வெள்ளி, 17 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – நகர் வலமும் இரவு உணவும்…

அந்தமானின் அழகு – பகுதி 21



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.
 
If you can’t fly, then run.
If you can’t run, then walk.
If you can’t walk, then crawl,
but by all means, keep moving – Martin Luther King Jr.



ராதா நகர் கடற்கரையிலிருந்து திரும்பிய எங்கள் குழுவினர், அவரவர் அறைக்குச் சென்று குளித்து கொஞ்சம் ஓய்வு எடுத்தனர்.  நானும் ஒரு குளியல் போட்டு, அறையில் இருக்க, நண்பர் ஒருவரின் அழைப்பு – தங்குமிடத்தில் இருக்கும் உணவகத்திற்கு வரச் சொல்லி! அறையிலேயே தேநீர்/காஃபி தயாரித்து அருந்த வசதி இருந்தாலும் தேநீர் அருந்தலாம் என உணவகத்திற்கு அழைத்தார்.  அங்கே சென்றால், தேநீருடன் பக்கோடாவும் காத்திருந்தது – பனீர் பகோடா, வெங்காய பக்கோடா என இரண்டு மூன்று வகை பகோடாக்கள்! நண்பர் எல்லா உணவினையும் ரசித்து ருசித்து சாப்பிடுபவர் – அதைச் சிலாகித்துச் சொல்பவர் என்பதால் அவர் நன்றாக இருக்கிறது எனச் சொன்னால் நம்பி சாப்பிடலாம்! நானும் நண்பர் குடும்பத்தினரும் அங்கே இரண்டு மூன்று விதமான பகோடாக்கள் சாப்பிட்டு தேநீர் அருந்தி அறைக்குத் திரும்ப குழுவில் இருந்த மற்றவர்களும் அவரவர் வேலைகளை முடித்து அறைக்கு வெளியே இருந்த சிட் அவுட் பகுதிக்கு வந்தார்கள்.  ஒவ்வொருவரிடமும் பேசிக் கொண்டும், அன்றைய நிகழ்வுகளை வைத்து கலாய்த்துக் கொண்டும் இருந்ததில் நேரம் இனிமையாகச் சென்றது. 



பெரும்பாலான சுற்றுலாப் பயணங்களில், அடுத்து அடுத்து என எதையாவது ஓடி ஓடி பார்த்துக் கொண்டிருப்பது பலருடைய வழக்கம்.  இந்த அந்தமான் சுற்றுலா அத்தகைய சுற்றுலா அல்ல! கடற்கரை, ஊர் சுற்றல், உணவு கூடவே எல்லோரும் கூடி அமர்ந்து அரட்டை என அவரவர் கவலைகளை மறந்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சுற்றுலா.  ஒவ்வொரு நாளும் இடங்களைச் சுற்றிப் பார்த்து தங்குமிடம் திரும்பி கொஞ்சம் ஓய்வு எடுத்த பிறகு, ஏதாவது ஒரு அறையில் குழுவாகச் சேர்ந்து அன்றைய தினத்தின் நிகழ்வுகளைப் பற்றி பேசுவதோடு, அடுத்த நாள் என்ன திட்டம் என்பதையும் பேசுவோம்.   ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக இந்தக் கூட்டங்கள் உண்டு.  நானும் நண்பரும் அடுத்த நாளின் திட்டங்களை எடுத்துச் சொல்வோம்.  ஒவ்வொரு நாளும் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்த சுமந்த் அல்லது அவரது ஊழியர் எங்களிடம் அடுத்த நாளுக்கான திட்டங்களைச் சொல்ல, அதை நாங்கள் குழுவினரிடம் விவரமாகச் சொல்லி விடுவோம்.  அதன் பிறகு அரட்டை தொடர்ந்து நடக்கும்.  ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்ளும் சமயத்தில் எங்கள் சிரிப்பும் தங்குமிடம் அதிரும் அளவிற்கு இருக்கும். 



சில சமயங்களில் எங்களில் ஒருவரே, நம் சிரிப்பும் பேச்சும் அடுத்தவர்களுக்குத் தொல்லையாக இருக்கும் எனச் சொன்னாலும் எங்கள் அரட்டை தொடர்ந்து கொண்டு இருக்கும்.  இப்படியாக தொடர்ந்து அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இரவு உணவு தயாரான விவரத்தினை தங்குமிடத்தின் சிப்பந்தி வந்து சொல்ல, எங்கள் குழுவினர் அனைவரையும் உணவகத்திற்கு வரச் சொல்லி நாங்களும் அங்கே சென்றோம். பெரும்பாலான அந்தமான் உணவகங்களில் அசைவம் – குறிப்பாக மீன் உண்டு!  நாங்கள் முதலிலேயே சைவம் என்று சொல்லி விட்டதால் அங்கே சைவம் மட்டுமே! அதுவும் எடுத்தூண் முறையில் சைவம் மட்டுமே வைக்கிறார்கள்.  வழக்கமான தவா ரொட்டி, தால், சப்ஜி, சாதம், சலாட், இனிப்பு வகையில் ஏதோ ஒன்று என அனைவருக்கும் தகுந்த மாதிரி உணவு தான் இரவு வேளைகளில்.  சில இடங்களில் ரொட்டி ஒருவருக்கு இரண்டு மட்டுமே என்ற கணக்கும் இருக்கிறது! இல்லையென்றால் ஏகப்பட்ட ரொட்டிகளை அடுக்கி சாப்பிட்டு விடுகிறார்கள் என ஒரு உணவகச் சிப்பந்தி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் – குறிப்பாக வட இந்தியர்கள்! வட இந்தியர்களுக்கு சாதம் அவ்வளவாக பிடிப்பதில்லை!



நாங்கள் தங்கிய அதே நாளில் தங்குமிடத்தில் இன்னும் சில சுற்றுலாப் பயணிகளும் அங்கே இருந்தார்கள்.  எங்கள் குழுவினரே அதிக எண்ணிக்கையில் என்பதால் எங்களுக்குப் பிறகு அவர்களுக்கும் உணவு தந்தார்கள்.  பொறுமையாக எங்களுக்குத் தேவையானதைக் கேட்டு, பகிர்ந்து கொண்டதோடு அவ்வப்போது உணவு பிடித்திருக்கிறதா என்பதையும் கேட்டுக் கொண்டார்கள் உணவகச் சிப்பந்திகள்.  நாங்களும் தேவையான உணவு வகைகளை எங்கள் தட்டுகளில் எடுத்துக் கொண்டு இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்து அரட்டை அடித்தபடியே உணவு உண்டோம்.  இந்த மாதிரி பயணங்களில் வீட்டு வேலைகள் எதுவும் இல்லை என்பதே பலருக்கும் பிடித்த விஷயம் – அதுவும் அடுத்தவர் சமைத்து நமக்குக் கொடுக்க, அதை ரசித்து ருசித்து சாப்பிடுவது மிகவும் பிடித்ததாக இருக்கும்! தினம் தினம் இப்படியே வேலைகள் செய்து கொண்டிருப்பதிலிருந்து ஒரு விடுதலை! பயணத்தில் இருக்கும் நாட்கள் அந்த வகையில் பல பெண்களுக்கும், சில ஆண்களுக்கும் (!) விடுதலையை உணரும் நாட்கள்! ரசித்து ருசித்து உணவு உட்கொண்டபிறகு அவரவர் அறைக்குத் திரும்பினோம் – அடுத்த நாள் காலை எத்தனை மணிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்ற தகவலை குழுவினருக்குச் சொன்ன பிறகு தான்!



நானும் சில நண்பர்களும் இரவு உணவுக்குப் பிறகு ஸ்வராஜ் த்வீப் தீவில் காலாற நடந்து வர புறப்பட்டோம்.  பெரும்பாலும் அந்தமானின் தீவுகளில் சூரியன் விரைவில் மறைந்து விடுவதால், அனைவரும் கூடடைந்த பறவைகள் போல ஆகிவிடுகிறார்கள். தெருக்களில் ஆள் நடமாட்டம் ரொம்பவே குறைவு – எங்கோ ஒன்றாக இருக்கும் கடைகளும் கூட மூடி விடுகிறார்கள். ஆனாலும் அந்த இரவிலும் வெளியே சுற்றி வருவதில் எந்த வித பயமும் தேவையில்லை.  நீண்ட தூரம் நடந்து அங்கே இருக்கும் சூழலை ரசித்துக் கொண்டே நடந்தோம். கூடவே பேச்சும் தொடர்ந்து கொண்டிருந்தது.  அழகான தீவு – இங்கே தேவையான மின்சாரம் கூட தீவிற்குள்ளேயே அமைத்திருக்கும் ராட்சத டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்து விநியோகிக்கிறார்கள்.  சிறிய தீவுதான் – மக்கள் தொகையும் குறைவு – ஆனால் இங்கே இருக்கும் தங்குமிடங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையான டீசல் இல்லாதபோது பற்றாக்குறை உண்டாகிறது.  டீசல் தேவைகள் அனைத்துமே மெயின் லேண்டிலிருந்து வர வேண்டும் – கப்பல் மூலம் வரும் டீசலை தீவிற்குள் இருக்கும் லாரிகள் மூலமும், பெரிய பெரிய Drum-கள் மூலமும் விநியோகிக்கிறார்கள்.




இங்கே இன்னும் ஒரு விஷயமும் இந்தத் தீவினைப் பற்றிச் சொல்ல வேண்டும். போர்ட் Bப்ளேயர் பகுதியில் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும், இந்த ஸ்வராஜ் த்வீப் தீவில் அதிகமாக இருப்பது பெங்காலிகள் தான். அதனால் எங்கே பார்த்தாலும் பெங்காலி மொழி பேசுகிறார்கள்.  ஹிந்தியும் பேசினாலும், நமக்குத் தெரியாமல் பேச வேண்டுமெனில் பெங்காலியில் பேசிக் கொள்கிறார்கள். நமக்குக் கொஞ்சம் கொஞ்சம் பெங்காலி புரியும் என்றாலும் இடைவிடாது, வேகமாகப் பேசினால் புரிவது கடினமே.  நீண்ட தூரம் காலாற நடந்து சென்று தங்குமிடம் திரும்பினோம்.  இயற்கைச் சூழலில் அமைந்த தங்குமிடத்தின் குடிலில் அன்றைய இரவு உற்சாகமாகக் கழிந்தது.  காலை நேரத்தில் பல வித பறவைகளின் இனிமையான குரல்கள் எங்களை துயிலெழுப்பும் வரை உற்சாக உறக்கம்.  அடுத்த நாள் – பயணத்தின் நான்காம் நாள் எப்படி இருந்தது, எங்கே சென்றோம் போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அந்தமான் தீவுகளுக்குச் சென்ற பயணம் பற்றிய தகவல்களும், செய்திகளும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து பயணிப்போம். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. இதுபோன்ற சுற்றுலாக்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீவர்தான். ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. சுற்றுலா அருமையாகச் சென்றுகொண்டிருக்கிறது.

    பயணங்கள் நண்பர்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்துபவை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலா அருமையாகச் சென்று கொண்டிருக்கிறது - நன்றி நெல்லைத் தமிழன்.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. அரட்டை இல்லாமல் பயணம் சிறக்காது...

    சமீப காலமாக காலை நேரத்தில் பல வித பறவைகளின் குரல்கள் இனிமையாக கேட்கிறது ஜி... சில பறவைகள் "என்ன வீட்டுக்குள்ளேயே இருக்கிறீங்க...?" என்று கேட்கிறது...! சில பறவைகள் "என்ன விதவிதமா சாப்பாடு எல்லாம் செய்றதில்லை போல..." என்று வருத்தப்படுகிறது... இன்னும் நிறைய இருக்கு ஜி... என்னைக்கு விடுதலை அடைந்து சுதந்திரமா நாமும் பறப்போமோ...? ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரட்டை இல்லாமல் பயணம் சிறக்காது - உண்மை தான்.

      காலை நேரத்தில் பறவைகளின் குரல்கள் கேட்பது அலாதியான விஷயம் தான் தனபாலன். இங்கேயும் இப்போது நான் தினமும் பறவைகளின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் - வாகன சப்தம் இல்லாமல் ஊரே அமைதியாக இருப்பதால் இன்னும் நன்றாகக் கேட்கிறது. வீட்டின் அருகே இருக்கும் ரிட்ஜ் பகுதியிலிருந்து மயில்கள் குரல் கூட கேட்க முடிகிறது.

      நீக்கு
  4. பயணம் சுவாரஸ்யமாக இருக்கிறது ஜி

    பெங்காலி என்பது பங்களாதேஷிகள்தானே ஜி ? அபுதாபியில் பங்க்ஸ் அல்லது மஞ்சப்பொடி என்று சொல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது - நன்றி கில்லர்ஜி.

      பெங்காலி - பங்க்ளாதேஷிகள் அல்ல - இங்கே இந்தியாவின் மேற்கு வங்காளத்தினைச் சேர்ந்தவர்களையும் பெங்காலிகள் என்று தான் அழைக்கிறார்கள்.

      நீக்கு
  5. நண்பர்களுடன் அரட்டையே நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அந்த நான்காம் புகைப்படத்தில் இருக்கும் மணல் சிற்பம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணல் சிற்பம் - குழுவில் இருந்த சிறுமிகள் கைவண்ணம் சொக்கன் சுப்ரமணியன்.

      அரட்டை - புத்துணர்ச்சி தருவதே.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பயண விவரங்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பயண அனுபவங்கள் மிக அருமை.வீட்டுவேலைகளில் விடுதலைமட்டும் இல்லாமல் நன்பர்களுடன் கலந்து பேசி கவலைகள் குடும்ப பொறுப்புகள் மறந்து ஜாலியாக அரட்டை அடித்து ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து சிரித்து என்று நீங்கள் சொன்னதை படிக்கும் போது எங்கள் கயிலை பயணம் நினைவு வந்தது.

    மணில் செய்த பிள்ளையார் அழகு.
    படங்கள் எல்லாம் அழகு.
    பயண அனுபவம் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      வீட்டு வேலைகளிலிருந்து இப்படி இடையே விடுதலை கிடைப்பது நல்ல விஷயம். அனைவருக்குமே பிடித்தமானதும் கூட.

      நீக்கு
  8. கடற்கரை மிக மிக அழகாக இருக்கிறது ஜி.

    அட! கடற்கரையில் மணலில் அழகான நம் தோழர். உங்கள் குழுவினர் கைவண்ணமா இப்படி மணல்ல அழகா வடிவம் செய்தார்களோ ஜி?

    உங்கள் தங்குமிடம் செமையா இருக்கு.

    நட்புகளோடு பேசி சிரித்து உரையாடி காலார நடந்து எல்லாம் எத்தனை நல்ல அனுபவம். ரிலாக்ஸேஷன். இப்படியான பயணம் என்பதே அதுதான்.

    நம் மனமும் இன்னும் பக்குஅவப்படும் பல அனுபவங்களினால்.

    படங்கள் எல்லாம் அழகோ அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரையின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      குழுவினர் கைவண்ணம் தான் அந்த மணல் பிள்ளையார் - நண்பர்களின் பெண்கள் செய்தார்கள்.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. விரிவான செய்திகளுடன் அழகான படங்கள்..

    காலார கடற்கரை மணலில் நடந்தது போல் இருக்கிறது...
    (தேநீர் மட்டும் நான் போட்டுக் குடித்துக் கொண்டேன்)..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலார ஒரு நடை - ரொம்பவே பிடித்தமானது துரை செல்வராஜூ ஐயா.

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. வெங்கட்ஜி கண்டிப்பாக இப்படியான பயணங்கள் மிக மிக ரிலாக்ஸ் செய்ய உதவும். அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் - கிச்சன் வேலை இல்லாமல், வீட்டு வேலை இல்லாமல் உணவு ரெடியாகக் கிடைப்பது - எல்லாம் நிஜமாகவே அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் ரொம்பவே ரிலீஃப் மனதிற்கும் உடலிற்கும் புது உற்சாகம் தெம்பு எல்லாம் வரும். நல்ல எனர்ஜைஸர்.

    வாசகம் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /கிச்சன் வேலை இல்லாமல், வீட்டு வேலை இல்லாமல் உணவு ரெடியாகக் கிடைப்பது// - கீதா ரங்கன் - எனக்கு இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரே ரொடீனாக இருப்பது நமக்கு மனச் சோர்வைத் தந்துவிடும். வெளி இடங்களுக்குச் செல்லும்போது நிச்சயம் ரிலாக்‌ஸ்ட் ஆக இருக்கும்.

      நான் என்னவோ வீட்டினரை வருடா வருடம் பிற இடங்களுக்கு கூட்டிச்செல்லவில்லை (இந்தியாவுக்கு வந்தது தவிர). அது ஒரு குறைதான். வெங்கட் பிளாக் படிக்கும்போது இது என்னை உறுத்துகிறது.

      நீக்கு
    2. ஆமாம் இந்த மாதிரி பயணங்கள் இடையிடையே தேவையான ஒன்று. சில மாதங்களாக எங்கேயும் போக முடியவில்லை. அதுவும் இப்போதைய நிலையில் எங்கேயும் போக முடியாமல் இருப்பதும் கடினமாகவே இருக்கிறது. தினம் தினம் அலுவலகம் வர வேண்டியிருக்கிறது!

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
    3. வீட்டினரை வருடா வருடம் பிற இடங்களுக்குக் கூட்டிச் செல்லவில்லை - குறை தான் - இனிமேல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு அழைத்துச் செல்லுங்கள் நெல்லைத் தமிழன். Better late than never!

      நீக்கு
  11. ஆஹா .. கடற்கரை மணலில் பிள்ளையாரு !!! ... இதை செதுக்கிய அந்த பிள்ளை யாரு ?... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுவில் இருந்த நண்பர்களின் மகள்கள் சேர்ந்து வடிவமைத்த மணல் பிள்ளையார் சிவா. வீடுகள் கூட அமைத்தார்கள். அது வேறு ஒரு கடற்கரையில்! அதுவும் பகிர்வேன் - வரும் பகுதி ஒன்றில்.

      நீக்கு
  12. அழகிய குடில்கள். மணல் பிள்ளையாரும் அழகுதருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடில்கள், மணல் பிள்ளையார் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....