அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட பூபதித் திருநாள் - கருட வாகனம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வகுப்புத் தோழர்களின் சந்திப்பு - 27 ஜனவரி 2026 :
குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் சந்தித்துப் பேசி மகிழ்வதைப் போல வலையுலகில் எழுதத் துவங்கியது முதலாக எங்கே சென்றாலும் முடிந்தவரை அங்கேயுள்ள பதிவர்களையும் சந்திக்க முயற்சி செய்வோம்! அன்பு சூழ் உலகில் எங்கள் இல்லம் தேடியும் நட்புள்ளங்கள் வருவதுண்டு! அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நியூசியில் வசிக்கும் நம்ம துளசி டீச்சரையும், கோபால் சாரையும் தான் சொல்வேன்! எப்போது இந்தியப் பயணம் என்றாலும் முடிந்தவரை ரங்கனின் கருணையால் எங்கள் சந்திப்பும் இடம் பெறும்!
பள்ளியில், கல்லூரியில் உடன் படித்த நண்பர்களை வாட்ஸப்பிலும் ரீ யூனியனிலும் கலந்து கொண்டதால் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்தது! சென்ற வருடம் கூட 25 வருடங்களுக்குப் பின் என் கல்லூரிக்குச் சென்ற கதைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தேன் அல்லவா? எதற்காக இந்தக் கதைகள் எல்லாம்?? எங்களுக்குத் தான் உன்னுடைய எழுத்தின் வழி பின் தொடர்வதால் எல்லாமே up to date தெரியுமே! என்கிறீர்களா…:) சரி சரி விஷயத்திற்கு வருகிறேன்!
ஞாயிறன்று கூட இதுபோன்ற ஒரு மனதிற்கினிய சந்திப்பு நிகழ்ந்தது! இறைவனின் அருளால் இப்போதும் நான் மாணவியாக இருக்கிறேன் என்பதால் இப்போதும் உடன் பயிலும் நட்புவட்டத்தை சந்திக்க வாய்ப்பும் அமைகிறது! ஆன்லைன் கல்வியில் வயது ஒரு தடையே இல்லை! வயதில் மூத்தோரும் கூட எங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு படிக்கிறார்கள்!
அதில் ஒரு தம்பதியைத் தான் நேரிலும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது! கணவன் மனைவி என இருவருமே என்னுடன் என் வகுப்பில் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள்! வகுப்பில் நுணுக்கமான விஷயங்களைக் கூட விட்டுவிடக்கூடாது என்று துடிப்புடன் கேட்டுத் தெரிந்து கொள்வதும், இந்த 75 வயதிலும் மனதில் அதை பதியவைக்க முயற்சி செய்வதும் இவர்களிடம் எங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள்!
அரங்கனை தரிசிக்க சென்னையிலிருந்து வந்திருந்த அவர்களை நாங்கள் தேடிச் சென்று பார்த்து வந்தோம்! அறிமுகம் செய்து கொண்டு சில நிமிடங்கள் பேச முடிந்ததில் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது! அடுத்ததாக அவர்கள் இருவரும் திருவானைக்காவலுக்கும், சமயபுரத்துக்கும் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு வழி சொல்லிவிட்டு மழைச்சாரலோடு நாங்களும் விடைபெற்றோம்!
அன்பு சூழ் உலகில் அன்றைய நாள் மிகவும் இனிமையாகவே கடந்தது!
******
கருட சேவை - 28 ஜனவரி 2026:
இன்னிக்கு கருட சேவை! நாம ஒண்ணு பண்ணலாமா! பெருமாளைப் பார்த்துட்டு அப்புறம் காய்கறிச் சந்தைக்கு போவோமா??
சரி! சரி! சீக்கிரம் கிளம்பு! எத்தனை மணிக்கு புறப்பாடு??
ம்ம்ம்! ஆறு மணிக்குன்னு பார்த்தேன்!
திருவரங்கத்தில் இப்போது தை மாத உற்சவம்(பூபதித் திருநாள்) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இங்கு வருடம் முழுவதுமே உற்சவங்கள் தான்! இந்த தைத் திருநாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடாகி காட்சித் தருவார்! அதில் திங்களன்று கருட வாகனத்தில் திருவீதி வலம் வந்தார்! வரும் சனியன்று தைத் தேர்!
சரி! நீ இங்க இறங்கிக்கோ! நான் போய் வண்டிய எங்கேயாவது நிறுத்திட்டு வரேன்! என்ன!
பெருமாள் புறப்பட்டுட்டாராம் என்று மக்கள் வேகவேகமாக கோவிலின் ‘ரங்கா ரங்கா’ கோபுரம் அருகே சென்று கொண்டிருக்க, நானும் அதில் ஐக்கியமாகி என்னவருக்காக காத்திருக்காமல் கோபுரம் அருகேயே கும்பலோடு கும்பலாக நின்று தீப்பந்தங்களின் ஒளியில் ரங்கனை கருட வாகனத்தில் தரிசித்தும் விட்டேன்!
என்னருகே நின்று கொண்டிருந்த பெண்மணிகளில் சிலர், ரங்கனைப் பார்த்ததும் அவர்களின் முன்னே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து குரல் கொடுத்தனர்! என்னவென்றா கேட்கிறீர்கள்!!? எல்லோரும் தங்கள் கைகளை உயர்த்திப் பிடித்து ரங்கா! ரங்கா! என்று ஓங்கிய குரலில் அழைக்காமல் மும்முரமாக தங்கள் அலைபேசிகளில் காணொளியும் புகைப்படமுமாக எடுத்துக் கொண்டிருந்தார்களே! ஐயா! போனை கொஞ்சம் இறக்குங்க! ஐயா! ஃபோனைக் கொஞ்சம் இறக்குங்களேன்! என்று தான் சொல்லிக் கொண்டிருந்தனர்! பின்னே நிற்பவர்களுக்கு தூரத்தில் இருந்தால் தரிசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது!!
அப்போது தான் எனக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது!!???
அப்போது என் கையில் செல்ஃபோன், பர்ஸ் என்று எதுவுமே இல்லை! வண்டியை நிறுத்தச் சென்ற என்னவரும் இன்னும் வரலையே என்று அப்போது தான் உரைத்தது! ரங்கனை தரிசித்து விட்டதால் வந்த வழியே மீண்டும் கடைத்தெருவுக்கும் சென்றுவிட்டேன்! தனியே எங்கேயாவது இருட்டில் நின்று கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என்று அப்படியே நடந்தும் சென்று கொண்டிருந்தேன்!
இத்தனை வருடங்களாக வசிக்கும் ஊர்! இங்கு பெரும்பாலான முகங்கள் தெரிந்ததாய்த் தான் தோன்றும்! பயமேதும் இல்லை! கையில் எதுவுமே இல்லாமல் இப்படி கம்பீரமாக நடப்பதிலும் சுகமிருக்கிறது என்று புரிந்தது…:) வண்டியை எங்கே வைக்க முடிந்ததோ தெரியலையே என்று யோசித்தவாறு என்னுடைய நடையும் தொடர்ந்தது! இப்படியே நடந்தே கூட வீட்டுக்கு போயிடலாமா!! இல்ல! ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிட்டு காசு குடுத்துக்கலாமா! என்று மனதிலும் யோசனைகள்..🙂
வழியில் வாடிக்கையாக மளிகை வாங்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரவே, அங்கே வெளியே நின்றிருந்த கடைக்காரரிடம் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமாங்க?? என்று கேட்டுவிட்டு அவரிடம் என்னவரின் தொலைபேசி எண்ணைச் சொல்லி கால் செய்யச் சொன்னேன்! சார்! மேடம் இங்க கடைல தான் இருக்காங்க! என்றார். மறுமுனையில் என்னவர் “என்னை அங்கேயே காத்திருக்கச் சொல்லவும்” அங்கேயே அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் பராக் பார்க்கத் துவங்கினேன்!
இப்படி ஒரு அரை மணிநேரம் பின்பு வேறிடத்தில் ஒரு அரை மணிநேரம் என்று மிகவுமே காத்திருக்க வேண்டியதாக இருந்தது! காரணம் வாகன நெரிசல்! பெருகி விட்ட வாகனங்கள், அதற்கான பார்க்கிங், எல்லோருமே உடனே கிளம்ப வேண்டும் என்ற பிரயத்தனம், காத்திருக்க யாருக்கும் பொறுமையில்லாதது என்று அன்றைய நாள் இப்படியாகத் தான் சென்றது! பின்பு சந்தைக்கும் சென்று காய்கறிகளையும் வாங்கிக் கொண்டே வீடு திரும்பினோம்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
30 ஜனவரி 2026



முகநூலிலும் பார்க்கிறேன் என்றாலும், முதல் நிகழ்வை இங்கே பதிவிலேயே பார்த்த மாதிரி இருக்கிறதே... இரண்டாவது நிகழ்வை வெங்கட் அனுபவப் பார்வையில் படித்தேன். அந்தநாள், விருமாண்டி ஸ்டைல்!
பதிலளிநீக்குஹாஹாஹா ஸ்ரீராம் நானும் இதேதான் விருமாண்டி ஸ்டைல்னு நினைத்தேன்/. உங்க வரி கண்ணில் பட்டுவிட்டதால் தனியாகச் சொல்லவில்லை!
நீக்குகீதா
நீங்கள் கேட்டதற்குப் பின் எனக்கே குழப்பம் வருகிறது...:) முதல் நிகழ்வு முகநூலுக்குப் பின் இங்கே தான்!
நீக்குவிருமாண்டி கமல் சார் நடித்த திரைப்படம் என்று மட்டும் தான் தெரியும். அதென்ன விருமாண்டி ஸ்டைல்??
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
அட! ஆன்லைன் பள்ளி நட்பையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி! ஆதி. இப்படி நட்புகளைச் சந்திப்பது பேசுவது எல்லாம் நல்ல டானிக் தான்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். நட்புகளை சந்திப்பது ஒரு டானிக்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
அட! ஆன்லைன் பள்ளி நட்பையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி! ஆதி. இப்படி நட்புகளைச் சந்திப்பது பேசுவது எல்லாம் நல்ல டானிக் தான்.
பதிலளிநீக்குகீதா
உங்கள் கல்லூரி நட்பு சந்திப்பு நினைவிருக்கிறதே!!
பதிலளிநீக்குகருடசெர்வை தரிசனத்தில் கூட்ட நெரிசலில் இறைவனைப் பார்த்துக் கொண்டே நீங்கள் கூட்டத்தில் கலந்ததும். வெங்கட்ஜி வேறு இடத்தில் தரிசனம் செய்து எங்களுக்கும் வீடியோவைப் பகிர்ந்திருந்தாரே. வெங்கட்ஜியிடம் கேட்க விட்டுப் போச்சே அவர் இடத்தில் அவர் உயர்த்திப் பிடித்ததும் யாரும் சொல்லவில்லையா? கையை கீழே இறக்குங்கன்னு!!!!! என்று.
அதே நிகழ்வை உங்கள் வழிப் பார்வையும் வாசிச்சாச்சு!
கீதா
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்குவெங்கட் சார் கருட சேவை வீடியோ பதிவுடன் போட்டு இருந்தாரே தனியாக பிரிந்து சென்றாலும் நம்பெருமாள் நன்றாக தரிசனம் செய்து இருக்கிங்க
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மி ஜி.
நீக்குவாசகம் அருமை. உடன் பயிலும் நட்புகளின் சந்திப்பு அருமை. முகநூலில் வாசித்தேன்.
பதிலளிநீக்குகருட சேவை படம் அருமை.
இப்போது சாமி ஊர்வலங்களின் போது செல்போனை வைத்து படம்பிடிப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சல்தான்.கை தூக்கி "ரங்கா ரங்கா "என்று கும்பிட முடியாமல் ரங்கனை படம்பிடித்து கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை.
ஆமாம் அம்மா. அன்று என்னருகில் நின்ற பெண்மணி சொல்லும் போது தான் எனக்கும் புரிந்தது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. உங்களுடன் படிப்பவர்களின் தோழமை பற்றியும், அவர்களை நீங்கள் நேரடியாக சந்தித்து நட்பை பகிர்ந்து கொண்ட காட்சிகளையும் கண்டு நானும் மிக்க மகிழ்ச்சி கொண்டேன்.
ரங்கன் தரிசனம் தங்களுக்கு சிறப்பாக கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கும் உங்கள் இருவரின் பதிவுகளால், நேற்றும், இன்றுமாய் கருட வாகன பெருமாளை கண்டு தரிசித்துக் கொண்டேன். 🙏. கூட்டத்தை பொருட்படுத்தாமல் தைரியமாக நீங்கள் அங்கு நடந்து சென்று தங்களது கணவரின் உதவியோடு காய்கறிகளையும் வாங்கியவாறு வீட்டிற்கு நலமுடன் சென்றது குறித்தும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் இருவருக்கும் வேறு வேறு இடங்களில் ரங்கன் காட்சி தந்தான்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.