திங்கள், 13 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – காலா பத்தர் கடற்கரை…


காலா பத்தர் கடற்கரை...

அந்தமானின் அழகு – பகுதி 19


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

Traveling – it leaves you speechless, then turns you into a storyteller – Ibn Battuta



காலா பத்தர் கடற்கரை...


Ibn Battuta – மொராக்கோவினைச் சேர்ந்தவர் – 1304 ஆம் ஆண்டு பிறந்தவர். 1325-ஆம் ஆண்டிலிருந்து 1354-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் வாழ்நாளில் கிட்டத்தட்ட 120000 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து பல நாடுகளுக்குச் சென்று தனது அனுபவங்களை எழுதியவர். இந்தியாவின் பெங்கால் பகுதிகளுக்குக் கூட வந்திருக்கிறாராம் – In Bengal என்ற தலைப்பில் அவரது ஒரு புத்தகம் இருப்பதாகத் தெரிகிறது. அவருடைய ஒரு பொன்மொழியுடன் இன்றைய பதிவினை துவங்கி இருக்கிறேன்.  உண்மை தானே! பயணம் செய்யும் போது நாம் பார்க்கின்ற அற்புதமான விஷயங்களில் இலயிக்கும் போது அவை நம்மை மௌனிக்கச் செய்கின்றன.  பார்த்து விட்டு வந்த பின்பும் அதைப் பற்றிய சிந்தனைகளை நமது மனதில் தோன்றிக் கொண்டே இருக்க வைப்பவை பயணங்கள். 


காலா பத்தர் கடற்கரை...


சென்ற பகுதியில் ஸ்வராஜ் த்வீப் பகுதியில் இருக்கும் வசதிகள் பற்றி சொல்லி இருந்தேன்.  இந்தப் பகுதியில் நாங்கள் அங்கே சென்று பார்த்த ஒரு கடற்கரை பற்றி சொல்லப் போகிறேன்.  நாங்கள் முதலில் சென்றது காலா பத்தர் கடற்கரை – காலா என்றால் ரஜினி நடித்த காலா அல்ல! காலா என்றால் கருப்பு என அர்த்தம். பத்தர் என்றால் கற்கள்! கருப்பு கற்கள் கடற்கரை என தமிழ் ‘படுத்த’லாம் இந்த காலா பத்தர் கடற்கரையை!  நாங்கள் இங்கே செல்லும்போதே இங்கே சென்று கடற்கரையை ரசிக்க மட்டுமே போகப் போகிறோம். எந்தவித Water activities-உம் இங்கே செய்யப் போவதில்லை என்று சொல்லியே அழைத்துச் சென்றார்கள். மூன்று வாகனங்களில் ஏறிக் கொண்டு நாங்கள் சென்று சேர்ந்த அந்த கடற்கரை காலா பத்தர் கடற்கரை.  எத்தனை அழகு இந்த கடற்கரை! அலைகளையும் கடலையும் பார்த்துக் கொண்டு அப்படியே மணல் வெளியில் அமர்ந்திருப்பது ஒரு ஆனந்த அனுபவம். 

தமிழுக்கு அருகில் நான்!

 

நாங்கள் தங்கியிருந்த ராதாகிருஷ்ணா ரிசார்ட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த இந்த காலா பத்தர் கடற்கரையினை பத்து நிமிடங்களுக்குள் வந்து அடைந்து விட்டோம். காலா பத்தர் கடற்கரை – எதற்காக இந்தப் பெயர் வந்திருக்கலாம் – இரண்டு காரணங்கள் – ஒன்று இந்தக் கடற்கரை அருகே இருக்கும் கிராமத்தின் பெயர் காலாபத்தர்! இரண்டு கடற்கரையில் நிறைய கருப்புக் கற்கள்! இந்த இரண்டில் எது காரணமாக இருந்தாலும் பெயரும் கடற்கரையும் அழகாகவே இருக்கிறது.  எங்களை கடற்கரை ஓரம் இறக்கி விட்டு, சற்று தள்ளி இருக்கும் வாகன நிறுத்தத்தில் வண்டிகளை நிறுத்திக் கொண்டு, எங்கள் நிழற்பட செஷன் முடிந்ததும் அழைக்கச் சொன்னார்கள்.  மணல் வெளியில் சற்று நடந்து கடற்கரைக்குச் சென்று காலணிகளை ஒரு ஓரத்தில் கழற்றி வைத்து விட்டு கடல் நீரில் காலை நனைத்துக் கொண்டிருந்தோம்.  தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் கடல் அலைகள் – கடல் அன்னை அயராது உழைத்துக் கொண்டே இருக்கிறாள் – அவளுக்கு ஓய்வே கிடையாதோ பாவம்!  அவளுக்குக் கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கலாமே இந்த இயற்கை அன்னை!

பாதையிலிருந்து கடல்...


கடல் நீரில் கால் நனைக்க முடிந்தால் அது ஒரு சுகம்! உப்புத் தண்ணியானாலும் பரவாயில்லை என உள்ளே சென்று அலைகளோடு விளையாடி மகிழ்வது இன்னும் ஒரு வித சுகம்.  எங்களை காலா பத்தர் கடற்கரைக்கு அழைத்துச் சென்ற போதே ஒரு விஷயத்தினை எங்களிடம் தெளிவுபடுத்தினார்கள்.  இந்த காலா பத்தர் கடற்கரையில் சிறிது நேரம் இருந்து உங்களுக்குத் தேவையான நிழற்படங்களை எடுத்துக் கொண்டு திரும்பிவிடலாம். ஏனெனில் அப்போது தான் உங்களுக்கு அடுத்த கடற்கரை – அதுவும் ஸ்வராஜ் த்வீப் தீவின் முக்கியமான, அழகான கடற்கரையில் அதிக நேரம் செலவிட முடியும் என்பதைச் சொல்லிய பிறகே எங்களை காலா பத்தர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.  காலா பத்தர் கடற்கரையும் அழகானது தான் என்றாலும், அதை விட அழகு அடுத்ததாகச் செல்ல இருக்கும் கடற்கரை. அதனால் இங்கே நிறைய நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  ஒவ்வொருவரும் விதம் விதமாக போஸ் கொடுக்க குடும்பம் குடும்பமாகவும், குழுக்களாகவும் எடுத்துக் கொண்டே இருந்தார்கள். 


காலா பத்தர் கடற்கரை...


நிறைய படங்கள் – குழுவில் இருந்த இளைஞர்களும், இளைஞிகளும் கொடுத்த வித்தியாசமான போஸ் பார்த்து பெரியவர்களும் அப்படியே நின்று எடுக்க ஒரே அதகளம் தான்! சிரிப்பும் கும்மாளமுகாக இருந்தது அந்த இடம்.  காலா பத்தர் கடற்கரையே எங்கள் சிரிப்பொலிகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே அந்தக் கடற்கரையில் இருந்து படங்கள் எடுத்துக் கொண்டு கரையிலிருந்து வெளியே வர மனமே இல்லாமல் நின்று கொண்டிருந்தோம். கரையோரமாக சில கடைகள் உண்டு – முக்கியமாக இளநீர் கடைகளும், கடலிலிருந்து எடுக்கப்படும் சங்கு, சிப்பி, சோழிகள் கொண்டு உருவாக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளும் நிறையவே இருக்கின்றன.  ஆனால் இங்கே நான் பராக்கு பார்த்ததோடு சரி – ஆனால் ஒவ்வொரு கடற்கரையிலும் இளநீர் வாங்கிக் குடித்தோம்.  அந்தமானில் இருந்த வரை தினம் தினம் இளநீர் தான்! ஒவ்வொரு நாளும் எவ்வளவு முறை இளநீர் குடித்தோம் என கணக்கில்லை! ஒரே சமயத்தில் இரண்டு இளநீர் கூடக் குடித்ததாக நினைவு!





 காலா பத்தர் கடற்கரை...

நாங்கள் காலா பத்தர் கடற்கரையில் இருந்த போதே மதிய நேரம்.  ஆனால் அங்கே உணவுக்கான ஏற்பாடுகள் பெரிதாக இல்லை.  எங்கள் திட்டப்படி அடுத்த கடற்கரையில் தான் எங்களுக்கான மதிய உணவுக்கு ஒரு உணவகத்தினை தேர்ந்தெடுத்து இருந்தார்கள் – பெரும்பாலான உணவகங்கள் அசைவ உணவகங்கள் என்பதால் சைவ உணவு வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லி விட வேண்டும்! அதற்குத் தகுந்த மாதிரி தான் பயண ஏற்பாட்டினைச் செய்த திரு சுமந்த் ஏற்பாடு செய்வார்.  நாம் சொல்லாமல் விட்டுவிட்டால் அசைவம் மட்டுமே கிடைக்கிற இடங்களில் சைவ உணவு தேடி அலைய வேண்டியது தான்! அந்தமான் தீவுகளில் அதுவும் குறிப்பாக கடற்கரை அருகே இருக்கும் உணவகங்கள் – சிறு உணவகங்களாக இருந்தாலும் அவை அசைவ உணவகங்களே! குறிப்பாக மீன் வகைகள்!  சைவம் மட்டுமே சமைக்கும் உணவகங்கள் தான் உங்களது தேவை என்றால் முன்னரே சொல்லி வைப்பது நல்லது. நாங்கள் பயணம் திட்டமிடும்போதே திரு சுமந்த் அவர்களிடம் சொல்லி விட்டதால் அதற்கு தகுந்த மாதிரியே ஏற்பாடு செய்திருந்தார்.  ஸ்வராஜ் த்வீப் தீவிலும் எங்கள் மதிய உணவு நாங்கள் அடுத்து செல்லப் போகும் கடற்கரைப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.





இங்கே ஒரு சிற்பி வந்து சென்றார் போலும்!...


இந்தப் பகுதியினை முடிப்பதற்கு முன்னர் ஒரு சிறு தகவல் – இப்போது இந்தத் தீவு ஸ்வராஜ் த்வீப் என அழைக்கப்படுவதற்கு முன்னர் ஹேவ்லாக் என அழைக்கப்பட்டு வந்தது. அதற்கான பெயர்க் காரணம் என்ன தெரியுமா?  இந்தியாவினை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் காலத்தில் இருந்த ஒரு British Army General-இன் பெயரால் இந்தத் தீவு அழைக்கப்பட்டது – அவருடைய முழுப் பெயர் ஸர் ஹென்றி ஹேவ்லாக்!  இந்தப் பெயரிலேயே பல காலங்களாக இந்தத் தீவு அழைக்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு, இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஸ்வராஜ் த்வீப் ஆனது! அடுத்ததாக நாங்கள் எந்த கடற்கரைக்குச் சென்றோம், அங்கே என்ன சிறப்பு, அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம். உண்மையும் கூட. கடற்கரை அனுபவங்கள், உணவுக்கான குறிப்புகள் சுவாரஸ்யம்.

    காலா பத்தர் என்றால் ரஜினிதான் நினைவுக்கு வரவேண்டுமா? அமிதாப், சத்ருகன் சின்ஹா எல்லாம் நடித்த காலா பத்தர் என்றே ஒரு படம் உண்டே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      காலா பத்தர் ஹிந்தி படமும் நினைவில் இருந்தது என்றாலும் இங்கே குறிப்பிடவில்லை! :)

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகம் நன்றாக உள்ளது காலா பத்தர் கடற்கரை மிகவும் அழகாக உள்ளது. அதன் பெயர் விபரமும், அதன் அழகைப் பற்றிய விபரங்களும் தெரிந்து கொண்டேன். ஓய்வின்றி வந்து போகும் கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் அமர்ந்து ரசிக்கலாம். முன்பெல்லாம் எனக்கும் இது ரொம்ப பிடிக்கும். இப்போது கடலை காண்பதற்கு கூட சந்தர்பமே வரவில்லை. அதனால் தங்கள் பதிவுகளில் நானும் கடல்களை கண்டு சந்தோஷமடைகிறேன்.

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன
    "தமிழுக்கு அருகில் நான்" என்ற படத்தில் தமிழை காணாது, பின் அங்கு வந்து போன ஒரு "சிற்பியின் கைவண்ணத்தில்" தமிழைக் கண்டதும், மீண்டும் சென்று தமிழோடு தங்களையும் கண்டு வந்தேன். நல்ல புதிரான படங்கள் அழகாக உள்ளன.

    ஒரு இலையில் பூச்சி சிற்பிகளின் அழகான வேலைப்பாடுடைய படமும் மனதை கவர்ந்தது. அதையும் தனிப்பட்ட கவனத்துடன் எடுத்து பகிர்ந்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    அனைத்து விபரமான செய்திகளுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தமிழுக்கு அருகில் நான் - :)

      பதிவில் வெளியிட்ட படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. படங்கள் மிக அழகு. இடமும் சென்று பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.

    கடலுக்கு ஓய்வா? ஐயோ.. அது சுனாமிக்கு முந்தைய நிலை. அப்போதுதான் கடல் வெகுவாக உள்வாங்கி சில கணங்கள் அமைதியாக இருக்கும். அடுத்த நொடி சுனாமிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      சுனாமிக்கு முந்தைய அமைதி - :) உண்மை தான் அந்த அமைதி ரொம்பவே பயங்கரமானது தான்.

      நீக்கு
  4. காலா பத்தர் இதற்காக விளக்கம் கொடுத்ததை நினைத்து ரசித்தேன்.

    தமிழர்களின் நாடித்துடிப்பை அறிந்து இருகிறீர்கள்.

    தேர்தலில் நிற்க இது போதும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தலில் நிற்க இது போதும் ஜி! ஹாஹா... கில்லர்ஜி... நமக்கும் அரசியலுக்கும் பல காத தூரம்!

      நீக்கு
  5. அழகிய கடற்கரை... அடுத்தது இதைவிட மிஞ்சும் என்று நினைக்கிறேன்...

    பயணங்களை இதுபோல் பதிவு செய்து வைப்பது, மிகச் சிறந்த செயல்களில் ஒன்று... மறதி காலத்தில் இனிமை தரும்... இந்த எண்ணமும் "இதை நாம் செய்யவில்லை" என்கிற எண்ணமும், உங்கள் பயண பதிவிற்கு வரும்போதெல்லாம் மனதில் நினைப்பேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரை ரொம்பவே அழகு தான் தனபாலன். இங்கே பெரும்பாலான கடற்கரைகள் அழகு.

      பயணங்களை பதிவு செய்து வைப்பது நல்லது தான். இப்போதாவது செய்ய முடிகிறதே என எனக்கும் தோன்றும். வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கும் முன்னர் சென்ற பயணங்களை பதிவு செய்து வைக்கவில்லையே என்றும் தோன்றும்.

      நீக்கு
  6. போக வேண்டிய இடங்கள். இப்படி ரசித்து கொள்ள வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எல்.கே. நிச்சயம் ஒரு முறையேனும் இங்கே சென்று வரலாம்.

      உங்களுக்கும் ஒரு வாய்ப்பு அமைய வாழ்த்துகள்.

      நீக்கு
  7. காலா பத்தர் என்ற பெயரைப் பார்த்ததுமே நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டாவது அர்த்தம் தான் நான் நினைத்தேன். கறுப்புக் கற்கள் நிறைய இருக்கும் போல என்று.

    கடல் நிறம் என்ன அழகா இருக்கு இல்லையா...நீலம் பச்சை நீலமும் பச்சையும் கலந்து என்று...கடற்கரை ரொம்ப அழகு சுத்தமாகவும் இருக்கிறது. மணல் நிறம் உட்பட...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாஜி. இங்கே கடல் நீரின் நிறம் ரொம்பவே அழகு. சுத்தமாக இருப்பது கூடுதல் அழகைத் தருகிறது. கறுப்புக் கற்கள் நிறைந்த இடம் கூட அழகு தான்.

      நீக்கு
  8. அந்தப் பாறை கொஞ்சமாகத் தெரிவது அழாகாக இருக்கிறது படம்.

    அமைதியான கடற்கரை போல இருக்கிறதே. அதாவது அலைகள் அதிகம் உயரே எழும்பாமல். கொஞ்சம் தூரம் வரை கூட அலை எழும்பிக் காணவில்லையே. கொஞ்சம் தூரம் வரை ஆழமும் இருப்பதாகத் தெரியவில்லை...காற்று அதிகம் இருக்கலை போல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமானில் கடல் உள் வாங்குவதும் வெளியே வருவதும் தொடர்ந்து நடப்பது. அதனால் அதிக ஆழம் சற்று தூரத்திற்குப் பிறகு தான். நாங்கள் சென்ற போது அத்தனை காற்று இல்லை. இதமான சூழலாகவே இருந்தது கீதாஜி.

      நீக்கு
  9. இயற்கை அன்னைதான் முக்கியமான சிற்பி!! அவள் அனுப்பிய பூச்சிகள் எனும் சிற்பிதான் இத்தனை அழகான வடிவங்கள் போட்டிருக்காங்க போல!

    படங்கள் எல்லாமே மிக அழகு ஜி.

    கடற்கரையே அழகுதான். அடுத்த கடற்கரை இன்னும் அழகா? என்ன இருக்கிறது என்று பார்க்க ஆவல்!.

    எனக்கு விசாகப்பட்டினக் கடற்கரையும் மிக மிக அழகாகத் தெரிந்தது. அதன் வடிவம்..அதுவும் அந்த கைலாசகிரி மேல் ஏறும் போது அந்தக் கடற்கரை வளைவு ரொம்ப அழகாக இருக்கும்.. அந்தப் பயணம் பற்றி எழுத முடியவில்லை. படங்கள் எல்லாம் ரிப்பேர் ஆன கணினியின் ஹார்ட் டிஸ்கில். அது சரியானால்தான் எழுத முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் திறமைக்கு எதிரே நாம் எம்மாத்திரம்... இயற்கைச் சிற்பி செதுக்கிய சிற்பங்கள் அழகு தான்.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      விசாகப்பட்டினம் - நாங்களும் சென்று வந்தோம் - அரக்குப் பள்ளத்தாக்கு சென்ற போது.

      நீக்கு
  10. Ibn bhattua வாசகம் அருமை. அந்த வாசகம் உண்மைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  11. //தமிழுக்கு அருகில் நான்!//

    ஹா ஹா ஹா பாம்புக்கு அருகில் நான் .. என மாத்தி யோசிச்சுப் பார்த்தேன்.. நிலத்தைப் பார்க்கப் பயமாக இருக்குதே..

    //இங்கே ஒரு சிற்பி வந்து சென்றார் போலும்!...//
    ஆஆஆ. நாங்கள் போய் வந்திருந்தால் அந்தமானுக்கு.. இதை எழுதிய சிற்பி நான் தான் என அடிச்சி விளாசியிருக்கலாம்.. ஜஸ்ட்டூ மிஸ்ட்டூ:))..

    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்புக்கு அருகில் நான்! ஹாஹா... இங்கே ஒரு தீவு உண்டு அதிரா. அந்தத் தீவின் பெயரே பாம்புத் தீவு தான்!

      இன்னும் நிறைய மரங்கள் உண்டு அங்கே அதிரா. நீங்கள் சென்று அங்கே எழுதலாம்! ஹாஹா....

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      நீக்கு
  12. வாசகம் அருமை.
    தமிழுடன் நான் படம் மிக அருமை.

    காலா பத்தர் கடற்கரை மிக அழகு.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    //வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால் இங்கே நான் பராக்கு பார்த்ததோடு சரி //

    ஆதி, ரோஷணிக்கு ஒன்றும் வாங்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      இந்த இடத்தில் ஒன்றும் வாங்கவில்லை கோமதிம்மா... தோடு, மாலை போன்றவை வேறொரு இடத்தில் வாங்கினேன்.

      நீக்கு
  13. அழகழகான படங்கள்...

    அந்தமான்.. இது சொந்த மான்...
    விரிவான செய்திகளுடன் இனிய பதிவு...

    உங்கள் தயவில் நானும் கண்டு களிக்கிறேன்... மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      பதிவின் வழி நீங்களும் அந்தமான் வந்ததற்கு நன்றி.

      நீக்கு
  14. கடற்கரை பார்க்கவே அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அழகாகவே இருந்தது கடற்கரை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....