எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, June 16, 2016

நள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 18

படிக்கட்டுகள் வழியாக தங்குமிடம் சென்று சேர்ந்ததும், அங்கே இருந்த மனிதரிடம் கேரள நண்பர் முன்பதிவு செய்திருப்பதைச் சொல்ல, அவர் மலையாளத்தில் சம்சாரிக்க ஆரம்பித்தார்! நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர் கொஹிமாவில் தங்குமிடம் வைத்திருப்பது ஒரு மலையாளி – அதை நிர்வகிப்பதும் ஒரு மலையாளி! எங்கள் அறைகளுக்கான சாவிகளைக் கொடுத்து இரவு உணவும் தயாரித்து வைத்திருப்பதைச் சொன்னார். அறைக்குச் சென்று உடைமைகளை வைத்து விட்டு பயண அலுப்பு தீர ஒரு குளியல் போட்டு வருகிறோம் என்று சொல்லி மேலே சென்றோம்.

அதற்குள் நாகாலாந்து அரசுத் துறையில் பணி புரியும் நண்பரும், தங்குமிடம் ஏற்பாடு செய்தவருமான கேரள நண்பர் அலைபேசியில் அழைத்து இன்னும் பதினைந்து நிமிடங்களில் வருகிறேன் எனச் சொல்ல, விரைவில் தயாரானோம்.

சென்ற பதிவினை முடிக்கும் போது “அவர்களது அவசரம் அவர்களுக்கு!என்று சொல்லி இருந்தேன். பதிவினைப் படித்த பலருக்கும் ஏதேதோ யூகம் இருக்கலாம்!  என்ன அவசரம் என்பதை நான் சொல்லி விடுகிறேன். யூகித்தது சரியா என அவர்கள் சொல்லட்டும்.....


 படம்: இணையத்திலிருந்து......

பயணத்தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல இந்தப் பயணத்தில் மொத்தம் ஐந்து பேர் – நான், பிரமோத் மற்றும் பிரமோதின் மூன்று கேரள நண்பர்கள்.  அந்த மூவருக்கும், இப்படி சுற்றுலா செல்லும் போது தினமும் மது அருந்த வேண்டும் – அது இல்லாமல் இருக்க மாட்டார்கள். மாலை நேரம் தங்குமிடம் வந்து மது அருந்தி, கொஞ்சம் பழங்கதை பேசி தூங்க வேண்டும்! எனக்கும் நண்பர் பிரமோதுக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாததால் நாங்கள் இருவரும் வெளியே சுற்றுவதோ, இல்லை அன்றைய தினம் பார்த்த இடங்கள், மனிதர்கள், அனுபவங்கள் பற்றி பேசுவதோ வழக்கம்.

புதிய இடத்திற்குச் செல்கிறோம், அதுவும் பிரச்சனைகள் நிறைந்த இடத்திற்குச் செல்கிறோம், வெளியே சென்று குப்பி வாங்க முடியுமா? முடியாதா? என்ற கவலைகளோடு தான் அந்த மூவரும் இருந்தார்கள்.  விரைவாக நகருக்குள் சென்று விட்டால் குப்பி வாங்கி விடலாம் என்ற அவசரம் அவர்கள் மூவருக்கும்.

தண்ணி அடிப்பவர்களுக்கு ஒரு பழக்கம். எந்த ஊராக இருந்தாலும், மொழி தெரியாத இடமாக இருந்தாலும், எப்படியாவது பேசி எங்கே குப்பி கிடைக்கும் எனத் தெரிந்து கொண்டு வாங்கி விடுவார்கள். என்னுடன் வந்திருந்த மூன்று நபர்களும் இப்படித்தான்! மூவரில் ஒருவர் மட்டும் தட்டுத் தடுமாறி ஹிந்தி பேசுவார் – அவரை அழைத்துக் கொண்டு சென்று குப்பி வாங்கி விடுவார்கள். அறைக்கு வந்து குடித்த பிறகு உணவு உண்டு அவர்கள் மூவரும் ஒரு அறையில் இருக்க, குடிக்காத நாங்கள் இருவரும் வேறு ஒரு அறையில் உறங்குவோம்.

அறைக்குச் சென்று பெட்டிகளை வைத்தவுடன் தங்குமிடத்தின் நிர்வாகியைச் சந்தித்து குப்பி எங்கே கிடைக்கும் என விசாரிக்கச் சென்றுவிட்டார்கள்.  பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கடைகள் கிடையாது என்றும் வாங்குவது கடினம் என்றும் அவர் சொல்ல, காற்றிரங்கிய பலூன் போல வாடியபடி திரும்பினார்கள். அதற்குள் கொஹிமாவில் இருக்கும் அந்த கேரள நண்பர் வந்துவிட,  தங்குமிடத்திலேயே இருக்கும் உணவகத்திற்கு நாங்கள் வந்தோம்.

அண்டா புர்ஜி - முட்டைப் பொரியல்
படம்: இணையத்திலிருந்து....

வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு அவர் தனது ஓட்டுனரை அழைத்து வண்டியிலிருந்து எதையோ கொண்டு வரும்படிச் சொன்னார்.  கொண்டு வரச் சொன்னது – குப்பி! அந்த மூவருக்கும் முகம் மீண்டும் பிரகாசமானது..... அவர்கள் மூவரும் கொஹிமா நண்பரோடு அந்தக் குப்பி மதுவை காலி செய்த பின்னர், அனைவருமாக உணவு சாப்பிட்டோம்.  மெனு – சாதாரண மெனு தான் – சப்பாத்தி, DHதால், அண்டா புர்ஜி [முட்டைப் பொரியல்] மற்றும் மிக்ஸ் வெஜிடபிள்.  கொஹிமா நண்பர் விடைபெற, நாங்களும் அறைக்குத் திரும்பினோம்.

அன்றைய தினம் முழுவதும் அலைந்த அலுப்பு, பயணத்தின் அலுப்பு ஆகியவை எங்களை அழுத்த, அறைக்குத் திரும்பிய நாங்கள் உறக்கத்தினைத் தழுவினோம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை வெளியே கேட்ட சத்தங்கள் தொந்தரவு செய்ய, எழுந்து கூர்ந்து கவனித்தேன். எல்லா இடங்களிலும் இருட்டு – சத்தம் வெளியிலிருந்து வருவது புரிந்தது. சாலைப் பக்கம் இருந்த ஜன்னல்கள் வழியே பார்வையை ஓட்ட, வெளியே இரண்டு பேர் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் துரத்தியபடியே கைகளில் ஆயுதங்களோடு ஒரு கும்பல் ஓடிக் கொண்டிருந்தது!  

 படம்: இணையத்திலிருந்து......

புரியாத மொழியில் சத்தமாக கத்தியபடியே ஓடுகிறார்கள். ஒரு சிலர் கல்லெடுத்து முன்னால் ஓடுபவர்கள் மீது எறிகிறார்கள். அவர்களின் கூச்சல் கேட்டபடியே இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பயங்கர அலறல் சத்தம்........  முன்னால் ஓடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சிக்கி விட்டார் போலும்! காட்டுக் கூச்சலும், அடி வாங்குபவரின் ஓலமும் ஒன்று சேர்ந்து மனதைப் பிசைந்தது. அனைவரும் உறக்கத்தில் இருக்க தெருவின் எல்லையில் இருந்து வரும் மரண ஓலத்தினைக் கேட்டபடி நான் மட்டும் விழித்திருந்தேன். அதன் பிறகு உறக்கம் வரவில்லை.......

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

16 comments:

 1. இப்படி எல்லாம் கூட சம்பவங்களா! நான் யூகித்தது அவர்களின் அலைபேசியை சார்ஜரில் போடவேண்டும் என்பதாக இருக்கும் என்பது!

  இன்று தம வாக்கு சட்சட்டென விழுந்தது எல்லாத் தளங்களிலும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   சார்ஜரில் அலைபேசியை போட வேண்டும் - :) பலருக்கும் இந்த வேலை தான்.

   Delete
 2. நானும் ஏமாந்து போனேன்... இப்போ அந்த மாடினவருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குழப்பம்... தமிழ் சினிமாவில் வருவதுபோல் துரத்தி ஓடியவர்கள் அலறினாள் பரவாயில்லை !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 3. ஒருமுறை சுசிந்தரம் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று பேருந்தை விட்டு இறங்கியதும் கோவிலைநோக்கி நடந்தது. ஒரே ஒருவர் மட்டும் தனியாக கழன்று அக்கடா என்று நடந்து போய்க் கொண்டிருந்த என்னிடம் ஓடி வந்து 'டாஸ் மாக்' வழி கேட்டார். நான் கேட்காமலேயே "ஊரைவிட்டு வந்து நாலு நாளாகுது. நாக்கு நாம நமங்குது. கை நடுங்குது" ன்னு தெளிவுரை வேறு. (என்ன வெங்கட்! என்னைப் பார்த்தா 'டாஸ் மாக்' வழி சொல்கிற ஆள் மாதிரியாத் தெரியுது.)

  பதிவின் இறுதி பகுதியைப் படித்ததும் பயணக் கட்டுரை படிக்கிறோமா, இல்லை, ராஜேஷ் குமார் நாவல் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. //என்னைப் பார்த்தா டாஸ் மாக் வழி சொல்கிற ஆள் மாதிரியாத் தெரியுது???

   ஹாஹா... ஒரு வேளை அவருக்கு அப்படி தெரிஞ்சுருக்கும்!

   தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 4. திகில் படம் போல அல்லவா இருக்கிறது! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. திகில் படமே தான். அந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும்.....

   தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 5. என்னால் இந்த மாதிரி வன்முறைகளை யூகிக்கக் கூட முடியாது மாட்டினவன் என்ன தவறு செய்தானோ

  ReplyDelete
  Replies
  1. //மாட்டினவன் என்ன தவறு செய்தானோ?// அது தான் தெரியவில்லை.....

   தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. அப்படியும் இப்படியுமாக -
  இரவுப் பொழுதில் பற்பல அனுபவங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைகும் தொடர்வதற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. ஆஹா ஜி எங்கள் யூகம் சரியாகிப் போனது. இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் அந்த மூவரும் மது அருந்துவதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் பெரும்பான்மையான கேரளத்தவர்களின் வழக்கம் அது. எனவே நீங்கள் முன்பு சொன்னதையும் வைத்து யூகிக்க முடிந்தது. திகில் தான்...வடகிழக்குப் பயணம் குடும்பத்தோடு பயணிப்பது சற்று சிரமம்தான் போலும்.

  கீதா: நாகாலாந்தில் இப்படி நடப்பது ரொம்பவே சகஜம். மகனுடன் படித்த நாகாலாந்து நண்பர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. கணவர் சென்ற போதும்...

  தொடர்கின்றோம்...

  ReplyDelete
  Replies
  1. சரியாக யூகித்து விட்டீர்களே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....