கள் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த நாளில் தொடரின் நான்காம் பகுதி! அவரது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்த நண்பர் ப்ரேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி - ஓவர் டு ப்ரேம் ஜி!
******
நான்காம் நாள் - போஜ் கரக் - கேதார் கரக் (5 கிலோ மீட்டர்) - மலையேற்றம்
எங்கள் பயணத்தின் நான்காம் நாள், நாங்கள் அதிகாலையில் எழுந்து விட்டோம். ஆனால் அன்றைய தினம் எங்கள் பயணத்தினை தொடர்ந்து மேற்கொள்வதில் ஒரு சிறு சிக்கல் உண்டானது. நாங்கள் எங்களுடன் கொண்டு சென்றிருந்த அடுப்பு வேலை செய்யவில்லை. அதனால் காலை உணவு சமைப்பதில் தடங்கல்! உணவில்லாமல் பயணிக்க முடியாது என்பதால் இந்தச் சிக்கல், எங்கள் மேல்நோக்கிய பயணத்தை தாமதப்படுத்தியது. ஆனால் மேற்கு வங்கத்திலிருந்து வந்திருந்த, சென்ற பகுதியில் குறிப்பிட்ட மலையேற்றக் குழு, அந்த நாளில் கங்கோத்ரி நோக்கி பயணப்பட இருந்ததால், அவர்கள் வைத்திருந்த அடுப்பினை எங்களுக்குத் தர சம்மதித்தனர் - ஒரு சிறு தொகையை பெற்றுக் கொண்ட பிறகு தான்! அந்த நேரத்தில் அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அங்கே தேநீர் மற்றும் சூப் அருந்திய பிறகு எங்கள் கூடாரங்களை மடித்து மற்றும் பைகளை தயார் செய்து, எங்கள் அடுத்த இலக்கான கேதார் கரக் (Kedar Kharak) நோக்கி காலை 8.00 மணியளவில் புறப்பட்டோம்.
Bபோஜ் மரங்கள் அர்ந்த பாதை வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆரம்ப மலையேற்றத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு புல்வெளிப் பிரதேசத்தை வந்தடைந்தோம். மழை இல்லாத காரணத்தால் புல்வெளி வறண்டே இருந்தது. அந்தப் பகுதிக்குப் பிறகு மரங்களற்ற மலைப்பகுதிகள் வழியே எங்கள் மலையேற்றம் தொடர்ந்தது. அந்தப் பகுதியிலிருந்து எங்களால் கம்பீரமான பனி மூடிய பிருகுபந்த் (Bhrigupant) சிகரத்தை பின்னணியில் காணமுடிந்தது. அந்த மலைச் சிகரத்தின் அடிப்பகுதியில் தான் எங்களின் இறுதி இலக்கான புகழ்பெற்ற கேதார் ஏரி (Kedar Taal) அமைந்துள்ளது.
வழியில் சில நீர் நிலைகளைக் கடந்த பிறகு சேறும் சகதியுமாக இருந்த நிலப் பகுதி வழியே செங்குத்தான பாதையில் கீழ் நோக்கிய எங்கள் பயணத்தினை தொடங்கினோம். மிகவும் சிரமமான மற்றும் ஆபத்தான பாதையாக இருந்தது. கொஞ்சம் தடுமாறினாலும், அந்தப் பாதையில் வழுக்கி கீழே உறைந்த நிலையில் இருக்கும் கேதார் ஏரிப் பகுதியில் விழுந்து விட வாய்ப்பு இருந்தது. அங்கிருந்து பார்க்கக் கிடைத்த கேதார் ஏரி பிரமிக்க வைக்கும் அழகுடன் இருந்தது. அழகான ஆபத்து என்று கூட சொல்லலாம்!
2013-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் உத்திராகண்ட் மாநிலத்தின் Gகட்வால் (Garhwal) பகுதியில் ஏற்பட்ட அதீத மழை காரணமாக ஏற்பட்ட பேரழிவின் முன்னர் கேதார் கரக் மலையேற்றம் கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. ஆனால் அந்த அதீத மழையின் பேரழவிற்குப் பிறகு மலையேற்றம் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் மாறிவிட்டது. ஆனாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் உறைந்து கிடந்த கேதார் கங்காவின் வழியில் பயணித்து எங்களால் எங்கள் இலக்கினை நோக்கி முன்னேற முடிந்தது. கொஞ்சம் தவறினாலும் எங்களுக்கு நிறைய தொல்லைகள் வந்திருக்கும் என்பதை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்துப் போகிறது.
இந்த இடங்களில் கேதார் கங்கா ஏரியைக் கடப்பதோடு, பெரிய பெரிய பாறைகளின் மீதும் ஏறி அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்தப் பெரிய பாறைகளின் மீது பனி அடர்ந்து படந்திருப்பது இன்னும் அதிகமான ஆபத்தை உண்டாக்கக் கூடியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது மேலே உள்ள மலைச் சிகரங்களில் நிறைய மண்ணும் கற்களும் கலந்து இருக்க, அவற்றின் மீது கால் பதித்துச் செல்லும் Bபரல் என உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் விலங்கினங்கள் நடக்கும்போது பாறைகளும் மண்ணும் கலந்து கீழே விழ, அவை நம் மீது விழுந்து விடாமல் கடப்பது சவாலான விஷயமாக இருந்தது. ஆனாலும் இன்றைய நாளின் முதல் ஒரு மணி நேர மலை ஏற்றம் மற்றும் நாங்கள் எதிர்கொண்ட ஆபத்தான தளர்வான சேற்று நிலப்பரப்பு ஆகியவை தவிர, முந்தைய நாள் போஜ் கரக் மலையேற்றத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய கேதார் கரக் மலையேற்றம் எளிதானது என்றே சொல்ல வேண்டும்.
மதியம் 12.00 மணிக்கு நாங்கள் எங்கள் இலக்கை அடைந்து, அருகில் தண்ணீர் கிடைக்கும் இடத்தினைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினம் தங்குவதற்கு எங்கள் முகாமை அமைத்தோம். நாங்கள் மதிய உணவுக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது, அருகில் ஒரு Bபரல் மந்தையை நாங்கள் பார்க்க முடிந்தது. அவை எங்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தை பராமரித்தன. சுமார் மூன்று மணி நேரம் வரை அங்கேயே இருந்தன. எங்கள் இருப்பினை அவை கண்டுகொள்ளதாகத் தெரியவில்லை - ஒருவேளை அவை எங்களிடையே பாதுகாப்பாக உணர்ந்திருக்கலாம் அல்லது நாங்கள் ஏதேனும் உணவு தருவோம் என்று நினைத்ததோ - அவையே அறியும்! எந்த பயமுமின்றி அவை அங்கே சுற்றிக் கொண்டிருக்க, அவற்றை எங்கள் கேமராக்கள் மூலம் அவற்றின் படங்களை எடுத்துக் கொள்ள போதிய அவகாசம் எங்களுக்குக் கிடைத்தது.
மாலை நெருங்க நெருங்க தட்பவெப்பம் குறைந்து குளிர் காற்று அடிக்க, நாங்கள் எங்கள் தலைக்கு குரங்கு தொப்பியை அணிந்து கொண்டோம். பிறகு நாங்கள் காய்கறி சூப் / தேநீர் போன்ற திரவ உணவை உண்டு இரவு தூக்கத்திற்காக நாங்கள் அமைத்த கூடாரத்தில் நுழைந்து உறங்கினோம். அடுத்த நாள் எப்படி இருந்தது, என்ன செய்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து மலையேற்றத்தில் எங்களுடன் வருவதற்கு வேண்டுகிறேன்.
ப்ரேம் Bபிஷ்ட்
******
நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
அடுப்பு ரிப்பேரானது சோகம். உடனே மாற்று கிடைத்ததும் மகிழ்ச்சி. அழகான எல்லாமே ஆபத்துதானோ! உண்மையிலேயே ஆபத்தான இடம். இரவு உறக்கத்திலும் குளிர் இடைஞ்ஜலாய் இல்லையா? பரல் மான் கூட்டம் போலுள்ளது. நல்லவேளை அவை ஆபத்தான மிருகங்கள் இல்லை.
பதிலளிநீக்குபயணத்தில் இப்படியாவது கொஞ்சம் தடங்கல் என்றாலும் உடனடி தீர்வும் கிடைத்து விட்டது நிம்மதி தான். ஆபத்தான மிருகங்கள் எனில் பயம் தான்.
நீக்குபதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பயணம் ரசிக்கும்படி இருக்கிறது. தொடர்ந்து படிக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் பயணம் முடிந்து ஊர் திரும்பி விட்டீர்களா நெல்லைத் தமிழன்? இந்தப் பயணத்தை தொடர்வதற்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இவர் எழுதியிருக்கும் இடங்களுக்கெல்லாம் என்னால் செல்ல இயலாது. என் மச்சினனுக்கு இதிலெல்லாம் ஆர்வம் உண்டு. அவனைப் படிக்கும்படிச் சொல்லியிருக்கிறேன்.
நீக்குஎன் பயணம் இனிதே, ஜலதோஷம் இருமலுடன் நிறைவுற்றது. நேற்று பரிசோதித்து பிரச்சனை இல்லை என்று தெரிந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். இந்தத் தடவை பிர்லா மந்திர் சேவித்தபோது உங்களை நினைத்துக்கொண்டேன்.
பதிவினை உங்கள் மச்சினர் உடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் பயணம் இனிதே முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
மாற்று அடுப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தொடர்ந்து வருகிறேன் ஜி...
பதிலளிநீக்குமாற்று அடுப்பு கிடைக்காமல் போயிருந்தால் மிகவும் சிரமமாகவே இருந்திருக்கும் கில்லர்ஜி. நல்லவேளை கிடைத்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வித்தியாசமான அனுபவங்கள் ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுபிரேம் ஜி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபயண அனுபவம் அருமை.
கஷ்டங்களை சகித்து பயணத்தை தொடரும் மன உறுதியும் இருந்தால் தான் அழகை ரசிக்க முடியும்.
அழகான படங்கள்.
உறைந்து கிடக்கும் கேதார் கங்காவை நாங்களும் டோலியில் போகும் போது நிறைய் படம் எடுத்து வைத்து இருக்கிறோம்.
வாசகமும் பதிவின் மூலம் பகிர்ந்து கொண்ட தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததாக இருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. உங்கள் அனுபவங்களையும் சொன்னதற்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
ஆமாம் பயணத்தில் இப்படிச் சில தடங்கல்கள் வர வாய்ப்புண்டு நல்ல வேளை அந்தக் குழுவினர் அந்தச் சமயத்தில் அங்கு இருந்தது லக் தான் எப்படியோ அவர்களும் தங்கள் அடுப்பை விலைக்கேனும் தரச் சம்மதித்தது நல்ல விஷயம்.
பதிலளிநீக்குஇல்லை என்றால் வேறு என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்தேன்...அருகில் சுள்ளிகள் இருந்தால் விறகு அடுப்பு போலச் செய்து இருக்க நேரிட்டிருக்குமோ? அப்படிச் செய்ய அனுமதி உண்டா அங்கு? ஏனென்றால் காய்ந்த புற்ககள் இலைகள் இல்லையா அதனால்.
பனி பொழியும் பிரதேசம் என்பதால் வறண்டுதான் இருக்கும் என்று தோன்றுகிறது ஜி. ஹிமாச்சலில் கூட ரோதாங்க் பாஸ் பகுதி அதன் பின்னான பகுதிகள் இப்படிக் கருப்பாகப் பார்த்த நினைவு. வெயிலும் சுரீர் என்றிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பனி மூடிய பிருகுபந்த் சிகரம் ஆஹா என்ன அழகு! கம்பீரம் தான்.
கேதார் க்ங்கா ஏரி வாவ்! அழகு...ஆம் ஆபத்தும் தான்
கீதா
பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குஅழகான ஆபத்து.... என்பது நிதர்சனம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் தோன்ன்றும். இப்படியான உறை பனி மீது நடக்கும் போது, புதை குழி போல எங்கேனும் பனி உடைந்து நீருக்குள் போகும் அபாயம் உண்டா என்று. பாறைகளின் மீது என்றால் ஓகே ஆனால் நீரின் மீதான உறை பனி மீது. ஏனென்றால் ஒரு முறை ரோத்தாங்க் பாஸில் முன்னராகவே நிறைய உறைந்திருந்தது போகும் வழியிலேயே. முதன் முறை சென்ற போது. நானும் மகனும் கொஞ்சம் தூரம் நடந்தோம் மகனுக்கும் ஸ்லெட்ஜில் செல்ல ஆசைப்பட்டதால் அதிலும் ஏற்றி நான் அவனை தள்ளிக் கொண்டு சென்ற போது ஓரிடத்தில் ஜவான்கள் இருந்தார்கள். ஜவான் ஒருவர் இதற்கு மேல் செல்லக் கூடாது என்று சொல்லி, அடியில் நீர் இருக்கு என்று சொன்னார்..நதிப் பகுதியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்..
பதிலளிநீக்குகீதா
உறைந்து இருக்கும் பனி மீது நடப்பது கொஞ்சம் அல்ல அதிகமான ஆபத்து, குறிப்பாக உறைந்து கிடக்கும் நீர் நிலை என்றால் ஆபத்து அதிகமே கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை. ஆம் உண்மைதான்
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குசெம பயணம் ஜி. உங்கள் நண்பர் மிகவும் ரசித்துச் சொல்வதை நீங்களும் அழகாக மொழி பெயர்த்து ரசனையுடன் (நீங்களும் பயணக் காதலர் சொல்ல வேண்டுமா!!) சொல்வது வாசிக்கும் போது சுவாரசியமாகவும் இருக்கு. மன உறுதி இருந்தால் கண்டிப்பாகச் சமாளித்து, ரசித்துக் கொண்டே ஏறிவிடலாம்.
பதிலளிநீக்குகீதா
மன உறுதியோடு தேவையான உபகரணங்களும் இருந்தால் இது போன்ற பயணங்கள் செல்ல முடியும் கீதா ஜி. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அற்புதமான பயணம். உங்கள் நண்பருடன் நானும் மலையேறி ஒவ்வொரு பகுதியையும் நண்பரின் படங்கள் வாயிலாகவும், அவரது அனுபவங்களை உங்களின் வரிகள் வாயிலாகவும் ரசிக்கின்றேன்.
பதிலளிநீக்குபயணத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாம் பயணம் முடிந்த பின் ஒன்றுமே இல்லை என்பதாக இருந்திருக்கும். அப்படியான பயணம் இது. அதே சமயம் பயணத்தில் உள்ள கஷ்டங்கள் ஆபத்துகள் அதன் பின் அது ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தாலும் அதை எல்லாம் கடந்து அற்புதமான இடத்தைப் பார்க்கவும் உணரவும் தரிசிக்கவும் பாக்கியம் கிடைத்ததே என்று பூரிப்பாக இருந்திருக்கும்.
துளசிதரன்
பயணத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாம் பயணம் முடிந்த பின் ஒன்றுமே இல்லாததுபோல் தோன்றும் என்பது உண்மைதான் துளசிதரன் ஜி. அந்த நேரத்தில் அனுபவிக்கும் பிரச்சனைகளை சமாளித்துவிட்டால் எல்லாம் நலமே.
நீக்குதங்களின் வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அழகிய இடங்கள் ஆபத்தான பயணம்.பனியில் உறைந்து சிலிர்க வைக்கும் கேதார் ஏரி படங்கள் அழகு.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குகாட்டு மிருகம் எனக் கவலையாக இருந்தாலும் பார்க்க மான்கள் போலவே இருக்கின்றன. ஆபத்தான பயணத்தைத் துணிந்து மேற்கொண்டு வரும் நண்பர்களின் மனோதைரியம் சிறப்பாகத் தொடரட்டும். கேதார் தால் ஏரியின் உறைநிலையும் அச்சம் ஊட்டுவதாகவே இருக்கிறது. மேலே இருந்து கீழே விழுந்துட்டால்? நமக்குத் தான் இப்படி எல்லாம் தோணுமே! :(
பதிலளிநீக்குஆபத்தான பயணம் என்றாலும், ஈடுபாடும், ஆர்வமும் இருந்து விட்டால் இம்மாதிரியான பயணங்கள் சாத்தியம் தான் கீதாம்மா. கீழே விழுந்தால் - காயம் ஏற்படுவதோடு, வேறு பிரச்சனைகளும் உருவாகலாம் தான். ஆனாலும் ஆர்வம் இருந்தால் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.