வெள்ளி, 3 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ




அந்தமானின் அழகு – பகுதி 15


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றி, மீரா என்பவர் எழுதிய நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.

தொடங்கும் கவிதையை
என் ஊரில் இருந்தே தொடங்குகிறேன்…

பரபரப்பான முகங்களுடன்
நான் கண்ட சாலை எல்லாம்,  
அமைதி தவழும் புன்னகையுடன்
உறங்கக் கண்டேன்…

வாகனம் இல்லா வீதிகளில்,
விதிகள் மாற பயணிகள்…

புகை மணமில்லா,
நறுமணம் மிக்க தேநீர்…

அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகாலை பயணம்…






சென்ற பகுதியில்  ஸ்கூபா டைவிங் மற்றும் சீ வாக் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்.  அற்புதமான அனுபவங்கள் இந்த நீர் விளையாட்டுகள்.  விட்டால் அப்படியே தண்ணீருக்குள் இருந்து விடலாம் என்றே தோன்றும் – ஆனாலும் அதில் இருக்கும் கஷ்டங்களை எங்களுக்கு வழிகாட்டி/பயிற்சியாளராக வந்தவர்களைக் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்கள்.  நமக்கு விளையாட்டு – அவர்களுக்கு அது தான் வாழ்க்கையே! எங்களது ஸ்னார்க்ளிங் முடிந்த பிறகு சிறிது நேரம் கடற்கரையில் அரட்டையும் ஓய்வும். அதன் பிறகு நாங்கள் வந்த இரண்டு படகுகளில் ஒன்று தயாராக இருந்தது – எங்களை போர்ட் Bப்ளேயர் தீவிற்கு அழைத்துச் செல்ல! மரீனா 2 - அது தான் எங்களது படகு.  இரண்டு குழுவாகத் தான் நாங்கள் வந்திருந்தோம் – அதாவது படகுகளில்! ஒரே படகில் எங்கள் குழுவிலிருந்த அனைவருமே பயணிக்க முடியாது என்பதால் இரண்டு படகுகள்.



விளையாட்டுகளை முடித்து தயாராக இருந்த பத்து பேர் மட்டும் நார்த் Bபே தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் நோக்கி புறப்படலாம் என படகோட்டி சொல்ல, எங்களில் பத்து பேர் மட்டும் முதலில் பயணித்தோம். மற்றவர்கள் அடுத்த படகு வரும் வரை காத்திருந்து திரும்புவார்கள்.  நார்த் Bபே தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் வரையான படகுப் பயணம் சுகமாக இருந்தது.  சற்றே தொலைவு அதிகம் என்பதால் (முதலில் நேரடியாக நார்த் Bபே செல்லாமல் நடுவில் Bபோஸ் தீவு வழி சென்றோம் எபதை நினைவில் கொள்க!) எங்கள் படகினைச் செலுத்திய நண்பர்கள் எங்களது பயணத் தகவலை கடற்படை கட்டுப்பாட்டு அறைக்குச் சொன்ன பிறகு பயணத்தினை தொடங்கினார்கள்.  சுகமான பயணம். நாங்கள் காலையில் புறப்பட்ட படகுத் துறைக்கு வந்து சேர்ந்தோம்.  அங்கே ஒரு விளையாட்டு களைகட்டியிருந்தது.  அந்த விளையாட்டு ஜெட் ஸ்கீ! கடலின் மேல் பரப்பில் ஒரு பைக் – அதனை நீங்கள் ஓட்டலாம்! உங்களுக்குப் பின்னே நின்றபடியே ஒருவர் வழிகாட்டியாக நம்முடன் வருவார்.  அதில் சிலர் ரொம்பவே உல்லாசமாக சென்று கொண்டிருந்தார்கள். 



ஜெட் ஸ்கீ மூலமாக கடலின் மீது நீங்கள் வாகனத்தினை ஓட்டிச் செல்லலாம் – ஒன்று, ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை கடல் மீது பயணித்து கரை திரும்பலாம்! இந்த ஜெட் ஸ்கீ செய்ய கட்டணம் 600 ரூபாய் மட்டுமே.  பலரும் இந்த ஜெட் ஸ்கீயை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  முதல் பத்து பேரில் நான் மட்டுமே இந்த விளையாட்டை விளையாடலாம் என முடிவு எடுத்தேன் – மற்றவர்கள் தயாராக இல்லை என்பதால் என்னுடைய கேமராவினை அவர்களிடம் கொடுத்து விட்டு, ஜெட் ஸ்கீ செய்வதற்கான கட்டணத்தினைச் செலுத்தி, வரிசையில் காத்திருந்தேன்.  ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தான் இந்த ஸ்கீ! ஆனால் அதற்கு பெரிய வரிசை.  ஒவ்வொருவராக அந்த பைக்கில் ஏறிக் கொள்ள அதைச் செலுத்தும் வழிகாட்டி பின்னால் ஏறிக் கொண்டு முதலில் அவர் ஓட்டுகிறார்.  ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு உங்கள் கையில் வண்டியைச் செலுத்தும் விசையைத் தர, நீங்கள் தான் அந்த ஜெட் ஸ்கீயை ஓட்டப் போகிறீர்கள்!  பெண்களும், ஆண்களுமாக நிறைய பேர் இந்த விளையாட்டை உற்சாகத்துடன் செய்து கொண்டிருந்தார்கள். அதிலும் இளம்பெண்கள் வந்தால், ஜெட் ஸ்கீ பின்னால் நிற்கும் இளைஞர்களுர்களுக்கு உற்சாகம் கொப்பளித்துக் கொண்டு வந்து விடுகிறது – உற்சாகத்தில் வேகமும், சாகசமும் சேர்ந்து கொள்ள அப்படி ஒரு குதூகலம் தான்! வளைத்து நெளித்து ஓட்டி, சாகசம் செய்கிறார்கள்.



என் முறை வந்ததும் நானும் படிக்கட்டுகள் வழி கீழே இறங்கிச் சென்று பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு Bபைக்கில் ஏறிக்கொள்ள என்னுடன் வந்தவர் அதைச் செலுத்தினார்.  கடலுக்குள் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு செலுத்துவதற்கான Accelerator என் கைக்கு வர நானும் வேகமாக ஓட்டினேன். இரு புறமும் கடல் நீர் தெறிக்க, காற்றைக் கிழித்துக் கொண்டு போவது போல, கடல் நீரை தெறிக்க விட்டுக் கொண்டு போகும் ஒரு உற்சாகப் பயணம். ரொம்பவே நன்றாக இருந்தது இந்த வேகமான பயணம்.  வேகம் விவேகம் அல்ல என்றாலும் இந்த வேகம் பிடித்துத் தான் இருக்கிறது. அதிலும் இந்த Bபைக்குகளை இயக்கும் சில இளைஞர்கள் ரொம்பவே அதிகமாக சாகச விளையாட்டுகளைச் செய்கிறார்கள் – வளைத்து, நெளித்து, சாய்த்து Bபைக் ஓட்டும்போது அவர்களுக்கு அதிக உற்சாகம் – முன்னால் அமர்ந்து இருப்பவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நிச்சயம் நடுக்கம் தான்.  கரையிலிருந்து கத்திக் கொண்டிருக்கிறார்கள் – ஓட்டுபவருக்குக் கேட்காது என்று தெரிந்திருந்தும் – “பாத்து, பாத்து, இவ்வளவு வேகம் வேண்டாம்” என்று கதறுகிறார்கள்! சில நிமிட உற்சாகப் பயணம் முடிந்து கரைக்குத் திரும்பினோம்.



என்னுடன் வந்தவர்களையும் போய் வாருங்கள் என்று சொன்னாலும் அவர்கள் தயாராக இல்லை! சரி குழுவினரில் மீதி இருப்பவர்கள் நார்த் Bபே தீவிலிருந்து வரும் வரை படங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் என காமிராவுடன் திரிந்தேன்.  அடுத்த படகும் வந்து சேர, அதில் வந்த குழுவினர்களில் சிலர் இந்த ஜெட் ஸ்கீ செய்ய முடிவு செய்தார்கள்.  அவர்களும் உற்சாக அனுபவத்தினைப் பெற்று கடலைக் கிழித்துப் பயணம் செய்தார்கள்.  இங்கே இன்னுமொரு தகவலும் உங்களுக்குத் தருகிறேன். இந்த ஜெட் ஸ்கீ செய்வதற்கான கட்டணம் 600 ரூபாய் என்று சொல்லி இருந்தேன். உங்களுக்கு இதில் அமர்ந்தபடி பயணம் செய்யும் போது படங்கள்/காணொளி எடுத்துக் கொள்ள விருப்பர்ம் இருந்தால், அதற்கும் இங்கே வசதி இருக்கிறது. 200 ரூபாய் கட்டணம் செலுத்தினால் சில பல படங்களும் சிறு காணொளியும் நீங்கள் ஜெட் ஸ்கீ செய்யும் போது எடுத்துத் தருகிறார்கள்.  படங்களும் காணொளியும் உடனுக்குடனாக உங்கள் அலைபேசியில் தரவேற்றம் செய்து தந்து விடுகிறார்கள் – இதற்காகவே காமிராவுடனும், கணினியுடனும் அங்கே சிலர் காத்திருக்கிறார்கள்.  எல்லாம் இங்கே உண்டு.  எத்தனை எத்தனை வசதிகள் – அதன் மூலம் பிழைக்கும் மனிதர்கள் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கிறாள் கடல் அன்னை!  




கடல் அன்னை மட்டும் இல்லாவிட்டால் இந்த விளையாட்டுகள் ஏது, இங்கே நிறைந்திருக்கும் படகோட்டிகள், வழிகாட்டிகள், சுற்றுலா நிறுவனங்கள் என எதுவுமே இருக்காது!  கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கே குப்பைகளை இடாமல், சுத்தமாக வைத்திருக்கலாம்! ஆனால் நம் சுற்றுலாப் பயணிகளும், அங்கே இருக்கும் மனிதர்களும் நிறையவே குப்பைகளை கடலுக்குள் வீசி விடுவதைப் பார்க்கும்போது சற்றே வருத்தம் தான். ஆனாலும் இவர்களை திருத்த முடிவதில்லை என்பது சோகமான விஷயம்.  குழுவினரின் விளையாட்டுகள் முடிந்த பிறகு மெதுவாக படகுத் துறையிலிருந்து காலையில் கட்டணம் கட்டிய இடத்திற்கு வந்து கணக்கு வழக்குகளை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தோம் – முன்பணம் கட்டிய விளையாட்டுகளில் சிலவற்றை பயன்படுத்தாததால், பணத்தினை திரும்ப வாங்க வேண்டியிருந்தது. ஆனால் எங்களால் வாங்க இயலவில்லை. நிறுவனத்தின் மூலம் வழிகாட்டியாக வந்தவர் பிறகு வாங்கிக் கொள்ளலாம் – சுமந்த் அவர்கள் பேசிக் கொள்வார் என்று சொல்லி விட, அனைவரும் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள், கிடைத்த அனுபவங்கள் பற்றி பேசிக் கொண்டே வாகனத்தில் தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.



இரண்டாம் தினத்தில் நிறுவனத்தின் மூலமாக செல்ல வேண்டிய அனைத்து இடங்களும் சென்று வந்த பிறகு மாலை நேரத்தில் தங்குமிடம் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். அதற்குப் பின்னரும் நீங்கள் நகர் வலம் வர நினைத்தால் அது உங்கள் இஷ்டம்! நீங்கள் நகர்வலம் வரலாம்! நானும் சில நண்பர்களுமாகச் சேர்ந்து சிறிது ஓய்வு எடுத்த பிறகு நகர்வலம் வந்தோம்.  அடுத்த நாள் பயணம் எங்கே, அதற்கான முன்னேற்பாடுகள், பார்க்கப் போகும் இடம் என்ன என்பவற்றையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: இந்த முறை இணைத்திருக்கும் படங்கள் நான் எடுத்தவையே!.  

30 கருத்துகள்:

  1. கவிதை நன்று.  

    நீங்கள் கடலில் பைக் ஓட்டியதை நண்பர்கள் கூட யாருமே படம் பிடிக்க முயலவில்லையா?  நீங்களாவது இனிய நினைவுகளுக்கு கட்டணம் செலுத்தி எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நான் பைக் ஓட்டியபோது DSLR வைத்திருந்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லை. அலைபேசியில் எடுத்த படம் ஒன்றினை உங்களுக்காக இப்பதிவில் சேர்த்திருக்கிறேன்! பதிவில் இரண்டாவது படம்!

      இனிய நினைவுகள் தான். கட்டணம் செலுத்தி எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம் - லாம்! அப்போது தோன்றவில்லையே!

      நீக்கு
    2. மறுபடி வந்து பார்த்து விட்டேன். :))

      நீக்கு
    3. ஆஹா... மறுபடி வந்து பார்த்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வெங்கட்ஜி இனிய காலை வணக்கம்.

    கவிதை நல்லாருக்கு ஜி. இப்போதைய நிலைக்குப் பொருந்திப் போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. நேரடியாக நார்த் Bபே செல்லாமல் நடுவில் Bபோஸ் தீவு வழி சென்றோம் எபதை நினைவில் கொள்க!) //

    நினைவில் நன்றாகவே இருக்கிறது ஜி. முன்னரே சொல்லியிருந்தீங்களே. இப்படியான விஷயங்கள் மறப்பதில்லை ஆனால் வேறு பல விஷயங்களில் என் மறதி எங்கள் வீட்டில் மிகவும் பிராபல்யம்!!!!!! நமக்குப் பிடித்த விஷயங்கள் எளிதில் மறப்பதில்லை ஹா ஹா ஹா ஹா ஹா

    ஜெட்ஸ்கீ இது ஒரு ட்ரேட் மார்க் பெயர்தானே இல்லையோ ஜி. அப்படித்தான் கேட்ட நினைவு...கடலில் செய்ததில்லை இதையே வாட்டர் ஸ்கூட்டர் என்று வாட்டர் ஸ்போர்ட்ஸ் சென்னை கிஷ்கிந்தாவில் போயிருக்கிறேன். அப்போது அங்கு ஸ்கூட்டர் ஓட்டியாக நம்முடன் வருபவர் இப்போது தமிழ்ப்படங்களில் நகைச்சுவை நடிகர். அவர்தான் என் கைட் ஸ்கூட்டரில் அப்போது. அவர் பெயர் டக்குனு நினைவுக்கு வரவில்லை.

    நீங்கள் முதல் படத்தில் என்று முதலில் நினைத்தேன். இரண்டாவது படமோ? அப்புறம் மூன்றாவதில் நீங்கள் மறைந்திருக்கீங்களோ பாதுகாப்பாளரின் முதுகு தெரியுதே....அல்லது நீங்கள் படம் எடுக்கவில்லையா? முதலில் அந்த வீடியோ நீங்கள் ஓட்டியதாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் இல்லை...

    ஜி எடுக்காமல் விட்டுவிட்டீங்களோ? இதெல்லாம் பொக்கிஷங்களாச்சே. நல்ல நினைவுகள் பின்னாளில் நம்மை உற்சாகப் படுத்தி இனிமையாகும் நினைவுகள்.

    விவரணம் அருமை ஜி. நிறைய தகவல்கள். நோட்டட்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதி - ஹாஹா... பல சமயங்களில் மறதி நல்லது! எனக்கும் மறதி சில விஷயங்களில் உண்டு - குறிப்பாக பெயர்கள்! சந்திக்கும் பலரின் பெயர் மறந்து விடும். அவர்களாகவே நம்மிடம் வந்து மீண்டும் பேசும்போது பேந்த பேந்த விழிப்பேன் - பெயர் தெரியாமல்!

      அப்போதைய வழிகாட்டி - இப்போதைய நகைச்சுவை நடிகர் - யார் என்று எனக்கும் தெரியவில்லை.

      இரண்டாவது படம் தவிர வேறு எதிலும் நான் இல்லை - ஏனெனில் அந்தப் படங்களை எடுத்ததே நான் தான்!

      விவரங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  4. கவிதையும் புகைப்படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் கவிதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  5. பயண அனுபவங்கள் நன்று.
    படங்கள் நன்றாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  6. வாசிக்கும் போதே உற்சாகம் பிறக்கிறது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகம் - கடலில் பைக் ஓட்டும்போது இன்னும் அதிகம் உணரலாம் தனபாலன்.

      நீக்கு
  7. ஜெட் ஸ்கீ - இது பார்ப்பதுபோல அழகான விளையாட்டு அல்ல. ஆபத்தானது. என் அலுவலகத்தில் என்னுடைய பாஸ்களில் ஒருவர், இதனை தாய்லாந்தில் விளையாடி, இன்னொரு பைக்கின்மீது மோதி, இரு வாரங்களுக்குமேல் கட்டுக்கள் போட்டிருந்தார். ஓட்டும்போது கவிழ்ந்துவிட்டாலும் நமக்கு ஆபத்து. ஆனால் உற்சாகமானது (நான் ஓட்டியதில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நெல்லைத் தமிழன். பைக் செல்லும் பாதையில் படகுகள், மற்ற பைக்குகள், கப்பல்கள் மீது மோதாமல் ஓட்டுவது தான் நல்லது! கவிழ்ந்து விட்டாலும் ஆபத்து - தகுந்த பாதுகாப்பு உடைகள் உண்டு. காப்பாற்ற படகுகளும் உண்டு! இருந்தாலும் இந்த த்ரில் அனுபவம் ஒரு வித மகிழ்ச்சி தானே!

      நீக்கு
  8. அருமை. சிறப்பு. உங்கள் எழுத்துகள் காட்சிகளை நேரடியாக கண்முன் நிறுத்துகின்றன. ஒரு வகையில் பொறாமையாக இருக்கிறது. அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்லவே நேரமில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க நேரம் அமையட்டும் சிகரம் பாரதி.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  10. பயணம் பற்றிய கவிதையும், படமும், படங்களின் விவரமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராஜி.

      நீக்கு
  11. //இரு புறமும் கடல் நீர் தெறிக்க, காற்றைக் கிழித்துக் கொண்டு போவது போல, கடல் நீரை தெறிக்க விட்டுக் கொண்டு போகும் ஒரு உற்சாகப் பயணம். //

    உற்சாகப் பயணத்தை நீங்களும் செய்து விட்டீர்கள் மகிழ்ச்சியான தருணம் தான்.

    //கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கே குப்பைகளை இடாமல், சுத்தமாக வைத்திருக்கலாம்! ஆனால் நம் சுற்றுலாப் பயணிகளும், அங்கே இருக்கும் மனிதர்களும் நிறையவே குப்பைகளை கடலுக்குள் வீசி விடுவதைப் பார்க்கும்போது சற்றே வருத்தம் தான்.//

    படிக்கும் போதே வருத்தமாய் இருக்கிறது குப்பை கொட்டுவதில் என்ன ஆனந்தமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிம்மா... உற்சாகப் பயணம் செய்தது மகிழ்ச்சி அளித்தது.

      குப்பை கொட்டுவதில் என்ன ஆனந்தமோ? பலரும் இதே தவறை செய்வது இன்னும் வருத்தம் அளிக்கிறது.

      நீக்கு
  12. அதிகாலை பயணக் கவிதையும், காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  13. இங்கும் இந்த மாதிரி கடல் பைகை மக்கள் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் ஒட்டியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் இந்த மாதிரி வசதிகள் உண்டு சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      இங்கே தான் நானும் முதல் முறை சென்றேன்.

      நீக்கு
  14. இனிய அனுபவமாக இருந்திருக்கும். பகிர்ந்ததில் நாங்களும் கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மாதேவி. இது ஒரு இனிய அனுபவமே.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....