சனி, 2 ஆகஸ்ட், 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதிமூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினொன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பன்னிரெண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதிமூன்று


Ambassador Idly:



சென்ற பகுதியில் கோவை ஸ்ரீ அன்னபூர்ணாவில் உணவருந்தியதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன்! உணவருந்தி விட்டு வெளியே வந்து ரெட் டாக்ஸி புக் செய்து விட்டு காத்திருந்தோம்! கோவையில் இப்போது பெருகி போய்விட்ட வாகனங்களும் அதனால் ஏற்படும் வாகன நெரிசலுமாகத் தான் காணப்படுகிறது! அந்த டிரைவர் சிறிது தொலைவிலேயே இருந்தாலும் வருவதற்கு சற்று நேரம் ஆனது!


அதற்குள் சாலையின் எதிர்ப்புறம் எங்கள் கண்கள் சென்றன! மாபெரும் புத்தக கண்காட்சி ஒன்று போடப்பட்டிருந்தது! புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள எங்கள் மூவருக்குமே அங்கு சென்று பார்வையிடலாமே என்று தான் தோன்றியது! ஆனால் எங்கள் உடமைகள் வேறு இருக்கின்றதே! அதுவும் போக தங்குமிடத்துக்குச் சென்றதும் நாங்கள் மாலை நடைபெறப் போகும் ரிசப்ஷனில் வேறு கலந்து கொள்ளத் தயாராக வேண்டும்! என்ற எண்ணங்களும் உடன் வரவே அங்கேயே நின்றுவிட்டோம்!


இந்த மேம்பாலம் எல்லாம் அப்போ கிடையாது! இங்க தான் சம்மர் லீவில எக்ஸிபிஷன் போடுவாங்க! சூப்பரா இருக்கும்! த்ரில்லிங்கான விஷயங்கள் நிறைய இருக்கும்! இந்தப் பக்கம் போனா ‘ராம்நகர்’! ‘தாரகராம்’னு ஒரு ஜவுளிக்கடை வரும்! அதைத் தாண்டி போனா Johnson tiles ஷோரூம் இருக்கும்! அதுல நான் வொர்க் பண்ணியிருக்கேன்! என்று சில விஷயங்களை மகளிடமும் என்னவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன்! 


அந்த நேரம் மனதில் சில நிழலான காட்சிகளும், கதைகளும் பசுமையான நினைவுகளுமாக ஓடிக் கொண்டிருந்தது! என்னுடைய ஊரை விட்டு பிரிந்து வருடங்கள் பல கடந்து விட்டது! அன்னபூர்ணாவில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சட்டென்று Ambassador idly என்று எப்படி எனக்குத் தோன்றியது!!? வாழ்க்கைப் பாதை என்னை எப்படி கொண்டு சென்றாலும் நான் என் நிலையிலிருந்து மாறவில்லை என்பதை உணர்ந்தேன்!


எங்களுடைய ரெட் டாக்ஸியும் வந்துவிடவே நாங்களும் அதில் பயணித்து தங்குமிடம் வந்து சேர்ந்தோம்! அங்கிருந்த உறவினர்களை பார்த்து நலம் விசாரித்த பின் ரிசப்ஷனுக்குத் தயாராகிச் சென்றோம்! அங்கும் நிறைய உறவினர்களை பார்த்து பேசி மகிழ்ந்தோம்! இதுபோன்ற திருமணங்களில் நாங்கள் கலந்து கொள்வது மிகவும் அரிது! ஒவ்வொரு முறையும் வீட்டுச்சூழல் எனும் சங்கிலியால் எங்களை பிணைத்துக் கொண்டு விடுகிறோம்! அதைச் சரியாக புரிந்து கொள்வோர் சிலரே!


இரவு உணவு பஃபே முறையில் சிறப்பாக பரிமாறப்பட்டது! நாங்கள் மாலையில் சாப்பிட்ட உணவே வயிற்றில் நிரம்பி இருக்கவே இரவு உணவை பெயருக்கு சிறிதளவு மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் தங்குமிடம் திரும்பி விட்டோம்! அதிகாலையில் முகூர்த்தம்! கோத்தகிரியில் பார்க், தேநீர் உலா, வ்யூ பாயிண்ட் என்று நன்கு சுற்றி விட்டு அங்கேயிருந்து பேருந்தில் பயணித்து வந்தது, இங்கு ரிசப்ஷனில் கலந்து கொண்டு உறவினர்களோடு பேசி மகிழ்ந்தது என்று அன்றைய நாள் முழுவதும் நிறைய இனிய நிகழ்வுகளாக இருந்தது! உடலும் ஓய்வு எடுத்துக் கொள்ளக் கெஞ்சியது! அடுத்த நாள் சில ஆத்மார்த்தமான நட்புகளை சந்திக்க நினைத்திருந்தோம்! அந்த நினைவுகள் கீழே…


Tapovan:



உறவினர் திருமண ரிசப்ஷனில் கலந்து கொண்டதைப் பற்றி சொல்லியிருந்தேன்! மறுநாள் அதிகாலை முகூர்த்தம்! இப்போதெல்லாம் விடியற்காலையில் முகூர்த்தம் என்பது போல வழக்கமாகி விட்டதா?? ஏனென்றால் நாங்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் ஆகட்டும், அதன் பின்பு கேள்விப்படுகிற திருமணங்கள் ஆகட்டும், ஏன்! இன்று டெல்லியில் நடைபெற்ற என்னவரின் நண்பர் மகள் திருமணம் ஆகட்டும் எல்லாமே அதிகாலையில் தான்!!? எங்கள் திருமணம் 7:30 - 9 முகூர்த்தத்தில் தான் நடைபெற்றதாக நினைவு..🙂


காலையில் நாங்கள் தயாராகி மண்டபத்திற்கு செல்வதற்குள் திருமணமே முடிந்து விட்டது! அங்கிருந்த உறவினர்களை பார்த்து பேசி விட்டு, மணமக்களிடம் எங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கச் சென்றோம்! பின்பு என்ன! காலைச் சிற்றுண்டி தான்! இட்லி வடை, பூரி கிழங்கு, பொங்கல் சாம்பார், ஊத்தாப்பம் சட்னி, குழிப்பணியாரம் என்று நிறைய மெனுக்களால்  இலையும் சரி! வயிறும் சரி! நிறைந்து விட்டது!


அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் தான் இந்தப் பகுதியின் தலைப்பு! டெல்லியில் எங்கள் பகுதியில் வசித்த என்னவருக்கு ரொம்ப வருடங்களாக பழக்கமான நண்பர்கள் கோவையில் நாங்கள் சென்ற திருமண மண்டபத்திலிருந்து 6 கிமீ தூரத்தில் ‘மாதம்பட்டி’ என்ற பகுதியில் இருப்பதாக தெரிய வந்தது! அடுத்ததாக அவர்களை பார்த்து விட்டு வரலாம் என்று தான் சென்றிருந்தோம்! அவர்களிடம் பேசியதில் அவர்களே காரில் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக திட்டம்!


YouTube உபயத்தால் ‘மாதம்பட்டி ரங்கராஜ்’ என்பவரைப் பற்றி தெரிந்ததால் மாதம்பட்டி என்ற பெயரும் பரிச்சயமாகி இருந்தது! அதில் ‘குப்பனூர்’ என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ‘Tapovan seniors retirement community’! இருபுறமும் நெருக்கமான வாழையும், தென்னையும் கைக்கோர்த்த தோப்பின் நடுவே செல்லும் மண்சாலையில் பயணிக்கிறது எங்கள் கார்! அருமையான அனுபவமாக இருந்தது! இதை எழுதும் போது கூட அந்த அழகான  பாதை மனதில் நிழலாடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


Tapovan என்ற பதாகையைக் கடந்து உள்ளே செல்லும் பாதையில் மயில் தன் தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது! எங்களை அழைத்து வந்த அண்ணா மகிழ்வுடன் தங்கள் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்! அவரிடம் நலம் விசாரித்து டெல்லி விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்! அவர்களுக்கும் கோவை தான் பூர்வீகம்! பாப்பநாயக்கன் பாளையம்! நான் திருமணமாகி டெல்லி சென்ற பின் என்னிடம் அவர்கள் வீட்டில் இருந்த பாட்டி முதல் அனைவருக்கும் ப்ரியம் அதிகம்! எங்க ஊரு பொண்ணுப்பா! என்று என்னவரிடத்தில் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்! எப்போது சென்றாலும் சாப்பிடாமல் அனுப்பியதில்லை!


அண்ணாவிடம் பேசியதில், இந்தக் குடியிருப்பில் சீனியர் சிட்டிசன்ஸ்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாங்கான வீடுகள் வரிசையாக உள்ளன! 2bhk, 1bhk என்று அமைக்கப்பட்ட இந்த வீடுகளில் எல்லாவித வசதிகளும் செய்யப்பட்டுள்ளது! இது போக கோவில், Centralised kitchen, medical facilities என்று சில விஷயங்களும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது! நம் வீட்டிலும் சமைத்துக் கொள்ளலாம்! Centralised kitchen-லும் வாங்கி வரலாம்! இல்லையென்றால் அங்கு போய் அமர்ந்தும் நண்பர்களோடு பேசிக் கொண்டும் சாப்பிடலாம்! என்று நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்!


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

2 ஆகஸ்ட் 2025


3 கருத்துகள்:

  1. ஒரு பொருளை இழக்கும் வரை அந்தப்பொருளின் மதிப்பு தெரிவதில்லை.  

    எதிரிலேயே புத்தகக் கண்காட்சி கண்ணில் பட்டும் போகமுடியாத நிலை சோகம்தான்!

    மாதம்பட்டி பேமஸ் ஆச்சே...   சத்யராஜ், மாதம்பட்டி சிவகுமார் எல்லாம் அந்த ஊர்தானே! 

    தபோவன் பற்றிய செய்திகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. வாசகம் - முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

    புத்தகக்கண்காட்சி போக முடியாதது ஏக்கமாக இருந்திருக்கும்.

    இட்லி வடை, பூரி கிழங்கு, பொங்கல் சாம்பார், ஊத்தாப்பம் சட்னி, குழிப்பணியாரம் என்று நிறைய மெனுக்களால் இலையும் சரி! வயிறும் சரி! நிறைந்து விட்டது!//

    யம்மாடியோவ் இம்புட்டு ஐட்டமா!! பார்த்ததுமே வயிறு நிறைந்தாற்போல ஆகிவிடுமே1.

    ஆ ! மாதம்பட்டி! - இப்பலாம் மாதம்பட்டி என்றதுமே "மாதம்பட்டி ரங்கராஜ்" தான் நினைவுக்கு வருகிறார்.

    ஆனால் கோயம்புத்தூரில் இருக்கறப்ப அங்கு போயிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தபோவன் பற்றிய விஷயங்கள் அருமை. இப்போது இப்படித்தான் அமைக்கிறார்கள். சீனியர்களுக்கு என்று அமைப்பதை. பொதுவான அடுக்களை மற்றும் வீட்டிலும் அடுக்களை என்று. அதுவும் சுற்றிலும் பசுமையுடன் கோயம்புத்தூரில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. மருதமலை செல்லும் வழி இப்போது முற்றிலும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் தோப்பும் வயலுமாக இருந்தவை இப்ப முழுவதும் கட்டிடங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதைப் பார்த்தப்ப....மனதை என்னவோ செய்தது.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....