செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினாறு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினைந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினொன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பன்னிரெண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதிமூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினைந்து


ஏரிக்காத்து:










சென்ற பகுதியில் தோழி புவனா கோவிந்த் வீட்டிற்குச் சென்று எங்கள் நேரத்தை இனிமையாக செலவிட்டதைப் பற்றி சொல்லியிருந்தேன்! அடுத்து என்ன? பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்தாச்சு! பார்க்க வேண்டிய நபர்களையும் பார்த்தாச்சு! இனி என்ன! மறுநாள் காலை கோவையிலிருந்து திருச்சிக்கு தான் கிளம்பணும்! இப்போது மாலை நேரமும் ஆகி விட்டது! என்ன செய்யலாம்???


Lulu mall பற்றி YouTubeல் பார்த்த நினைவு! கோவையில் இருக்குன்னு கேள்விப்பட்டேனே! அங்க போயிட்டு வரலாமா!! எதுவும் வாங்க வேண்டிய அவசியம் ஒண்ணும் இல்லை! சும்மா விண்டோ ஷாப்பிங் வேணும்னா பண்ணிட்டு வரலாம் என்று நினைக்கும் போது தான் எங்கள் உடைமைகளையும் அல்லவா எடுத்துக் கொண்டு சுற்ற வேண்டும் என்று தோன்றியது!! இதையெல்லாம் மாமா வீட்டில் கொண்டு போட்டுட்டு போகலாம் என யோசித்து அங்கே சென்றோம்!


கோவையின் வாகன நெரிசலைப் பற்றி தான் முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா! ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்குள் வெகுநேரம் ஆகிவிடுகிறது! மாமா வீட்டிற்கு வந்ததும் இங்கேயே இருந்து விட்டு நாளை காலையில் கிளம்பி விடலாம் எனத் தோன்றிவிட்டது! மாமா வீட்டிற்கு அருகேயே ஒரு ஏரி இருக்கிறது! இப்போது அந்த இடத்தை அழகுற அமைத்திருக்கிறார்கள்!


மாலைநேரம் அப்படியே காலாற நடந்து ஏரியை பார்வையிடச் சென்றோம்! தமிழ் எழுத்துக்களால் ஆன பெரிய திருவள்ளுவர் சிலை! ஏரியின் கரையோரமாக நடைபாதை அமைத்து ‘தமிழர் விழா’ என்ற தலைப்பில் ‘ஏறு தழுவுதல்’, பரதநாட்டியம், தஞ்சாவூர் தலையாட்டும் சிலை என்று சிலைகளை வைத்து அழகுற அமைத்திருக்கிறார்கள்! நடுவே அரங்கு போன்று படிகளுடன் கூடிய ஒன்றும் உள்ளது! 


நிறைய பேர் இங்கே நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அழைத்து வந்திருந்தார்கள்! எங்கே சென்றாலும் காதலர்கள் தான் அங்கே நீக்கமற நிறைந்திருக்கிறார்களே! அவர்களும் இங்கே காணப்பட்டனர்! இப்படி காலைநேரமோ, மாலைநேரமோ நேரத்தை செலவிட ஏற்ற இடமாக மாறியுள்ளது!


சிறுவயது முதல் மாமா வீட்டிற்கு பேருந்தில் வரும் போதெல்லாம் ஏரியைச் சுற்றி மண்மேடாக இருந்து தான் பார்த்திருக்கிறேன்! சில வருடங்களாக இந்த இடமே மொத்தமாக மாறியுள்ளதில் மகிழ்ச்சி! ஏரியின் சிலுசிலுவென்ற காற்று முகத்தில் மோத நீரின் சலசலப்பும், அங்கேயிருந்த மலர்களின் அழகும் என அந்த இடத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தோம்! நேரம் போனதே தெரியவில்லை! இந்த மகிழ்ச்சி lulu mall க்கு சென்றிருந்தால் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது என்று தான் சொல்வேன்..🙂


பசுமையான நினைவுகள்:


மாமா வீட்டிற்கு அருகே உள்ள ஏரிக்குச் சென்று நேரத்தை இனிமையாக செலவிட்டதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். ஏரியிலிருந்து வரும் சிலுசிலு காற்றும் நீரின் சலசலப்பும் அங்கேயிருந்து என்னை கிளம்பவே விடவில்லை! நேரமாகவே இருட்டவும் துவங்கியது! சரி! கிளம்பலாம் என்றால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதையில் இரண்டே இடங்களில் தான் நுழைவதற்கு வழி உள்ளது! உள்ளே நுழைவதற்கும் சற்று தூரம் நடந்து சென்று கம்பிகளின் வழி குனிந்து நுழைந்து தான் சென்றோம்!


இப்போது வெளியே வரலாம் என்றாலும் அப்படித்தான் வரணும் போலிருக்கிறதே! இன்னும் சற்று தூரம் சென்றதும் ஒரு வழி இருந்தது, ஆனால் அதை பூட்டி வைத்திருக்கிறார்கள்! அடடா! என்ன செய்யலாம் என்ற போது அங்கே ஒரு காவலர் இருந்தார்! அவரிடம் விசாரித்ததில் இந்த வழியை வார இறுதிகளில் மட்டுமே திறப்பதாகச் சொன்னார்! நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லவும், நர்ஸம்மா வீடுங்களா? (என்னுடைய மாமி கிராம செவிலியராக இருந்தவர்!) ஆமாங்க! என்றதும் எங்களுக்கு மட்டும் திறந்து விட்டார்! 


அவரிடம் எங்கள் நன்றிகளை சொல்லி விட்டு சாலையை கடக்க நின்று கொண்டிருந்தோம்! இடைவிடாமல் வாகனங்கள் இப்படியும் அப்படியுமாக சென்று கொண்டே இருந்தது! சற்று நேரம் நின்று தான் கடக்க முடிந்தது! கோவை ரொம்பவே மாறிவிட்டது! வளர்ச்சிகள் நிறையவே இருந்தாலும் கடந்து சென்ற அமைதியான, நெரிசல் இல்லாத பொன்னான காலங்கள் மீண்டும் வாராது என்பது தான் நிதர்சனமான உண்மை!


மாமாவிடம் வெளித்திண்ணையில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டே சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்! மாமா இந்தப் பகுதியில் குடியேறி 40 வருடங்களாகி விட்டதாக எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்! என்னுடைய சிறுவயது நினைவுகளில் மாமா வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது பாவாடை சட்டை அணிந்து கொண்டு ரெட்டைப் பின்னலுடன் வாசலில் நின்று வருபவர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம், கற்கண்டு கொடுத்ததாக நினைவு..🙂 பசுமையான காட்சிகள் அல்லவா! எந்த ஒரு பண்டிகை என்றாலும் இங்கு தான் வருவோம்! வீட்டில் எது செய்தாலும் அம்மா தன் அண்ணாவுக்காக தவறாமல் கொடுத்தனுப்புவாள்! மாமாவின் பொங்கல் சீர் இல்லாமல் அம்மா என்றுமே பொங்கல் வைத்ததில்லை! 


மறுநாள் காலை நாங்களும் கோவையிலிருந்து கிளம்பிவிட்டோம்! ஜங்ஷனுக்கு வந்து ரயிலில் ஏறி அமர்ந்ததும் என்னுடன் சிந்தனைகளும் பயணப்பட தயாராகி விட்டது! நிச்சயமாக இது ஒரு அருமையான பயணம் தான்! நெருக்கடியான சூழலிலிருந்து ஒரு நான்கு நாள் முழுவதுமாக விடுபட முடிந்தது என்று தான் சொல்லணும்! அங்க போகணும்! இங்க போகணும்! என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் இந்த பயணத்தில் கிடைத்த தருணங்கள் எல்லாவற்றையும் என்னால் ரசிக்க முடிந்தது! உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாரையும் பார்க்க முடிந்தது! மீண்டும் இப்படியொரு வாய்ப்பு எப்போது என்பது தெரியாது!


இப்படிப்பட்ட அழகான தருணங்களை சுடச்சுட உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தான் தினந்தோறும் எழுதிக் கொண்டிருந்தேன்! எழுதிப் பகிர்வதில் எந்த திட்டமிடலும் இல்லை! இத்தனை பகுதிகள் வரும் என்பதும் எனக்கே தெரியாது! அன்றாடம் ஒரு மணிநேரம் இதற்காக செலவிட்டேன்! இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! உங்கள் அனைவரின் ஆதரவால் தான் இது சாத்தியமானது! மீண்டும் ஒரு பகிர்வில் சந்திப்போம்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

5 ஆகஸ்ட் 2025


1 கருத்து:

  1. இயந்திரம் போன்ற தினசரி வாழ்க்கையின் அலுப்பு, ஒரு இனிய மாறுதலை இந்த நாட்களில் தீர்ந்திருக்கும்.

    சென்னை, பெங்களூரு மட்டுமில்லாம,. கோவை கூட சாலைப் போக்குவரத்து நெரிசல் ஆகிவிடுகிறது போல..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....