புதன், 13 மே, 2020

அந்தமானின் அழகு – பரத்பூர் கடற்கரை – Bபனானா ரைடு…

Bபனானா ரைட்...
படம்: இணையத்திலிருந்து...


அந்தமானின் அழகு – பகுதி 30

 

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29  

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, கவிஞர் பிரியன் எழுதிய நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.

 

எத்தனை நாளாயிற்று

உன்னைப் பார்த்தென

ஆசையோடு நான் சென்று நின்ற வேளை…

 

சுடச்சுட சூரியனை

தின்று கொண்டிருந்தது கடல்…

 

ஆனாலும் மறக்கவில்லை

என் கால்களை வருடிக் கொஞ்ச…

 

பரத்பூர் கடறகரையில் நாங்கள் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைத்திருந்தபோது, அங்கே இருந்த படகோட்டி ஒருவருடன் இருந்த இளைஞர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார்.  அவர் ஒரு தமிழர் என்பதை முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன்.  அது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  முந்தைய பதிவுகளை படிக்காதவர்கள் மேலே உள்ள சுட்டிகளைத் தட்டி படித்து வரலாம்.  சரி இந்தப் பகுதிக்கு வருகிறேன்.  Bபனானா ரைடு போலாம் வாங்களேன் – ஒரு ஆளுக்கு 600 ரூபாய் என்று சொல்ல, குளித்துக் கொண்டிருந்த எங்களின் உடைமைகள் கரையில் இருந்த நண்பர்கள் வசம் இருப்பதைச் சொன்னோம்.  அதுனால என்ன சார், ரைடு முடிந்த பிறகு பணம் அவர்களிடம் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று சொன்னார்.  சரி Bபனானா ரைடுன்னா என்னப்பா அதையும் சொல்லிவிடு என்று அவரிடம் கேட்டுக் கொண்டோம்.  நல்ல ரப்பரில் நீண்ட வாழைப்பழம் போல ஒரு ட்யூப் – அதனுள் வாயு/காற்று அடைத்து வைத்து இருக்கிறார்கள்.  அதன் ஒரு முனையில் கயிறு கட்டியிருக்க அந்தக் கயிற்றின் மறுமுனை ஒரு மோட்டார் படகின் பின்னர் கட்டி இருக்கிறார்கள். 

 

அந்த Bபனானா மாதிரியான ரப்பர் ட்யூப் மீது ஐந்து முதல் ஆறு பேர் வரை அமர்ந்து கொள்ளலாம்.  கடைசியாக அங்கே இருக்கும் உதவியாளர் ஒருவர் அமர்ந்து கொள்வார்.  ஒவ்வொருவர் அமர்ந்து கொண்டதும் அவருக்கு முன்னால் கயிறு கொண்டு கைப்பிடி மாதிரி அமைப்பு உண்டு – அதனை நன்கு பிடித்துக் கொண்டு அமர்ந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.  எல்லோரும் அமர்ந்து கொண்டதும், பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்ள அந்த உதவியாளர் உங்களுக்கு உதவி செய்வார்.  பின்னர் அவரும் Bபனானா வடிவ ரப்பர் ட்யூபில் கடைசியாக ஏறி அமர்ந்து கொண்டு, நாம் செய்ய வேண்டியதை நமக்குச் சொல்லித் தருவார்.  அப்படி என்ன செய்ய வேண்டும் – கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் – அதைத் தவிர என்ன செய்ய வேண்டும் – சொல்லும்போது கயிற்றை விட வேண்டும்! அது எப்போது சொல்வார் – சொல்லும் போது நானும் உங்களிடம் சொல்கிறேன்!  ஏன் விடச் சொன்னார் என்பதையும் சொல்கிறேன் – எல்லாம் தயார் என்று சொன்ன பிறகு எங்களுடன் இருந்த உதவியாளர் படகை ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பரிடம் All Set சைகை காண்பிக்க படகு புறப்பட்டது!

 

படகுடன் இணைக்கப்பட்ட கயிறு நீண்ட கயிறு! படகு புறப்பட்ட உடன் நாங்கள் அமர்ந்திருந்த Banana-வும் கடலில் மிதந்தபடியே நகர்ந்தது.  படகின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நாங்களும் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பயணித்தோம். நடுநடுவே அலைகள் வர, Banana மேலும் கீழும் ஆடி எங்களை உற்சாகப் படுத்தியது! கூடவே கடல் அலைகள் எங்கள் மீது நீரை வாரி இறைக்க அப்படி ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு!  நாங்கள் மொத்தம் ஐந்து பேர் – முதலாவதாக நான் – அதன் பின்னர் எங்கள் குழுவினரில் நால்வர் – கடைசியாக உதவியாளர் – மொத்தம் ஆறு பேர் இருந்தாலும், அலைகள் அடிக்கும்போதும், படகு வேகத்தில் நாங்கள் அமர்ந்திருந்த Banana வடிவ மிதவையும் பயணிக்கும் போதும் எப்போது நடுக்கடலில் குடைசாய்ந்து விழுந்து விடுவோமோ என்ற பயம் வராமல் இல்லை! பயத்தினைப் போக்க உற்சாகக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தோம். ரொம்பவே நன்றாக இருந்தது இந்த Banana Ride!  இப்படி சில நிமிடங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்த எங்களுக்கான சமயம் முடிவுக்கு வர இருந்தது. படகும் கரையை நோக்கித் திரும்ப நாங்கள் அமர்ந்திருந்த Banana-வும் வட்டமடித்துத் திரும்பியது.

 

மிதவைப் பாலம் இருக்கும் இடத்திற்கு அருகே வரும்போது மீண்டும் ஒரு வட்டம் அடித்தார் படகோட்டி. நாங்கள் Banana-வும் திரும்பியது. அந்தச் சமயத்தில் எங்கள் பின்னர் அமர்ந்திருந்த உதவியாளர் எங்களை பிடிகளை விடச் சொன்னார்! நாங்கள் விட்ட அதே சமயத்தில், அவர் ரப்பர் மிதவையைத் திருப்ப நாங்கள் அனைவரும் தண்ணீரில் வீழ்ந்தோம்! கைவிட்டதும் கீழே விழுந்து கடலில் முங்கி மிதந்து எழுந்திருந்தபோது அப்படி ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு! விழுந்து எழுந்து உற்சாகக் குரல் எழுப்பி சிரித்தபடியே எழுந்திருந்தோம்.  ஒரு சிறுமி மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டார்.  ஆனால் இப்படி வேண்டுமென்றே – எங்களிடம் சொல்லிய பிறகு இப்படிச் செய்வார்கள் என்பதை கடலில் கொஞ்சம் தள்ளி குளித்துக் கொண்டிருந்த எங்கள் குழுவில் இருந்த பெண்மணிகள் அறிந்திருக்கவில்லை!  அவர்கள் நாங்கள் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென தண்ணீரில் விழுவதைப் பார்த்தவுடன் அலறி அடித்துக் கொண்டு எழுந்து – எங்களைக் காப்பாற்றும் எண்ணத்துடன் கடல் அலைகளைத் தள்ளிக் கொண்டு எங்களை நோக்கி ஓடி வருகிறார்கள் – அலறியபடியே!

 

நாங்களோ சிரித்துக் கொண்டிருக்கிறோம் – அவர்களுக்கு பயம் விலகவே இல்லை – சில நொடிகளுக்குப் பிறகே அவர்களுக்குப் புரிந்தது எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது! ஆனாலும் கடலில் நடந்து அவர்களும் பாதி தூரம் வந்திருந்தார்கள்.  வேண்டுமென்றே தான் இப்படிச் செய்கிறார்கள், எங்களிடம் சொல்லி இருந்தார்கள் என்பதையும் நாங்கள் சொல்ல, அவர்களும் அவர்களது எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள, அங்கே ஒரே சிரிப்பு அலை – கடல் அலையை விட அதிகமாக இருந்தது எங்கள் சிரிப்பலை! அனைவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்க, எங்கள் குழுவில் ஒருவர் மட்டும் படகோட்டி/உதவியாளருக்கு உரிய கட்டணம் கொடுப்பதற்காக கரையை நோக்கிச் சென்றார்.  படகோட்டியின் உதவியாளர் Banana/படகை மிதவையில் இணைத்து விட்டு நண்பருடன் சென்றார்.  அதற்குப் பிறகும் நாங்கள் கடலில் குளித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தோம்.  கடலை விட்டு விலக மனதே இல்லை.  ஆனாலும் விலகத்தானே வேண்டியிருந்தது.  அதற்குள் சூரியனும் சுட்டெரிக்க ஆரம்பித்திருந்தான்.  கடல் நீர் கூட சூடாக இருந்தது. 

 

காலையில் மிதவை வழி சென்ற எங்கள் குழு, மணல் வழியே நடக்க முடிந்தது – ஏன் என்றால் கடல் நன்கு உள்வாங்கியிருந்தது – கரையை நோக்கி நடந்தோம்.  அங்கே இருந்த சில குழுவினர்களில் சிலர் கடற்கரையில் இருந்த ஒரு குளியலறை வசதி பற்றிச் சொல்லி  எங்களை அங்கே அனுப்பி வைத்தார்கள்.  ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்து அங்கேயே தங்கிய ஒரு குடும்பத்தினர் சிறப்பாக குளியலறை வசதிகளை செய்து வைத்திருந்தார்கள் – ஒருவருக்கு இருபது ரூபாய் கொடுத்தால் குளியலறைக்குச் சென்று நல்ல நீரில் குளித்து உடை மாற்றிக் கொள்ளலாம்!  ஏற்கனவே எங்கள் குழுவினரில் சிலர் அங்கே சென்று இருந்ததால் ஒருவர் ஒருவராக உள்ளே சென்று நல்ல நீரில் குளித்து உடை மாற்றிக் கொள்ள முடிந்தது.  கடலில் குளித்த பிறகு இந்த நல்ல நீர் குளியல் நிச்சயம் தேவையான ஒன்று. இங்கே கடல் நீர் அத்தனை உப்பு கரிக்கவில்லை என்றாலும் நல்ல நீரில் குளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.  அதுவும் இல்லாமல் கடற்கரையிலிருந்து நாங்கள் துறைமுகத்திற்குச் சென்று அங்கிருந்து கப்பலில் பயணிக்க வேண்டியிருந்தது. அதனால் இந்தக் குளியல் மிகவும் தேவையாக இருந்தது. 

 

எல்லோரும் அவரவர் தேர்வு செய்திருந்த Activity முடித்து முன்னரே முடிவு செய்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  குழுவினர் கொண்டு வந்த உடைமைகளைச் சரி பார்த்துக் கொண்ட பிறகு தான் அங்கேயிருந்து அகல வேண்டும்.  நாங்கள் கடலில் இப்படி உற்சாகமாக இருக்க, எங்கள் குழுவினரில் சிலர் கடற்கரைக் கடைகளில் பொருட்களை வாங்கியும், இளநீர் பருகியும் பொழுதைக் கழித்தார்கள்.  நாங்களும் வந்து கொஞ்சம் கொரித்தோம்.  இளநீரும் உண்டு!  அதன் பிறகு என்ன செய்தோம், எங்கள் அடுத்த இலக்கு என்னவாக இருந்தது என்பதை எல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன்.  நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

பின்குறிப்பு: இந்தப் பகுதியில் இணைக்க படங்கள் இல்லை - நான் கடலுக்குள் இருந்ததால் படம் எடுக்கவில்லை! 

21 கருத்துகள்:

  1. அம்மாடி... செம த்ரில்லாக இருந்திருக்கும். ஒவ்வொரு நொடியும்! எவ்வளவு கட்டணம் என்று சொல்லவில்லை நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட் ,
      இனிய காலை வணக்கம்.
      எத்தனை உற்சாகமான ரைட்.
      இப்படி எல்லாம் நம் ஊரில் ஏற்பாடு செய்திருப்பது சுற்றுலாவில் நாமும் சளைத்தவர்கள்
      இல்லை என்று தெரிகிறது.

      பாவம் அந்தப் பெண் மிகவும் பயந்திருக்கிறார்.
      திடீரென்று படகு கவிழ்ந்தால் பயமாகத் தான் இருக்கும்.
      600 ரூபாய்க்கு நல்ல வேடிக்கைதான்.
      வாழ்த்துகள் வெங்கட்.

      நீக்கு
    2. உண்மை தான் ஸ்ரீராம். செம த்ரில்லிங் அனுபவம் அது. 600 ரூபாய் கட்டணம் என எழுதி இருக்கிறேனே! :)

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      உற்சாகமான ரைடு தான். இது போன்று நிறைய வசதிகள் உண்டு. கோவாவில் கூட இந்த பனானா ரைடு உண்டும்மா... அதைப் போலவே ஆற்றில் செல்லும் ராஃப்டிங் வசதிகள் கூட இந்தியாவில் ரிஷிகேஷ், குலூ போன்ற இடங்களிலும் மத்தியப் பிரதேசத்தில் Bபேத்வா ஆற்றிலும் கூட உண்டு.

      கொஞ்சம் தடுமாறித்தான் போனார் அந்தப் பெண். ஆனாலும் நன்றாகவே இருந்தது அந்த அனுபவம்.

      நீக்கு
    4. Water Bike சென்னையிலும் உள்ளது என்றார்கள். உண்மையா? அது குறித்த விபரங்கள் இருந்தால் எழுதுங்க.

      நீக்கு
    5. Water Bike - jet Ski போலவா? சென்னையில் இருப்பது பற்றி எனக்குத் தெரியாது ஜோதிஜி. விசாரிக்கிறேன். தெரிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. ECR பகுதியில் இந்த வசதிகள் இருப்பதாக http://beachadventures.in தளம் தெரிவிக்கிறது. நான் சென்றதில்லை. சென்னை வாசிகள் தெரிந்தால் பதில் சொல்லலாம்.

      நீக்கு
  2. //பயத்தினைப் போக்க உற்சாகக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தோம்//

    ஹா.. ஹா.. உண்மையை உளறி விட்டீர்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறேன் கில்லர்ஜி! அப்படிக் குரல் எழுப்புவதே பயம் இல்லாத மாதிரி காண்பித்துக் கொள்வதற்கும் தானே!

      நீக்கு
  3. ஆஹா செம த்ரில்லிங்தான். இப்போதே போக வேண்டும் போல இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்ரில்லிங் அனுபவம் தான் முரளிதரன். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. சம்பவம் - ஹாஹா....

      வடிவேலு ஜோக் - சம்பவம் அல்ல சரித்திரம் நினைவுக்கு வந்து படுத்துகிறது! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பனானா போட் ரொம்ப அருமையா இருக்கும். எங்களுக்கு நான் ஏறின உடனேயே படங்கள் எடுக்கச் சொல்லி என் கேமரா கொடுத்தேன். அப்புறம் கரையில் இருப்பவர்களை படம் எடுக்கச் சொன்னேன். இல்லைனா நினைவுக்கு படங்கள் இருந்திருக்காது.

    தண்ணீரில் விழும்படியெல்லாம் அவர்கள் செய்யவில்லை.

    இன்னொரு வகை விளையாட்டும் இருந்தது. பெரிய பாய் மாதிரி தண்ணீர் பக்கில் கட்டப்பட்டிருக்கும். அதில் படுத்துக்கொண்டு, அதில் இருக்கும் கயறை ஸ்டிராங்க் ஆகப் பிடித்துக்கொள்ளணும். இப்படி 5-6 பேருக்கு அதில் இடம் இருக்கும். இது தவிர சிறிய சேஃப்டி கட்டுதலும் உண்டு. பைக் வேகமா தண்ணீரில் பாயும்போது காற்றினால் உந்தப்பட்டு இந்தப் பாய், மேலே பறக்க ஆரம்பிக்கும். அதாவது நாம் படுத்துக்கொண்டே தண்ணீரிலிருந்து 20 அடிக்கும் மேலே பறப்போம். நான் அதில் பயணிக்கலை, பயம் காரணமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bபனானா ரைட் நீங்களும் சென்றிருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      பாய் மீது படுத்துக் கொண்டு பைக்கோடு இணைத்து ஒரு சாகசப் பயணம் - ஆஹா... அப்படி ஒரு வசதி அந்தமான் தீவுகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால் சென்றிருப்பேன்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. கவிதை அருமை. பதிவுக்கு பொருத்தம்.
    Bபனானா ரைடு அனுபவம் மிக அருமை.
    கடல்நீர் குளியலுக்கு அப்புறம் நல்நீர் குளியல் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      ஆமாம் கடல்நீர் குளியலுக்குப் பிறகு நல்நீர் குளியல் நல்லது - அவசியமும் கூட.

      நீக்கு
  7. பனானா ரைட் கேட்கும் போதே நன்றாக இருக்கிறது. பயணத்தின் இறுதியில் கடலில் விழுந்தது மனதுக்கு இனிய அனுபவமாக இருந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மிகவும் த்ரில்லிங் அனுபவம் தான் மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. என்ன ஒரு த்ரில்லிங் அனுபவம்! படிக்கும்பொழுதே பரவசமாக இருக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் உற்சாகம் தந்த அனுபவம் தான் அது பானும்மா...

      நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....