புதன், 15 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – ராதா நகர் கடற்கரை – மதிய உணவு…




அந்தமானின் அழகு – பகுதி 20



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

We live in a wonderful world that is full of beauty, charm and adventure. There is no end to the adventures we can have if only we seek them with our eyes open. – Jawaharlal Nehru.
 




இந்த வாசகத்தினைச் சொன்ன ஜவஹர் லால் நேரு யார் என்று சொல்ல வேண்டியதில்லை! அதனால் நேரே இன்றைய பதிவு பற்றி பார்க்கலாம். காலா பத்தர் கடற்கரைக்குச் சென்ற சமயத்தில் கிடைத்த அனுபவங்களை சென்ற பகுதியில் பார்த்தோம்.  காலா பத்தர் கடற்கரையிலிருந்து புறப்பட்டு அடுத்ததாக நாங்கள் சென்று சேர்ந்த இடம் ராதா நகர் கடற்கரை – இடைப்பட்ட தூரம் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவு – தீவின் நடுவே இருக்கும் தொலைவினைக் கடந்து ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு பயணம்!  ராதா நகர் கடற்கரை – அந்தமான் சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய கடற்கரை என்று அங்கே சென்று வந்தவர்கள் அனைவருமே சொல்வார்கள்.  ஆசிய கண்டத்திலிருக்கும் கடற்கரைகளில் நான்காம் அழகான கடற்கரை என்ற பெருமையை (இந்தியாவில் நம்பர் ஒன்!) பெற்ற கடற்கரை இந்த ராதா நகர் கடற்கரை. இந்த கடற்கரைக்கு இன்னுமொரு பெயர் கடற்கரை எண் 7! (Beach No.7).  காலா பத்தர் கடற்கரையிலிருந்து 20 நிமிட பயணத்தில் நாங்கள் ராதா நகர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.  ஏற்கனவே சொன்னது போல, இந்த ராதா நகர் கடற்கரையில் தான் எங்கள் மதிய உணவுக்கான இடம் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.





ஏற்கனவே அலைபேசி மூலம் உணவுத் தேவையை சொல்லி வைத்திருந்தார்கள். ஆனாலும் நாங்கள் சென்று சேர்ந்த போது அங்கே முதலில் சொல்லி இருந்த குழுவிற்கான சாப்பாடு ஏற்பாடுகள் சென்று கொண்டிருந்தன.  அது முடிந்த பிறகு எங்களுக்குச் சமைத்துத் தர வேண்டும் – குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்று சொல்லி விட்டார்கள்.  அதனால் கடற்கரைக்குச் சென்று கொஞ்சம் நேரம் இளைப்பாறினோம்.  இங்கே தான் கடலில் நீச்சல், குளியல் என்ற திட்டம் எங்களுக்கு இருந்தது. கடலில் இறங்கி விட்டால் ஈர உடையுடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட முடியாது.  ஒரு மணி நேரம் கடற்கரையில் அமர்ந்து வேடிக்கையும் அரட்டையும் சென்று கொண்டிருந்தது.  கொஞ்சம் ஓய்வு எடுத்த மாதிரியும் ஆயிற்றே! நடுநடுவே நானும் நண்பர் ஒருவரும் உணவகத்திற்குச் சென்று தயார் ஆகிவிட்டதா என்று பார்த்து கொஞ்சம் துரிதமாகச் செயல்படச் சொன்னோம். எடுத்தூண் வழிமுறை தான் – ஒவ்வொரு உணவாகத் தயாராகிக் கொண்டிருந்தது.  அங்கே சென்று அவர்களை விரைவாக வேலை வாங்கிக் கொண்டிருந்தார் உணவகத்தின் உரிமையாளர். அவரும் களத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார் – நேரம் ஆவதற்கு ஒரு மன்னிப்புடன்.






இடைப்பட்ட நேரத்தில் உணவகம் அருகே இருக்கும் ஒரு கடையில் – சாகரிகா என்ற பெயரில் அந்தமான் அரசுத் துறை நடத்தும் ஒரு கடை – நிறைய நினைவுப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தோம் நானும் சில நண்பர்களும்.  சிலர் ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.  அழகாகவே இருந்தன என்றாலும் எனக்கு பெரிதாக எதுவும் வாங்கத் தோன்றவில்லை.  பெரும்பாலும் பயணம் செல்லும் போது நான் பொருட்கள் ஏதும் வாங்குவதில்லை – தனியாகச் செல்லும்போது வாங்கினால் வீட்டினருக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற எண்ணமும் தலைதூக்கும்! அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாங்கினால் தானே அனைவருக்கும் மகிழ்ச்சி.             அப்படி வாங்கினாலும் அதிகமான விலை கொடுத்து வாங்குவதில்லை. சின்னச் சின்ன பொருட்கள் மட்டுமே வாங்குவேன்!  பயன்படவில்லை என்றாலும் கவலையில்லை! அதிக விலை கொடுத்து வாங்கி எங்கோ ஒரு மூலையில் இருக்கப் போகிறது என்றால் அதை வாங்காமல் இருப்பதே மேல் அல்லவா!





சலாட், ரொட்டி, தால், உருளை சப்ஜி, சாதம், ஊறுகாய், அப்பளம் என சுவையான மெனுவுடன் உணவு தயாராக, அனைவரும் முதல் மாடியில் இயற்கையை ரசித்தபடி உணவினை உண்டோம்.  நல்ல பசியுடன் இருந்த எங்களுக்கு உணவு ரொம்பவே பிடித்திருந்தது.  அதிக அளவு வகைகள் இல்லையென்றாலும் இருந்த அனைத்துமே நன்றாக இருந்தது.  எங்கள் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு அதற்கான கட்டணத்தினைச் செலுத்தி மீண்டும் கடற்கரை நோக்கிச் சென்றோம்.  மதிய உணவு எங்கள் பயணத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலை மற்றும் இரவு உணவு மட்டுமே எங்கள் பயணத்திட்டத்தில் இருந்தது.  கடற்கரை நோக்கிச் சென்ற எங்கள் குழுவில் சிலர் மட்டும் கடலுக்குள் இறங்க தயாராக இல்லை. பெரும்பாலானவர்கள் கடலுக்குள் இறங்கி நல்ல ஆட்டம்.  கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது – கடற்கரையில் பல அழகிய காட்சிகள் இருந்தாலும், படங்களுக்குள் மக்கள் வராமல் எடுக்க ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருந்தது.






கடற்கரை ஓரமாகவே கொஞ்சம் தூரம் நடந்து படங்களை எடுத்துக் கொண்டேன்.  ரொம்பவே அழகான கடற்கரை. கரையோரங்களில் மரங்கள், இயற்கையான சூழல், சுத்தமாக இருந்த கடற்கரை, கடல் நீரின் அழகிய தோற்றம் என பார்க்கவே பரவசம் தரும் இடம் இந்த ராதா நகர் கடற்கரை.  நிறைய வெளிநாட்டவர்களும் இங்கே வந்து கடற்கரை ஓரமாக சன்பாத் எடுக்கிறார்கள்.  குழுவினர் கடலில் குளித்து, நீச்சல் அடித்து உற்சாகமாக இருக்க, நான் அப்படியே கடற்கரை ஓரமாக நடந்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.  சிறு சிறு நண்டுகளின் வளைகள், அவை ஏற்படுத்தி இருக்கும் வடிவங்கள், கடல் அலைகள், சூரியன் அஸ்தமிக்கும் காட்சிகள், கடற்கரையில் இருந்த மரங்கள், கடலில் யாரும் அதிக தூரம் சென்று விடாதபடி எச்சரிக்கை செய்து கொண்டிருந்த ஊழியர் என படங்களை நிறையவே எடுத்தேன்.  சூரிய அஸ்தமனக் காட்சி – அதுவும் ஆசியாவின் நான்காவது அழகிய கடற்கரையில் பார்த்தது ரொம்பவே மனதுக்குப் பிடித்திருந்தது.  ரொம்பவே அழகு அந்தக் காட்சி. 






ஆக மொத்தத்தில் ராதா நகர் கடற்கரையில் நாங்கள் இருந்த நேரம் முழுவதுமே இயற்கையை ரசித்தபடி இருந்தோம் எனச் சொல்லலாம்! இங்கே குறைகளே இல்லை என்று சொல்ல முடியாமல், குறை இருக்கிறது எனச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு குறை தான் – இங்கே கழிப்பறை வசதிகள், பெண்களுக்கான உடை மாற்றும் வசதிகள் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம்!  உடை மாற்றிக் கொள்ள, ஈர உடையுடன் சிறிது தூரம் நடக்க வேண்டியிருக்கிறது – அதுவும் தவிர அங்கே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது – கடல் நீரில் நனைந்த பிறகு நல்ல தண்ணீரில் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வர வேண்டும் – ஒவ்வொருவரும் உள்ளே சென்றால் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் வரிசையும் பெரிதாகிக் கொண்டே போகிறது!  அதை சுற்றுலாத் துறை கவனித்தால் நல்லது!  ஆண்கள் பக்கம் அத்தனை நீண்ட வரிசை இல்லை. பெண்களுக்குத் தான் அதிக பிரச்சனைகள் இங்கே.  எங்கள் குழுவில் இருந்தவர்கள் அங்கே சென்று உடை மாற்றிக் கொண்டு வரும் வரையில் நான் கடற்கரையில் படங்கள் எடுத்தபடி உலா வந்து கொண்டிருந்தேன். 






குழுவினர் அனைவரும் வந்து சேர்ந்த பிறகு கடற்கரை அருகே இருந்த கடைகள் வழியே வெளியே வந்தோம். வழியில் வழக்கம் போல இளநீர் உண்டு! Bபேல் பூரி கடைகளும் இருக்க சிலர் அதையும் வாங்கிச் சுவைத்தோம்.  எல்லா இடங்களிலும் இளநீரின் விலை 30 ரூபாயிலிருந்து 40 வரை தான். கடற்கரை என்பதால் அதிகம் சொல்வதில்லை.  எல்லா இடங்களிலும் பெரும்பாலும் இதே விலை தான். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளிடம் அதிகமாக பணம் வாங்குவது உண்டு – இங்கே அப்படி இல்லை என்று சொல்லலாம்! நல்ல பெரிய இளநீர் கூட முப்பது ரூபாய்க்கு தருகிறார்கள்.  இங்கேயிருந்து இளநீர் எல்லாம் குடித்த பின் புறப்பட்ட நாங்கள் நேராக வந்து சேர்ந்தது எங்கள் தங்குமிடமான ராதாகிருஷ்ணா ரிசார்ட் தான்.  பயணத்தின் மூன்றாம் நாளான அன்று சொகுசுக் கப்பல் பயணம், காலா பத்தர் கடற்கரை, ராதா நகர் கடற்கரை என மிகவும் ரம்மியமான இடங்களுக்குச் சென்று வந்த மகிழ்ச்சியுடன் அறைக்குத் திரும்பினோம்.  கடலில் குளித்தவர்கள் அனைவரும் அறைக்குத் திரும்பி மீண்டும் குளிக்க வேண்டும்! என்ன தான் அங்கே நல்ல நீரில் குளித்தாலும் நம் அறையில் வந்து குளிப்பது போல ஆகாது அல்லவா?   






இனிய நினைவுகளோடு திரும்பிய நாங்கள் அறைக்கு வந்த பின்னர் என்ன செய்தோம், எங்கே சென்று வந்தோம் போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. படங்களைக் கணினியில் பார்க்க முடியாதது பெரிய குறை! ராதா நகர் என்றதும் எனக்கு சென்னை க்ரோம்பேட் நினைவு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி விரைவில் சரியாகட்டும். ராதா நகர், க்ரோம்பேட்டையில் என் நெருங்கிய உறவினர் ஒருவர் உண்டு ஸ்ரீராம்.

      நீக்கு
  2. உணவு தயாராக தாமதமாகிறது என்கிற உணர்வே பசியை அதிகப் படுத்தி விடும்!!! இதுமாதிரி சமயங்களில் உணவு வகைகள் கம்மியாக இருப்பதும் நல்லதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு தயாராக தாமதமாகிறது என்கிற உணர்வே பசியை அதிகப் படுத்தி விடும் - உண்மை தான் ஸ்ரீராம். பொதுவாக உணவு வகைகள், பயணங்களில் குறைவாக இருப்பதே நல்லது.

      நீக்கு
  3. அதுதானே...

    நல்ல இடங்களில் ஏதாவது குறையாக வைக்கா விட்டால் நம்ம ஆட்களுக்குத் தூக்கம் வராது...

    கடற்கரை மணலில் நண்டுகளின் கோலங்கள் அழகு....

    படங்கள் அத்தனையும் அழகு...
    வாக்ஷ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இடங்களில் ஏதாவது குறையாக வைக்காவிட்டால் - உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா. சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் நல்லது.

      நண்டுகளின் கோலங்கள் - நிறைய படங்கள் எடுத்திருந்தேன். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  4. அழகிய படங்கள் அந்தமானை பார்க்க தூண்டுகிறது தங்கள் பயணக்கட்டுரை பலருக்கு நிறைவைத் தருவது யாம் அறிந்ததே
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் அந்தமான் பயணம் விரைவில் வாய்த்திடட்டும் யாழ்பாவாணன் ஐயா.

      பயணக் கட்டுரைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. மோடியை விட அதிகம் பயணம் போன பதிவர் நீங்களாகத்தான் இருக்கும். தங்கள் பதிவை வாசிக்க ஆரம்பித்துவிட்டால் மந்திரித்து விட்ட ஆடு போல பதிவை வாசித்துக் கொண்டு போகிறோம். அத்தனை அருமை. நான் இலங்கைக்கு உள்ளேயே சுற்றியது கிடையாது. இந்தியா வருவதெல்லாம் கனவில் கூட நடக்குமா என்று தெரியவில்லை. ஆகவே தங்கள் எழுத்து தான் எனக்கு கால இயந்திரமாக இருக்கிறது. தொடருங்கள், தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோடியை விட அதிகம் பயணம் போன பதிவர் - ஹாஹா... அப்படி ஒன்றும் இல்லை சிகரம் பாரதி. இந்தியாவிலேயே நான் பார்க்க வேண்டிய இடங்கள் எண்ணிலடங்காமல் உண்டு.

      உங்களுக்கும் இந்தியப் பயணம் அமைய வாழ்த்துகள். எனக்கு வெளிநாட்டுப் பயணம் செய்ய வாய்ப்பில்லை நண்பரே.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை பொது அல்லது அரசியல் என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலை ஓலை, எழுத்தாணி - உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் சிகரம் பாரதி.

      நீக்கு
  7. நண்டுகள் வரைந்த ஓவியங்கள் மிகவும் பிடித்தது... அழகிய கடற்கரையின் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்டுகள் வரைந்த ஓவியங்கள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  8. படங்கள் அழகாக வந்திருக்கின்றன. அதிலும் 14 ஆவது படம் மிகச்சிறப்பு. 1/3 ரூல், வெள்ளி தங்க ரேகைகள்,  silhouthe ஆக ஒரு மூலையில் இரண்டு பெண்கள் என்று சரியாக செட் செய்து உள்ளன. பாராட்டுக்கள். நண்டு வலையில் இருந்து எட்டிப்பார்க்கும் படமும் நன்றாக உள்ளது. நண்டு வரும்வரை எவ்வளவு நேரம் பொறுமையுடன் காத்திருந்தீர்களோ 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நண்டு வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. காலடி சப்தம் கேட்டால் கூட உள்ளே உடனே சென்று விடுகின்றதே!

      நீக்கு
  9. நண்டுகளின் அலப்பறை எவ்வளவு அழகாக இருக்கிறது பதிவு வழக்கம் போல சுவாரஸ்யம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்டுகளின் அலப்பறை - ஆஹா... உங்களுக்கும் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  10. நேருவின் மேற்கோளை அதிகம் ரசித்தேன். நேருவின் நூல்களைப் படிக்கும்போதே இந்த உணர்வு வந்துவிடும். அதனை நான் உணர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. ராதா நகர் கடற்கரை மிக அழகு.
    நண்டுகள் மணலில் மிக அழகாய் ஓவியம் வரைந்து இருக்கிறது அதை நீங்கள் வெகு அழகாய் படம் எடுத்து இருக்கிறீர்கள்.

    சூரியன் அஸ்தமிக்கும் காட்சிகள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா நகர் கடற்கரை காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  12. ராதா நகர் கடற்கரைக்கு எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள். சூரிய அஸ்தமன காட்சிகளும், மணலில் நண்டு வரைந்த கோலங்களும் வெகு அழகு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா நகர் கடற்கரை காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      நண்டு வரைந்த கோலங்கள் - ரொம்பவே அழகு - நிறைய ப்டங்கள் எடுத்தோம்.

      நீக்கு
  13. போகாத இடங்கள் என்றாலும் போய்வந்த உணர்வு உங்கள் பதிவுகளாலு ஏற்படுவது உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுகளுக்கு நன்றி முரளிதரன்.

      உங்களுக்கும் அந்தமான் சென்று வர வாய்ப்பு அமையட்டும்.

      நீக்கு
  14. வாசகம் மிக மிக அருமை மற்றும் பொருத்தமான ஒன்று.

    முதல் படமே அட்டகாசம். தக தகவென கடல் என்ன அழகு. இதில் தான் அலைகள் கொஞ்சம் தெரிகிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், தகதகவென மின்னும் கடல் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  15. கடற்கரை படங்கள் அழகு. நண்டுகள் வரைந்திருந்த ஓவியங்கள் அழகு.

    அடிக்கடி இளநீர் குடிக்கிறீர்களே... அங்கு பாத்ரூம் வசதிகளெல்லாம் நன்றாக இருந்தனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரை படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      பாத்ரூம் வசதிகள் சில இடங்களில் நன்றாகவே இருந்தன. ஒன்றிரண்டு இடங்களில் சரியில்லை. அதையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  16. ஜி! படங்கள் அத்தனையும் அட்டகாசம். மாலை நேரத்துச் சூரியன் கடற்கரை தங்க நிற ஜொலிப்பு, நண்டுகளின் ஓவியங்கள் அத்தனையும் ரொம்ப அழகாக வந்திருக்கின்றன. நிறைய படங்கள் எடுத்திருப்பீங்களே...கடற்கரை எத்தனை முறை பார்த்தாலும் அழகுதான் வித்தியாசமாகத்தான் இருக்கும். மிகவும் ரசித்தேன் ஜி.

    பயண விவரணங்களும் சிறப்பு. உணவு தாமதமாகக் கிடைக்கும் போதுதான் வயிறு இன்னமும் கத்தும் பசிக்குதுன்னு ஹா ஹா ஹா..

    ஆமாம் ஜி இப்படியான இடங்களில் மனிதர்கள் கேமராவுக்குள் சிக்காமல் படம் எடுப்பது மிகவும் சிரமம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. ஆமாம் நிறைய படங்கள் எடுத்திருந்தேன். எல்லாவற்றையும் இங்கே பகிர்ந்து கொள்ள முடியாதே. தவிரவும், குழுவினருடன் எடுத்த படங்களை பெரும்பாலும் வெளியிடுவதில்லை. நான் மட்டும் தனியாக இருக்கும் படங்களை அவ்வப்போது வெளியிடுவதுண்டு.

      சக மனிதர்களை கேமரா பார்வையில் சிக்காமல் எடுப்பது கடினம் தான். அதற்கென மெனக்கெட வேண்டியிருக்கும்.

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. ராதா நகர் கடற்கரை மிகுந்த அழகுடன் ஜொலிக்கிறது. படங்கள் அனைத்தும் கண்கொள்ளா காட்சியாக உள்ளன. இயற்கை படங்களும். சூரியன் தன் செங்கதிர்களால் வானத்தை அழகுபடுத்தும் படங்களும் அருமையாக உள்ளன. நண்டுகளின் புள்ளியிடாத இழை கோலங்களும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றன.

    நீங்கள் விவரித்திருக்கும் அழகில் கடல் படங்கள் ஒவ்வொன்றும் இன்னமும் சூரிய ஜொலிப்புடன் காட்சியளிக்கிறது.உணவின் வகைகளும் நன்றாக உள்ளது. அனைத்துப் பகிர்வினுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம், படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நண்டுகளின் புள்ளியிடாத இழை கோலங்கள் - ஆஹா நன்றாக இருக்கிறது உங்கள் விவரிப்பு.

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  18. கடல்ப் படங்கள் மிக அழகு.. நண்டின் கூடும், கால் அடையாளமும் அழகோ அழகு.. அங்கு நண்டு பிடிக்கத் தடை போலும், இவ்ளோ சுகந்திரமாக உலாவுகிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்டு பிடிக்கத் தடை - இருக்கலாம்! இங்கே குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி தருகிறார்கள் அதிரா.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  19. கடற்கரை அழகுதான் ... ஆனால் அந்த கடற்கரையையே மேலும் அழகூட்டுபவை அந்த நண்டுகள் தன் வீடுகளின் முன்னால் போட்டு வைத்திருக்கும் அந்த 18,000 புள்ளி கோலங்கள்தான்... அருமை!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்டுகள் போட்டு வைத்திருக்கும் 18000 புள்ளி கோலங்கள்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  20. கடற்கரை படங்கள் அருமை. அங்குள்ள நண்டுகளையும் தாங்கள் விடவில்லையே. பாவம் அந்த நண்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரை படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

      பாவம் அந்த நண்டுகள் - :)

      நீக்கு
  21. ஆசியாவின் அழகிய கடற்கரையில் நான்காம் இடம் சிறப்புதான்.

    மாலை காட்சி அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....